பாலியல் அத்துமீறலால் பாதிக்கப் பட்டு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகமே மாறாத நிலையில் மேலும் ஒரு மாணவி கரூரில் தற்கொலை செய்துகொண்டுள்ளது தமிழகத்தை உலுக்கியுள்ளது..
கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பரணி பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்தார் அந்த மாணவி. கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவுடன் சற்று ஓய்வெடுத்து மீண்டும் படிக்கச் செல்லும் அவர், அன்று வீட்டை விட்டு நீண்டநேரமாக வெளியே வராததால், பக்கத்து வீட்டு பாட்டி சந்தேகமடைந்து வீட்டினுள் சென்று பார்த்து, மாணவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர், ஸ்டிக்கர் விற்பனைக் கடையிலிருந்த மாணவியின் தாய்க்கு தகவல் கொடுத்துள்ளார். பதறியடித்து வந்த மாணவியின் தாய், தனது மகளின் உடலைப் பார்த்து கதறியழுதபடி வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்றுள்ளார்.
காவல்நிலையத்தில் ஆய்வாளர் கண்ணதாசன் புகாரை உடனடியாக வாங்காததோடு, தற்கொலை செய்த மாணவியின் நடவடிக்கை குறித்து தவறாகப் பேசியதோடு, புகார் தர வந்த மாணவியின் உறவினர் களையும் தாக்கியுள்ளார். ஏற்கெனவே மகளின் மரணத்தால் மனமுடைந்து இருந்த அவரை, காவல்நிலையத்தில் இரவெல்லாம் காத்திருக்கச் செய்துள்ளார். மேலும், கரூர் மாணவியின் மரணம் குறித்து ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டியளித்த ஆய்வாளர், கோவை மாணவியின் மரணம் குறித்த காணொலியைக் கண்டு, பாதிக் கப்பட்டவரின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு, மாணவி அப்செட்டானதாகவும், அதனாலேயே தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டது சர்ச்சையானது.
இதுகுறித்த புகார் டி.ஐ.ஜி.க்கு செல்ல, கண்ணதாசன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆய்வாளரின் வரம்புமீறிய செயல்பாடுகள் அவர்மீது பலமான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், ""sexual harresment-ஆல சாகுற கடைசி பொண்ணு நானாத்தான் இருக்கணும், என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன்... மன்னிச்சுருங்க'' என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
பரணி பார்க் மெட்ரிகுலேசன் பள்ளியில் பணியாற்றிய உதவி முதல்வர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானாகவே பணியிலிருந்து விலகிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். அவர்மீது போலீசின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. சக மாணவிகளும் அவர் குறித்த சில தகவல்களை போலீசாருக்குக் கொடுத்துள்ளனர்.
இறந்த மாணவியின் தாய், "அவ பள்ளியில் கெமிஸ்ட்ரி வகுப்புக்குச் செல்வதென்றாலே பயந்து நடுங்குவாள். வீட்டுக்கு வந்ததும் கெமிஸ்ட்ரி புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்துப் போடுவாள். கடைசியா வீடு திரும்புன அன்னிக்கு பஸ்ல அழுதுக்கிட்டே திரும்பினதா சொன்னாங்க. கெமிஸ்ட்ரி சார் மேல எங்களுக்கு சந்தேகம் இருக்கு''’என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் "மாணவியின் இறப்பில் நியாயமான நீதி விசாரணை வேண்டும்' என்று கோரி நவம்பர் 24-ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஒரு பேரணியை நடத்தியுள்ளனர். கரூர் மாணவியின் தற்கொலைக் குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வழக்கில், பரணி பார்க் பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன், குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியேற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்துவந்த சரவணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. சரவணன், நவம்பர் 24-ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பெடுத்துவிட்டு தனது மாமனார் ஊரான திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டிக்கு வந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனடியாக துறையூர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி (பொறுப்பு) உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், "மாணவியின் இறப்புக்குக் காரணம் சரவணன்தான் என போலீசாரிடம் கூறப்போவதாக மிரட்டியதாகவும், இதனால் கலக்கமடைந்த சரவணன், மாணவி விவகாரத்தில் தனக்குத் தொடர்பில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும்' ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் மாணவி பாலியல் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், பரணி பார்க் பள்ளியின் உதவி முதல்வர், கெமிஸ்ட்ரி ஆசிரியர் என வெவ்வேறு பெயர்கள் மாணவியின் தற்கொலைக்குக் காரணமெனக் கூறப்பட்ட நிலையில்... எதிர்பாராதவிதமாக கணித ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக தமிழக போலீசாரை கூறுவதுண்டு. இக்கட்டான வழக்குகளில் சரியான குற்றவாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தும்போதே அது மெய்யாகும். இரண்டு தற்கொலைகள் நடந்துள்ள இந்த வழக்கில், கரூர் போலீஸார் தங்களது திறமையை நிரூபிப்பார்களா?