"ஆளுநர்கள் மத்திய அரசின் ஊது குழல்களாக இருக்கக்கூடாது. அவர்கள் மத்திய அரசின் ஊழியர்களோ, ஏஜெண்டுகளோ இல்லை. அல்லது ஒரு அரசியல் குழுவைச் சேர்ந்த வர்களும் இல்லை.'
-1977 முதல் பல்வேறு காலகட்டங்களில், அரசியல் சட் டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் கவர்னர்களின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/onenation-onelaw.jpg)
ஆனால் இவை எதுவும் ஆளுநர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. தங்களை நியமித்தவர்களுக்கு சாதகமாகவே அவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார் கள். அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்வுகள் ஒரு ஆளுநர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான உதா ரணமாக அமைந்தது. அருணாச்சல பிரதேசத்தில் ஆளுநர் ஜே.பி.ராஜ்கோவா வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா, மதன் பி லோகுர், பி.சி.கோஷ், என்.வி.ரமணா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.
""அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளாகாமல் ஆளுநர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும் பொத்திக்கொள்ள வேண்டும். அரசியல் புதர்களுக்குள் குதிக்கும் ஆசையை அவர்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர்களே அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று சொல்லும்போது, சபாநாயகர்கள் எப்படி இருக்க வேண்டும்? அரசியல் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கு இணையான கண்ணியமிக்க பதவியை வகிக்கும் சபாநாயகர்கள் அதற்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்களா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/onenation-onelaw1.jpg)
நடுநிலையின் மறுவடிவமாக இருந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நபராக இருக்க வேண்டியவர் சபாநாயகர். எனவேதான் அவர் தனித்துவமான பொறுப்பை சுமக்கிறார். ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்றால், வாக்கெடுப்பின்போது எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவர்களில் அதிகப்படியாக ஒரு வாக்கு இருந்தால்கூட அரசு கவிழ்ந்துவிடும். ஆனால், ஒரு சபாநாயகரை நீக்க வேண்டும் என்றால், அவையின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேலான உறுப்பினர் கள் அவருக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும். இதிலிருந்தே அந்தப் பதவியின் முக்கியத்துவம் புரியும்.
""ஓர் அவையின் பிரதிநிதியாக சபாநாயகர் இருக்கிறார். அவையின் கண்ணியத்தையும். சுதந்திரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஏனென்றால், அந்த அவை நாட்டின் அல்லது மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, ஒருவகையில் சபாநாயகர் என்பவர் நாட்டின் சுதந்திரத்தின் அடையாளமாக இருக்கிறார். ஆகவே, இது ஒரு கவுரவமிக்க பதவி. இந்தப் பதவியை தனித்தன்மை மிக்க, நடுநிலையுள்ள நபர்கள் மட்டுமே எப்போதும் வகிக்க வேண் டும்''’’ என்று ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார்.
ஆனால், முதன்முதலில் சபாநாயகரின் அதிகாரத்தை பயன்படுத்தி, பேரவை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து வரலாற்றில் இடம் பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த பி.எச்.பாண்டியன் தான். 10 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்டநகலை எரித்ததற்காக தகுதிநீக்கம் செய்தார். பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக அறிவித்தார். ஆனால், ஆனந்த விகடன் பத்திரிகையில் ஒரு
நகைச்சுவைச் சித்திரம் வெளியிட்டதற்காக அதன் ஆசிரியர் பாலசுப்பிர மணியனை சிறைக்கு அனுப்பினார். அவருடைய தீர்ப்பை எதிர்த்து பாலசுப்பிரமணியன் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை வாங்க மறுத்த பாண்டியன், நீதிமன்றத்தை விட சட்டமன்றமே பெரிது என்றார். இதற்கிடையே பிரச்சினை முற்றுவதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பாலசுப்பிரமணியனை விடுதலை செய்தார். அந்த வழக்கில் பாலசுப்பிரமணியனுக்கு இழப்பீடாக தமிழக அரசு 1000 ரூபாய் வழங்கியது குறிப் பிடத்தக்கது.
அதாவது, முதன்முதலில் சட்டமன்றத்தை நீதிமன்றம்வரை இழுத்தவர் பாண்டியன். அதன்பிறகுதான் ஆளுங்கட்சிக்கு எப்போதெல்லாம் உறுப்பினர்களால் ஆபத்தோ, அப்போதெல்லாம் உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வதும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் சபா நாயகருக்கு எதிராக நீதி மன்றம் செல்வதும் இந்தியா முழுவதும் வாடிக்கையானது.
1992 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில சபாநாயகர் போரோபாபு சிங், மணிலால் என்ற எம்.எல்.ஏ.வின் பதவியை பறித்தார். இந்த பதவிப்பறிப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், உத்தரவை ஏற்க சபா நாயகர் மறுத்தார். இதை யடுத்து அவரை நீதிமன்ற அவ மதிப்பிற்காக ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதையும் அவர் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவரை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
""ஒருவர் சபாநாயகராக இருப்பதாலேயே அவர் சட் டத்திற்கு மேற்பட்டவர் என்று விட்டுவிட முடியாது. சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது''’என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனாலும், இதுவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.
மாநில ஆளுங்கட்சியானது, மத்திய அரசுக்கு எதிரானதாக இருந்தால் ஒரு மாதிரியாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்தால் ஒரு மாதிரியாகவும் தீர்ப்பளிப்பது நீதிமன்றங்களுக்கே வாடிக்கையாகிவிட்டது. சாமான்யனின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அவனுடைய நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்திருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அரசியல் சட்டத்தின் 10ஆவது அட்டவணைப்படி, பேரவையின் தூய்மையையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காக உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய சபா நாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சியின் பெரும்பான்மை ஆதரவை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களையோ, ஆளுங்கட்சி அதிருப்தி உறுப்பினர்களையோ தகுதிநீக்கம் செய்வதற்காக அந்த அதிகாரத்தை சபாநாயகர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில சபாநாயகர்களை உச்சநீதிமன்ற நீதிபதி கண்டித்துள்ளார்.
அதிலும், தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, அருணாச்சல பிரதேச சபாநாயகர், எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்று குறைகூறி யுள்ளது.
இத்தகைய நிலையில் புதுச்சேரி யில் சபாநாயகரால் பதவிப்பிரமாணம் செய்யப்படாத, துணை நிலை ஆளுநரால் தன்னிச்சைப்படி நியமிக்கப்பட்டு, அவராகவே பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விரைந்து தீர்ப்பளித்த நிகழ்வு நடைபெற்றது.
அதேசமயம், கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்காகவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரிதான் என்றும் அதே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஒரு தீர்ப்பை அளித்தார்.
அதாவது புதுவை சபாநாயகரின் முடிவில் தலையிட்ட இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்றார்.
சபாநாயகர்களின் முடிவுகள் அவர்கள் சார்ந்த கட்சிக்கே சாதகமாக இருப்பதை உணர்ந்த நீதிமன்றங்கள் என்ன செய்வது என்றே முடி வெடுக்க முடியாத குழப்பமான நிலையில்தான், உச்சநீதிமன்றம் இதற்கொரு தீர்வை முன் மொழிந்திருக்கிறது.
மணிப்பூர் மாநில வனத்துறை அமைச்சராக இருப்பவர் சியாம் குமார். இவர் காங்கிரஸ் சார் பில் போட்டியிட்டு, பா.ஜ.க.வில் சேர்ந்து அமைச்சரானவர். கட்சித் தாவியதால் இவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தும், அதன்மீது அவர் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தினார். எனவே, காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த உச்சநீதி மன்றம், 4 வாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை பார்த்த தி.மு.க., தமிழகத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்தும், சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்படாத துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் முடிவெடுப்பது சபாநாயகரின் விருப்பம் என்று தீர்ப்பளித்தது. அதாவது, தகுதிநீக்கம் இனி சாத்தியமில்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.
மணிப்பூர் சபாநாயகரும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில்தான் நடுவர்மன்றம் அமைக்கும் யோசனையை முன்வைத்திருக்கிறது.
அதாவது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்கிற சபாநாயகரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவ ராகவே நடந்துகொள்வதால், உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க ஒரு நடுவர்மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
ஒரே தேசம், ஒரே சட்டம் என்கிறவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு போக்கு வெளிப்படுகிறது.
-ஆதனூர் சோழன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02-18/onenation-onelaw-t.jpg)