தமிழக அரசின் சத்துணவுத் திட்டம்தான் கிராமப்புற மாணவர்களின் பசி போக்கி வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு மாணவர்கள்வரை மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், பத்தாம் வகுப்பு முடித்து, 11, 12-ம் வகுப்பில் சேரும்போது சத்துணவில்லாமல் பட்டினி கிடக்கும் சூழலுக்கு பலரும் தள்ளப்படும் சோகம் நிகழ்கிறது. 11, 12-ம் வகுப்பில் படிக்கும்போதுதான் நீட் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் பசியோடிருக்கும்போது அது நீட் தேர்வுக்கான பயிற்சியையும் பாதிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பத்தாண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் அமெரிக்காவில் உள்ள தமிழக இளைஞர்கள் இணைந்து, "ஒரு நாளைக்கு ஒரு டாலர்'’என்ற திட்டத்தின் மூலம் அந்த குழந்தைகளுக்கு காலையில் சத்தான கூழ் வழங்கும் திட்டத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுகந்தி மூலம் தொடங்கினார்கள். ஆனால் அத்திட்டம் கொஞ்ச காலத்திலேயே முடங்கிப் போனது.
அதேபோல, கீரமங்கலம், சேந்தன்குடி ஆகிய ஊர்களிலுள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கான சிறப்பு மாலைநேர வகுப்புகள் நடத்தும்போது அந்த மாணவர்களுக்கு மயக்கம், சோர்வு ஏற்படுவதைக் கண்ட ஆசிரியர்கள், ஒவ்வொரு நாளும் கொண்டக்கடலை, பயறு உள்ளிட்ட உணவைக் கொடுத்து வருகின்றனர். பல வருடங்களாக இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
ப்ளஸ் 2 மாணவர்களுக்கு அரசு வழங்கும் மதிய உணவு கிடைத்தால் ஒவ்வொரு ஏழை மாணவனும் மகிழ்ச்சியடைவான் என்கிறார்கள். அண்டக்குளம் பள்ளி மாணவன் அபினேஷ் கூறுகையில், "தொலைவிலுள்ள கிராமங்களிலிருந்து ஒற்றைப் பேருந்தை நம்பி காலை 7 மணிக்கே கொஞ்சம் பழைய சோத்தைத் தின்னுட்டு பஸ்ல கூட்டத்துக்குள்ள சிக்கி நசுங்கி பள்ளிக்கூடத்துக்குப் போனால் பசி மயக்கத்துல ஆசிரியர் சொல்றது அரைகுறையாகத்தான் புரியும். மத்தியானத்துக்குப் பிறகு அதுவும் புரியாது. பசி வயித்தை கிள்ளும்போது படிப்பு எப்படி ஏறும்ண்ணே. பல பேர் பிரேயர்லயே மயக்கம் போட்டு விழுவாங்க. பொண்ணுங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. என்ன செய்றது, 2 வருசத்தையும் பசியோட பல்லைக் கடிச்சுக்கிட்டு ஓட்ட வேண்டியிருக்குதுணே'' என்றான் பரிதாபமாக.
புதுக்கோட்டை மாடல் பள்ளி மாணவன் விக்னேஸ்வரன், "ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவு போட்டால் பசியில்லாம படிப்போம். இந்த வயசு தான் மனிதன் வளர்ச்சியடையும் வயது. இப்பதான் சத்தான உணவுகள் சாப்பிடணும். ஆனால் எங்களுக்கு பசியைப் போக்க சோறு கூட கிடைக்கலயே என்ன செய்றது. முதலமைச்சர் அய்யா தான் எங்க பசியை போக்க நடவடிக்கை எடுக்கணும்'' என்றான்.
கந்தர்வகோட்டை அரசுப் பள்ளி மாணவன் ஜனார்த்தனன், "10, 15 கி.மீ. தூரத்திலிருக்கும் கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள், காலை 8 மணிக்கே சாப்பிட்டோ சாப்பிடாமலோ வந்துடுவாங்க. பசியோடவே நாள் முழுவதும் இருப்பாங்க. முதல்ல ஒரு மாணவனுடைய பசியை போக்கிட்டாலே அவன் நல்லா படிப்பான் சார். அதனால மதிய உணவு கொடுத்தால் நல்லா இருக்கும்'' என்றான்.
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அரவிந்தன், "நான் ரொம்ப தூரத்திலிருந்து பள்ளிக்கூடம் வருகிறேன். காலையிலேயும் சாப்பிட முடியாது. மதியமும் சுத்தமா சோறு கிடைக்காது. பசியோட எப்படிண்ணா படிக்க முடியும்? பல மாணவர்கள் பசிக்காகவே பள்ளிப்படிப்பை முடிக்காமல் கூலி வேலைக்குப் போறாங்க. இப்ப ஒவ்வொரு மாணவனாக படிப்பை பாதியில விடுவதை நிறுத்த மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு முக்கியம்'' என்றார்.
கந்தர்வகோட்டை அரசுப்பள்ளி ஆசிரியர் ஆ.மணிகண்டன், "மதிய உணவுத் திட்டம் தொடங்கிய பிறகே கிராமப்புற ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினார்கள் என்பது வரலாறு. இதை இந்தியாவே பாராட்டியது. அதன்பிறகு அத்திட்டம் விரிவு செய்யப்பட்டது. எனினும் 10-ம் வகுப்பு என்ற எல்லைக்குள் நிறுத்தப்பட்டதால் அதற்குமேல் படிக்கும் மாணவர்கள் பசி, பட்டினியோடு பள்ளி வகுப்பறையில் சோர்வாக அமர்ந் திருக்கிறார்கள்.. அப்போது எந்தப் பாடம் நடத்தினாலும் புரியாது. பள்ளியில் எஞ்சிய சோற்றை ஒரு சில மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கச் சொல்கிறோம். அதுவும் சில மாணவர்களுக்குத்தான் கிடைக்கிறது. சில மாணவர்கள், தங்கள் அண்ணன் பசியோடு இருப்பான் என்று மதிய உணவு வாங்கி அண்ணனுக்கும் கொடுத்துச் சாப்பிடும் பரிதாபமான நிலையையும் பார்த்திருக்கிறோம். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவரும்படி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வைக்கும் கோரிக்கையை ஏற்று, கலைஞர் பெயரில் விரிவாக சத்துணவுத் திட்டத்தை செயல் படுத்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.