Skip to main content

அடுத்த கட்டம் -பழ.கருப்பையா (78)

(78) திராவிடக் குழந்தையைச் சாக விட முடியாதே

டந்த ஐம்பதாண்டு காலத்தில் ஊழல் குறித்து ஏராளமாகப் பேசப்பட்டுவிட்டது. அதன் காரணமாகவே பலமுறை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இராசீவ் காந்தி பீரங்கி வாங்கியதில் ஊழல் செய்துவிட்டார் என்பது மிகப்பெரிய அளவுக்கு மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. இராசீவின் அரசில் அமைச்சராக இருந்த வி.பி.சிங் அதை வெளிக்கொண்டு வந்தார்.

இந்தியாவுக்கு இராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல், இந்திய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்பது பெரிய அளவில் எடுத்து மொழியப்பட்டது. வாக்குச்சாவடிகள் தோறும் பீரங்கி வண்டிகள் போல் பொம்மை வடிவில் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டன.

அந்தத் தேர்தலில் இராசீவ் காந்தி தோற்கடிக்கப்பட்டார். அந்த ஊழல் அவ்வளவு பெரிய அளவுக்கு எடுத்துச் செல்லப்பட முடிந்ததற்குக் காரணம் அதை வெளிக்கொண்டு வந்த வி.பி.சிங் நேர்மையின் வடிவம். அரச குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்.

அந்தத் தேர்தலில் வி.பி.சிங்கோடு தி.மு.க.வும் கூட்டணி அமைத்திருந்தது. அதன் பயனாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று, தமிழகத்திற்கான திட்டங்களில் முனைப்பு காட்டியது. இராசீவ் காந்தி ஊழல் என்று தி.மு.க.வா சொல்லுகிறது என்று மக்கள் பார்க்கவில்லை; சொல்வது வி.பி.சிங் என்றுதான் பார்த்தார்கள். நேரிய மனிதனோடு இணைந்து நின்ற தி.மு.க.வும் பயன்பெற்றது.

சூலியசு சீசர் குடியாட்சி முறையை, செனட் (Senate) வழியாக ஆளவும் சட்டம் இயற்றவுமான முறையை ஒழித்துக் கட்டிவிட்டு வல்லாட்சி முறையை, தனி ஒருவனால் ஆளப்படும் முறையை உருவாக்க முயல்கிறான். அதுவரையிலும் சூலியசு சீசரின் வலது கையாகத் திகழ்ந்த புரூட்டசு போர்க்கொடி தூக்குகிறான்; தன்னை ஒத்த கருத்துடையவர்களைத் திரட்டிக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திலேயே சீசரைக் கொன்றுவிடுகிறான்.

புரூட்டசு கொள்கையாளன்; நேரியன். அவனுடைய தலைமைதான் சீசரை வீழ்த்த முடியும்; வீழ்த்தியது. அவனோடு இந்தத் திருப்பணியில் பங்குகொண்ட கேசியசு சொந்த நோக்கத்திற்காகப் புரூட்டசோடு இணைந்தவன்.

அதுபோன்று வி.பி.சிங்கின் ஊழல் ஒழிப்பு இயக்கமும் தேர்தல் என்பது ஏறத்தாழ ஒரு போர்! ஒரு பெரிய அரக்கனைப் போரில் வீழ்த்த எண்ணும்போது, அதில் பல தனி நோக்கங்களைக் கொண்டவர்களும் இணைவார்கள்; பயன்பெறுவார்கள்.
ff
அன்று காங்கிரசுக்கு எதிராக ஒரு வலிமையுள்ள கட்சி எதிர்த்தரப்பில் இல்லை. ஆகவே காலத்தின் தேவை அதற்குள் இருந்தே வி.பி.சிங்கை வெளிப்பட வைத்தது.

அதுபோல் இந்திராகாந்தி தன்னுடைய ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்ட நிலையில்... நெருக்கடி நிலையை (Emergency) அறிவித்து, நாட்டை ஒற்றை ஆட்சி முறைக்கு வழிநடத்திய போது, ஒதுங்கியிருந்த செயப்பிரகாசு நாராயண னை காலம் இழுத்து, அவர்மூலம் போர் அறி விக்கப்பெற்று, இந்திராவின் மகுடம் பறிக்கப்பட வில்லையா?

அதுபோல் மன்மோகன்சிங்கின் ஆட்சிக்கெதி ரான போர் முழக்கமும் ஊழலுக்கு எதிரானதுதான்.

மிக நேரிய தலைமையமைச்சர் மன் மோகன்சிங். 1990-ல் இந்தியப் பொருளாதாரப் போக்கு மாற்றமுற்றதற்கு அவர்தான் காரணம்.

1989-ல் சோசலிசத்தை தாங்கிநின்ற சோவியத்நாடு வீழ்ச்சியுற்றது. அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக்கப்பட்டது. அதன் காரணமாக, இறுக்கிக் கட்டி வைக்கப் பட்டிருந்த கயிற்றின் சுருக்கு உருவப்பட்டு விட்டது. சோவியத் நாடு சிதறிச் சின்னாபின்ன மாகிவிட்டது. அதனுடைய மாநிலங்களெல்லாம் விடுதலை பெற்ற தனி நாடுகளாகிவிட்டன.

வலிமையான பொதுவுடைமை நாடுகளாக சோவியத் நாட்டின் "குடை நிழலில் இருந்து குஞ்சரம் ஊர்ந்த' கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சந்தைப் பொருளாதாரத்திற்கு (Market Economy) மாறிவிட்டன.

வடகொரியா "சோசலிசத்தின் பேரால்' வம்சாவளி ஆட்சி நடத்துகிற ஒரு வீணாய்ப் போன நாடு.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே சோசலிசத்திற்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பிவிட்டு, "முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு' மாற்றி விட்ட சீனாவின் பிதாமகன் டெங் சியோ பிங். ஆனால் முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஏற்றது என்பது சீனாவின் கருத்து.

மா சேதுங் புரட்சியைக் கொண்டுவந்தார்; "டெங் சியா பிங்'தான் வறட்சியைப் போக்கியவர் என்று சீனா கொண்டாடுகிறது.

இவை எல்லாம் இந்தியாவைப் பதப்படுத்தி வைத்திருந்தன. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள உரிய நேரத்தில் காலடி எடுத்து வைத்தவர் மன்மோகன்சிங்.

இந்தியாவுக்கு நம்முடைய சென்னை "ஆவடியில் சோசலிசத்தை' கொண்டுவந்தவர் நேரு.

"இந்தியா ஒரு சோசலிச நாடு' என்று அரசியல் சாசனத்தில் எழுதி வைத்தவர் இந்திரா.

எந்த சோசலிசத்தை இராசாசி இறுதி மூச்சுள்ளவரை எதிர்த்தாரோ, அந்த காங்கிரசின் சோசலிசத்தைக் கைவிட்டு, இராசாசியின் சந்தைப் பொருளாதாரக் கொள்கையைக் காங்கிரசு ஆட்சியில் அரங்கேற்றியவர் மன்மோகன் என்று மோடி சொல்வது உண்மைதான்.

ஆனால் இந்திய வரலாற்றில் மன்மோகன்சிங் ஒரு திருப்பம் என்பதை யார் மறுக்க முடியும்? அவர் இந்தியாவின் டெங் சியா பிங். ஆனால் மன்மோகன் நீங்கிய அவருடைய அமைச்சரவை யின் ஊழல்தான் காங்கிரசை வீழ்த்திவிட்டது. ஆளுமை இல்லாத தலைமையமைச்சர் அவர்.

ஊழலை ஒழிக்க நினைத்த இந்தியா, பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் வைத்திருந்த காங்கிரசை கீழிறக்கி, அந்தச் சமயத்தில் மாற்றாகத் திகழ்ந்த பாரதிய சனதா கட்சியை ஆட்சிப் பீடத்தில் ஏற்றிவிட்டது. பொறுக்க முடியாத நிலை ஏற்படும்போது, இத்தகைய விபத்துகள் நேரிட்டுவிடும்.

எப்போதும் இறக்கப்பட வேண்டியது யாரை என்றுதான் மக்கள் சிந்திப்பார்கள். அடுத்து இருக்கின்றவன் தானாக ஏறிவிடுவான்.

விளைவு பிளவு அரசியல் (உண்ஸ்ண்ள்ண்ஸ்ங் டர்ப்ண்ற்ண்ஸ்ரீள்) அரியணையில் அமர்ந்துவிட்டது.

ஒரு முறைக்குப் பிறகு, இரண்டாவது முறை கருநாடகம் நீங்கிய திராவிட நாடு, முற்றாக மோடிக்கு எதிராக நின்றது. தமிழ்நாட்டில் ஒருவர் நீங்கலாக எல்லாரும் வெற்றி பெற்றதற்கு அதுதான் காரணம். எதிரணியில் ஒரு தந்திக் கம்பத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தால் அதுவும் வெற்றிபெற்றிருக்கும். தந்திக் கம்பம் போய் பாராளுமன்றத்தில் என்ன பேசும் என்பது வேறு கேள்வி. இப்போதுள்ளவர்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்?

தமிழ்நாட்டில் மோடி நுழைந்துவிடுவாரோ என்னும் அச்சத்திற்குக் காரணம், மேற்குவங்கத்தில் இருபத்தி மூன்று ஆண்டுகள் நாடாண்ட பொதுவுடமைக் கட்சியை இருக்குமிடம் தெரியாமல் செய்துவிட்டு, மேற்குவங்கத்தின் மாற்றுக் கட்சியாக பாரதிய சனதா உருவாகி விடவில்லையா?

அடிமைப்பட்டுக் கிடக்கிற அ.இ. அ.தி.மு.க.வை அகற்றிவிட்டு, அந்த இடத்திற்கு பா.ச.க. விரைவது எதிர்பார்க்கக்கூடியதுதானே. டில்லியின் அதிகாரச் சவுக்கு எதற்கு இருக்கிறது? மாற்றாக வந்துவிட்டால், ஐம்பதாண்டு அதிகார அரசியல் (Power Politics) காரணமாகப் பொலபொலத்துப் போயிருக்கும் இன்னொரு திராவிடக் கட்சியையும் அகற்றுவது அரிதா என்ன?

அழுக்குக் கழுவப்படும்போது, அழுக்கு நீரோடு பிள்ளையையும் சேர்த்து வீசிவிடக் கூடாதே!

தமிழ்மொழியின் மேன்மைக்காகவும், தமிழ் இனத்தின் மேம்பாட்டுக்காகவும் தோன்றியது இந்தத் திராவிட இயக்கம்.

ஊழல் புற்று அரிக்கிறது;

திராவிடக் குழந்தையைச் சாக விட முடியாதே!

(தொடரும்) 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்