130 கோடி மக்களின் கனவு நனவாகி இருக்கிறது என்று ஆகஸ்ட் 5ந் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசினார். அந்த நாள்தான், காஷ்மீர் மக்களின் குரல் பலவந்தமாக ஒடுக்கப்பட்டதன் ஓராண்டு நிறைவு நாள்.

kk

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ல், காஷ்மீருக்கு இந்திய அரசமைப்பால் வழங்கப்பட்டிருந்த 370வது பிரிவின்கீழான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு, மாநில அந்தஸ்தையும் பறித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மத்தியில் ஆளும் மோடி அரசு. இதற்கு முந்தைய தினமே, அங்கு ஆயிரக்கணக்கான படைவீரர்கள் குவிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள், தெருவில் நின்று கல் வீசுபவர்களோடு, பதின்ம வயது சிறுவர்களும் பாதுகாப்புப் படை யினரால் வீடுபுகுந்து தூக்கிச் செல்லப்பட்டனர். இணைய வசதி, தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

பத்தடிக்கு ஒரு பாதுகாப்புப் படைவீரர், பார்க்கும் திசையெல்லாம் கம்பியாலான முள்வேலிகள், எப்போதும் மூடியே கிடக்கும் கடைகள். இது தான் காஷ்மீர் மக்களின் கடந்த ஓராண்டின் ஒவ்வொரு நாளும்.

Advertisment

அரசியல் செயல்பாடுகளில் வெற்றிடம்

2019, ஜூன் மாதம் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூபா ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, சட்டமன்ற செயல்பாடு இல்லாமல், டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது ஜம்மு காஷ்மீர். வீட்டுச் சிறை வைக்கப்பட்ட தலைவர்களில் ஃபரூக் அப்துல்லாவும், உமர் அப்துல்லாவும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களும்கூட மாநில அந்தஸ்து கோரும் முழக்கங்களை எழுப்புவதில்லை.

ff

Advertisment

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரக்கோரிய, 600க்கும் மேற்பட்ட ஆட்கொணர்வு மனுக்களும் கிடப்பில் உள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களின் முழு பட்டி யலை அரசு இதுவரை வெளியிடவில்லை. மெகபூபாவின் பிடிபி கட்சியில் இருந்து பிரிந்த அல்தாஃப் புகாரி, அப்னா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்திருக்கும் அவரின் நோக்கம் காஷ்மீரிகளுக்குப் புரிந்திருக்கிறது. காஷ்மீரில் அரசியல் செயல்பாடே இல்லாத நிலையில், ஜனநாயகம் மூச்சுத் திணறுகிறது.

தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா?

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தான் வச மிருக்கும் ஆசாத் காஷ்மீரையும், கில்ஜிட்- பல்திஸ் தானையும், சீனா வசமிருக்கும் அக்சாய் ஷின்னையும் மீட்பதற்காக என் உயிரையே கொடுக்கத் தயாராக இருப்பதாக பேசினார். தீவிரவாதத்தை ஒழிப்பதற் காகவே இத்தகைய அதிரடி முடிவு எடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.

தெற்காசிய தீவிரவாத போர்ட்டல் சொல்லும் தகவல்படி, 2012ல் 19 சாமான்யர்களும், 18 பாதுகாப்புப் படையினரும், 84 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டது தான், இந்த 10 ஆண்டுகளில் மிகக்குறைந்த க்ரைம் ரேட். அதேசமயம், 2020 தொடங்கி 8 மாதங்களில் மட்டும் 17 சாமான்யர்கள், 34 பாதுகாப்புப் படையினர் மற்றும் 154 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம்பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எல்லை விவகாரத்திலும் இந்தியா கோட்டை விடுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினருடான மோதலில் 20 வீரர்களைப் பறிகொடுத்தது, சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பில் இருப்பதும், குட்டி நாடான நேபாளத்தின் சரமாரியான வார்த்தைத் தாக்குதல்களும் இந்தியாவுக்கு புதிய நெருக்கடியாகியுள்ளன. இந்தியா-சீனா-பாகிஸ்தான் என மூன்று அணுஆயுத சக்திகள், எல்லைத் தகராறில் முட்டிக் கொண்டிருக்கும் வேளையில், கிளர்ச்சிக் குழுக்களில் சேருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

லடாக்கின் பரிதாப நிலை!

dd

""கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் காஷ்மீரின் அரசியல் கட்சிகள் லடாக்கைப் புறக்கணித்துவிட்டன. லடாக்கை மீட்டுருவாக்கம் செய்ய, அதனை யூனியன் பிரதேசமாக அறிவிப்பதே தீர்வு''’என்று லடாக் எம்.பியான ஜம்யாங் செரிக் நம்கியால் நாடாளுமன்றத்தில் பேசியது வைரலானது. யூனியன் பிரதேசமான பின்பு, மத்திய அரசே பல நிலைகளில் லடாக்கைப் புறக்கணித்திருப்பது தெரிகிறது. லடாக் இளைஞர்களின் நீண்டகால கோரிக்கையான அரசியலமைப்புப் பாதுகாப்புக்கு எதிராகவே பா.ஜ.க.வினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். லடாக்கிற்கான வேலைவாய்ப்புக் கொள்கையை உருவாக்கவில்லை. லடாக் அரசுப் பணிக்கான காலிப்பணியிடங்களையும் அறிவிக்கவில்லை.

மாறாக, ஜம்மு காஷ்மீரில் இருந்து அதிகாரிகளைக் கூட்டிவந்து பணிகளை மேற்கொள்கின்றனர். அதேபோல், காஷ்மீரின் அரசு மற்றும் காவல்துறை பணித்தேர்வுக்காக பல காலமாக உழைப்பைக் கொட்டிய லடாக் இளைஞர்களின் கனவு, கண்ணெதிரே கானல் நீராகக் கரைந்து கொண்டிருக்கிறது.

நெருக்கடி நிலையில் ஊடகங்கள்!

dd

""காஷ்மீரில் ஊடகங்கள் வெளியிடும் எந்தவொரு செய்தியும், தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியாகின்றன. இதற்காகவே அங்கு ‘புதிய ஊடகக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப் பட்டு, பல்வேறு கெடுபிடிகள் கடைபிடிக்கப்படு கின்றன. “எந்த மட்டத்தில் இருக்கிற அதிகாரியாகினும், மூத்த ஊடகவியலாளர்களின் கேள்விகளை மதிப்பதில்லை., ஜனநாயகத்தின் அடையாளமான ஊடகத்துறை, காஷ்மீரில் தன்பங்கைச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது'' என்கிறார் காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளர் அனுராதா பாசின். இதுபோக, ஒரு சமூகவலைதளப் பதிவிற்காக, காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் மஸ்ரத் ஜேரா மீது, அடக்குமுறைச் சட்டமான ‘உபா’ பாய்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

அசாம் மாநிலத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் மூலம், லட்சக்கணக்கான இந்தியர் களை அகதிகளாக்கியதைப் போலவே, காஷ்மீரிலும் குடியுரிமைச் சான்றிதழை அறிமுகம் செய்திருக் கிறது மத்திய அரசு. இதன்படி, கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், தாங்கள் காஷ்மீரிகள் என்பதை நிரூபிக்க ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு, குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதற் காக அல்லாடுகிறார்கள் காஷ்மீரிகள். அதேபோல், மத்திய அரசின் அறிவிப்பின்மூலம் சொந்த மண்ணிற்குத் திரும்பி, எஞ்சிய காலத்தைக் கழிக்கலாம் என்ற காஷ்மீர் பண்டிட்டுகளின் எண்ணமும் பொய்த்துப் போயிருப்பதாக பண்டிட் சமுதாயத்தினரை வழிநடத்தும் பனுன் காஷ்மீர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

""நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ நேரத்தில் அலைக்கழிக்கப்பட்டதும், போதிய மருத்துவ வசதிகள் இல்லையென குற்றம்சாட்டிய தற்காக மருத்துவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதும் காஷ்மீரின் அன்றாட வாழ்வின் அவலத்தை அம்பலப்படுத்துகின்றன. பள்ளி- கல்லூரிகள் திறந்தாலும் படிக்கப் போக முடியாத நிலை. கடைகளைத் திறந்தால் எப்போது மூடச் சொல்வார்கள் எனத் தெரியாது. மனதிற்கு நெருக்கமான ஒருவருடன் நெருக்கடியான கட்டத்தில்கூட பேசமுடியாது. ஈராக்கிற்கு எதிரான போரில் அமெரிக்காகூட இத்தகைய ஒடுக்குமுறை களைக் கையாண்டதில்லை'' என்று அரசின் காஷ்மீர் மீதான போக்கினை விமர்சிக்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

காஷ்மீரில் பிற மாநிலத்தவர் சொத்து வாங்குவதற்கு தடை விதித்திருந்த 35ஏ பிரிவை ரத்து செய்த மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக் கையை ஆதரித்தவர்கள், அங்கே ஓரடி நிலமாவது வாங்கிவிட வேண்டுமென்ற கூக்குரலிட்டனர். தமிழக பா.ஜ.கவினரும் இதில் அடக்கம். ஆனால் கடந்த ஓராண்டில், காஷ்மீரி அல்லாதவர்கள் அங்கு செல்வதே கத்திமேல் நடப்பதுபோல் இருக்கிறது. நிலம் வாங்குவது இருக்கட்டும், சுற்றுலாப் பயணியாகக்கூட போக முடியாத அளவுக்கான மோசமான சூழல் நிலவுகிறது. ஆப்பிள் விளைச்சல் உள்பட விவசாயமும் செழிப்பாக இல்லை. காஷ்மீர் மோசமான வருவாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகும், காஷ்மீரில் முதலீடு செய்வதென்பதை விஷப்பரீட்சையாகவே வர்த்தகர்கள் உணர்கின்றனர்.

தன்னாட்சி, கூட்டாட்சி என தமிழகத்தைப் போலவே, சுயநிர்ணய முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர். அதன் கையிலிருந்த அதிகாரத்தை பிடுங்கிக்கொண்டு, மக்களிடம் குறைந்தபட்ச நிபந்தனைகளின் அடிப்படையில்கூட, கருத்துக்கேட்காமல் இப்படியொரு நடவடிக்கை மேற்கொண்டதோடு, அவர்களின் குரலை அடக்கியே வைத்திருப்பதால், மத்திய அரசின் மீதான அவர்களின் கோபமும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வரையறையை இந்தியா தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், தனியொரு இந்தியப் பிரஜையின் விருப்பங்களுக்கும் மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். அதற்கு முதலில் காஷ்மீரிடம் பறித்த உரிமைகளை காஷ்மீரிகளுக்கே திருப்பித் தர வேண்டும் என்கிறார்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

- ச.ப.மதிவாணன்