தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. 39 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. தேனி தொகுதியில் மட்டும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் தேனி மாவட்ட தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாள ரான மிலானி, எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுந்தர் வழங்கிய தீர்ப்பில், தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவீந் திரநாத்தின் வெற்றி செல்லாது என அதிரடியாக கூறினார். அதோடு மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைத்து கால அவகாசமும் கொடுத்துள்ளார்.
இதனால் ஓ.பி.எஸ்., ஓ.பி.ஆர். உள்பட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் ஆறு பேர் கட்சிக்கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைக் கண்ட ஓ.பி.எஸ்.சோ, “"ஏன்யா? அசிங்கப்படுத்துறீங்க. கோர்ட் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்திருக்கும்போது தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்யக்கூடாது. பொறுத்திருங்கள்'' என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கால தாமதம் ஆனாலும் நீதி வென்றுள்ளதாகக் கூறியிருக்கிறார்.
வழக்குத் தொடர்ந்த மிலானியோ, "கடந்த 2019 ஜூலையில்தான் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந் திருந்தேன். வேட்புமனுத் தாக்கலின்போது முக்கிய ஆவணங்களை மறைத்து சில விவரங்களை தவறாகச் சொல்லியிருக்கிறார். அதுபோல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிபதி கூறியிருக்கிறார்.
ரவீந்திரநாத் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது தனது சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்யவேண்டும். ரவீந்திரநாத் வாணி பேப்ரிக் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் அதன் மூலம் 15 ஆயிரம் பங்குகளில் வந்த லாபத்தை மறைத்துள்ளார். அதுபோல் விஜயகாந்த் டெவலப்பர்ஸ் நிறு வனத்திலிருந்து சம்பளமாக பெற்ற வருமானம், ஜெயம் விஜயம் நிறுவனத்திலிருந்து பெற்ற சம்பளம் ஆகியவற்றையும் மறைத்துள்ளார். தனி நபருக்கு கொடுத்த தொகையில் 15 லட்சம் ரூபாய் வட்டியைத் தெரிவிக்கவில்லை. வேட்பு மனுவில் 1.35 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் 4.16 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாக தவறாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார். இப்படி அசையும் சொத்துக்கள், பங்குகள் மற்றும் வேறு கடன் கொடுத்த வகையில் வட்டி கம்பெனிகளில் இயக்குனராக இருக்கும் சம்பளம் மற்றும் பல முக்கிய விவரங்களை மறைத்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இது முறைகேடான செயல். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஆய்வுசெய்யாமல் ரவீந்திரநாத்துக்கு சாதகமாகச் செயல்பட்டு முறைகேடு செய்திருப்பதால் இந்த வெற்றி செல்லாது.
இந்த தீர்ப்பு சில மாதங்களுக்கு முன்பே வரவேண்டியது. மூன்று முறை சில ஆவணங்கள் இருப்பதாக ரவீந்திரநாத் கூறிவந்ததால் நீதியரசர் தீர்ப்பை ஒத்திவைத்து வந்தார். அப்படி யிருந்தும் ஆவணங்களைக் காட்ட வில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ஆர். தரப்பு உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அப்படி வழக்கு தொடர்ந் தால் நானும் வழக்கு தொடரத் தயாராக இருக்கிறேன். தேனி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத் தில் ஓ.பி.எஸ். மீதும் தேர்தலில் சொத்து விவரங்கள் உட்பட சில ஆவணங்களை மறைத் துள்ளதாக வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இ.பி.எஸ். மீதும் சேலம் மாவட்ட சிறப்பு எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் சொத்து விவரங்கள், ஆவணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு வழக்குமே எப்.ஐ.ஆர். போடப்பட்டு கிரிமினல் வழக்காக நிலுவை யில் இருந்துவருகிறது. இதனுடைய தீர்ப்பும் கூடியவிரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார்.
இதுசம்பந்தமாக தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான தங்க.தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, "கடந்த தேர்தலில் வேட்பு மனு பரிசீலனையின்போதே ரவீந்திரநாத் தாக்கல் செய்த ஆவணங்கள் முறையாக இல்லை. பல சொத்துக்களை மூடி மறைத்திருக்கிறார். சில சொத்துக்களை காட்டவும் இல்லை என்று அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்த மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் முறையிட்டோம். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து ரவீந்திரநாத் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டார். மாவட்ட கலெக்டர் உள்பட தேர்தல் அதிகாரிகள் சிலரும் துணை போயிருப்பது தெரிய வருகிறது. அதனால் அவர்கள் மேலும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணும் போச்சா!