(99) கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பார் உண்டோ?
(சென்ற இதழ் தொடர்ச்சி...)
அண்ணா, பெரியாரின் தலைமை இடத்தை வெற்றிடமாக்கி வைத்திருந்ததுபோல, சசிகலா வரும்வரை அவர் இருந்த இடம் வெற்றிடமாக இருக்கும் என்று விசுவாசம் பாராட்டக்கூடியவர்தான் எடப்பாடி. குனிந்து வளைந்து கும்பிடு போடுவது அவருக்கு ஒன்றும் புதிதல்லவே.
ஆனால் முதல்வர் பதவியில் நிலைநிற்பதற்குச் சசிகலா அதில் இருத்தி வைத்தது மட்டுமே போதுமான தில்லையே. அதிலிருந்து ஓ.பன்னீர்செல் வத்தாலோ, புதிதாக முளைத்த தினகரனாலோ நெம்பப் பட்டு விடாமல் இருப்பதற்கு யாருடைய துணையைப் பெற வேண்டும் என்பதற்கான கெட்டிக்காரத்தனமும் வேண்டுமே.
வளைந்து வணங்கிய செயலலிதா மறைந்துவிட்டார்; வளைந்து வணங்கத் தயாராக இருந்த நிலையில், சசிகலா சிறையில் முடக்கப்பட்டுவிட்டார். இப்போது வளைந்து வணங்க புதிய மூர்த்தம் தேவைப்படுகிறது. இது நிலைபேற்றுக்கான போராட்டம் (struggle for survival) அல்லவா?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps_125.jpg)
அந்த இடத்தில் மோடியை நிறுத்தி, தில்லிக்கு போய் அங்கப்பிரதட்சணம் செய்து, வலிய துணையைப் பெற்று, ஓ.பன்னீர் செல்வத்தை உள்ளடக்கிக் கொண்டு விட்டார். இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று விட்டார். எடப்பாடியின் கட்சியே உண்மையான அ.தி.மு.க. என்னும் நிலையை அடைந்துவிட்டார். இயற்கையாக ஏற்கனவே மந்திரியாக இருந்து சேர்த்த பணமும், இப்போதைய முதல்வர் அதிகாரமும் மோடியின் துணையும் நிலைபெறப் போதுமானவை.
அந்த வகையில் மூன்றாண்டுகள் எளிய மனிதரான எடப்பாடி கொதிக்கும் முதல்வர் பதவியில் தாக்குப் பிடித்ததில் அவருடைய சாதுரியத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. முதல்வர் பதவிக்கான போட்டி ஒன்றும் பெண்களிடையே நடத்தப்படும் கோலப்போட்டி அல்லவே.
இசுடாலின் எதிர்க்கட்சித் தலைவரானது எடப்பாடிக்கு வாய்த்த இன்னொரு வசதி. அரசின் நிலைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் மனவோட்டத்தை மாற்றும் ஆற்றல் இசுடாலினுக்கு இல்லாததாலும், எதற்கெடுத்தாலும் நீதிமன்றங்களிலேயே களமாடுவதாலும், எடப்பாடிக்குப் பெரிய எதிர்ப்பு மக்களிடையே தோற்றுவிக்கப்பட வில்லை.
பணம்தான் இசுடாலினுக்கும் அரசியல் மூலதனம்; எடப்பாடிக்கும் அதுதான். நேரிய அறிவுக்கூர்மை மிக்க புதிய தலைமை முகிழ்க்காதவரையில், ஊழலுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போரை, எதிர்கொள்வது எடப்பாடிக்கு ஒன்றும் அரிதானதில்லை.
எல்லாம் ஒன்றுதான் என்று மக்கள் நினைக்கும் போது, எடப்பாடி இன்னொரு முறை ஆட்சிக்கு வருவது கூட அரிதில்லை.
அவராகவே ஒரு கட்டத்தில் நிலைபெறுவதற்குக் கெட்டிக்காரத்தனமாகத் தேடிக்கொண்ட துணை, இன்னொரு கட்டத்தில் பெரும்பாதகமாகவும் அமைந்திருப்பதை அறியவேண்டும்.
பாராளுமன்றத் தேர்தலில் அ.தி. மு.க. மிகமோசமாகத் தோற்றதற்குப் பா.ச.க.வின் கூட்டே காரணம். இந்த உள்ளாட்சித் தேர்தலில் மூச்சுவிட முடியாமல் அ.தி.மு.க. திணறடிப்பட்டதற்குக் குடியாட்சிச் சட்டத்தில் மோடி எடுத்த நிலையை ஆதரித்து வாக்களித்ததே காரணம்.
பா.ம.க. கூட்டே உங்களுக்குத் தேவையாக இருக்கிறதே. பா.ம.க.வைப் போல இரு மடங்கும், தே.மு.தி.க.வைப்போல் ஆறு மடங்கும் வலிமை வாய்ந்த சிறுபான்மை வாக்கு வங்கி (Muslim & Christian vote bank)மோடியால் பாதிக்கப்பட்டு வீறு கொண்டு சிந்தாமல், சிதறாமல் எதிராக வாக்களிக்கும் போது, நீங்கள் எந்தத் தேர்தலில் வெல்லமுடியும்?
மோடி தமிழ்நாட்டைச் சார்ந்து இல்லை. உங்களுக்குத் தமிழ்நாடுதானே களம்; இல்லாவிட்டால் எடப்பாடியில் போய் விவசாயம் செய்யும் நிலைதானே ஏற்படும்.
உங்களுக்கு அரசியல் நிலைபேறு முதன் மையானது. அதற்காகச் சசிகலாவைக் கடந் தீர்கள்; அதேபோல மோடியையும் நீங்கள் கடக்கத் தவறினால், முடங்கிப் போவீர்கள்.
முதல்வர் பதவி மோடியால் வரும் நியமனப் பதவி அல்ல; மக்களால் தேர்வு செய்யப்படுவது.
மோடி எதிர்ப்பு உங்களுக்கான எதிர்ப்பாக மாறத் தேவை என்ன? சசிகலாவை உதறியது விசுவாசம் சார்ந்ததல்ல; அரசியல் விவேகம் சார்ந்தது என்பது உங்கள் நிலைப்பாடானால், அதே நிலைப்பாடுதானே மோடிக்கும்.
அரசில் நிலைப்பதற்கு மோடி பயன்படுவார். அது முடிந்துவிட்டது; இனி தேர்தலில் வெல்லப் பயன்படுவாரா? இரண்டு தேர்தல்களும் எடப்பாடிக்குக் கற்பித்த பாடம் அதுதானே.
கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பார் உண்டோ?
(தொடரும்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-01-10/eps-t.jpg)