(65) வரிப் பெருக்கத்திற்கு ஊழலே காரணம்!

நாள் தோறும் செய்தித்தாள்களைப் பிரித்தால், ஊழலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.

மேல்நாடுகளிலும் இலஞ்சம் உண்டு. சட்டத்தை வளைத்துக் காரியம் செய்துகொடுப்பதற்கு அவன் காசு கேட்பான். இங்கே சட்டப்படி செய்வதற்கே காசு கேட்கிறான். நகராட்சி உறுப்பினரிலிருந்து மைய அமைச்சர் வரை தங்களின் கைகளைக் கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள் வெகு சிலரே.

மாநில அமைச்சர்கள் பெரும் பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டுச் சுயநிதிப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி, அவற்றிலிருந்து நிலையான வருமானம் பெறுவதோடு, கொள்ளைப் பணம் சொத்துக்களில் முதலீடாகி பாதுகாப்புப் பெற்று விடுவதோடு, காலத்தால் சொத்து மதிப்பு ஏறும்போது, ஒன்று நூறாகி விடுகிறது.

Advertisment

மைய அமைச்சர்கள் இலஞ்சப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு அடைகின்றனர். அவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பவர்கள் பன்னாட்டு முதலாளிகள். அவர்கள் பல நாடுகளில் தொழில் செய்பவர்கள்; எந்த நாட்டுப் பணமாகவும் (Currency)அவர்களால் இலஞ்சமாகக் கொடுக்க முடியும்!

இராணுவ அமைச்சர்கள், தலைமையமைச்சர்கள் கையில் பல லட்சம் கோடி வரவு செலவுள்ள பாதுகாப்புத் துறை இருக்கிறது.

நம்முடைய மாநிலப் போக்குவரத்து அமைச்சர் பேருந்துகள் வாங்குவதற்கும் அவற்றின் உதிரிப் பொருட்கள் (spare parts) வாங்குவதற்கும் காசு வாங்குவது போல, மைய இராணுவ அமைச்சர் போன்றோர் போர் விமானங்கள் வாங்குவதிலும் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதிலும் காசு பார்க்கின்றனர்.

Advertisment

இப்படி "அங்கிங்கெனாதபடி ஆனந்த சோதியாய்' எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்னும் இலக்கணம், இந்தியாவில் இலஞ்சத்திற்கும் பொருந்தும். ‘"இந்தியாவில் இலஞ்சத்தைப் போல்'’"எங்கும் ‘நீக்கம் அற நிறைந்தவன்' இறைவன் என்பதுதான் இறைவனுக்குச் சரியான வரைவிலக்கணம்!

இந்த அரசியலில்தான் நேரு, இலால்பகதூர், மொரார்சி தேசாய், மன்மோகன் சிங் ஆகியோரும் இருந்திருக்கின்றனர். இலால்பகதூர் அமைச்சர் பதவியிலிருந்து அரசியல் காரணங்களுக்காக நீக்கி வைக்கப்பட்டபோது (Under Kamaraj Plan), அவருக்கு அதனால் ஏற்பட்ட உடனடிச் சிரமம் என்பது வாடகை வீடு தேடுவதாகத்தான் இருந்தது.

மொரார்சி தேசாய் பம்பாயில் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்குத்தான் குடியிருந்தார். அவரை வீடு காலிசெய்யச் சொல்லி, வீட்டுக்காரன் வழக்குப் போட்டிருந்தான். பேரதிகாரத்தில் இருந்த ஒருவர் மீது, ஒரு சாதாரணமான மனிதன் வழக்குப் போட முடிந்தது இத்தகையோர் காலங்களில் மட்டும்தான். இந்தக் காலமே இந்தியாவின் பொற்காலம்.

dd

ஒரு நாட்டின் பொற்காலம் என்பது தங்கத்தின் இருப்பு எவ்வளவு என்பதைக் கொண்டு கணக்கிடப்படுவதில்லை. ஆட்சியினரின் பண்பு, நீதி, நெறிசார்ந்த வாழ்வு, மக்கள் அச்சமின்றி ஓர் ஆட்சியின் கீழ் வாழல் என்பவற்றால் முடிவு செய்யப் படுகிறது. இதிலே பெரிய கொடுமை மொரார்சியின் மகன், நம்முடைய குப்பன், சுப்பனைப்போல் இன்சூரன்சு கம்பெனியில் முகவராக (Agent) இருந்தார். மகன் பிழைத்துக் கொள்வது அவன் பொறுப்பு என்று கைகழுவி விட்டார் மொரார்சி! தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி மகன் இன்சூரன்சு செய்வதற்கு ஆள் பிடிக்கிறார் என்று சோசலிசுட்டுக்கள் மிகவும் மலிவாகப் பாராளுமன்றத்தில் சாணி வீசினார்கள். மொரார்சியின் மருமகளோ தகுதியான வீடு என்று வாழ்க்கைப்பட்டோமே, வசதியாக இல்லையே என்று ஆறாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

எதுவுமே பாதிக்காத மனச் சமநிலை மொரார்சிக்கு!

மொரார்சியும், லால்பகதூரும் தலைமையமைச்சர்களாக இருந்தும், பணி ஓய்வு நிலையில் வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள். நேரு கடைசிவரை தலைமையமைச்சராக இருந்ததால், வாடகை வீடு தேட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படவில்லை. இவர்களின் வரிசையில் மிகத் தூய தலைமையமைச்சர் மன்மோகன் சிங். ஆனால் மிகப் பெரிய ஊழல் அமைச்சர்கள் இவருடைய அமைச்சரவையில்தான் இருந்தார்கள்!

பொருளாதார வல்லுனராக இருந்தும், இந்தியாவில் மாற்றம் அவர் வழியாகவே நிகழ்ந்தது எனினும், அவருக்குத் தலைமைக்குணம் இல்லாத காரணத்தால், அவர் "தற்செயலான தலைமையமைச்சராகவே'’(Accidental Prime Minister) வரலாற்றில் பார்க்கப்படுகிறார்.

இவர்களைப் போலவே நிகரற்ற அறிவும், நிகரற்ற நேர்மையும் கொண்ட இராசாசி, தனி வாழ்வு இல்லாத, பொதுவாழ்வு மட்டுமே கொண்ட காமராசர், தங்கள் சொத்தையும் பிறருக்கு வழங்கிய முத்துராமலிங்கத் தேவர், ஓ.பி.இராமசாமி ரெட்டியார் என மிகப் பெரிய வரிசை உண்டு.

அன்றைய தலைமுறையில் நேர்மையற்றவர்கள் மிகமிகக் குறைவு. ஆயிரம் ஆண்டுகளாகத் தறி கெட்டுப் போயிருந்த ஒரு பெரிய நாட்டை, எப்படி அந்தக் கிழவனால் (காந்தியால்) தடப்படுத்த முடிந்தது என்பது வியப்பிலும் வியப்பு. காந்தியத் தாக்கம் பெறாத தலைவர்கள் அன்று எந்தக் கட்சியிலுமில்லை. அந்த யுகமே காந்தியின் பெயரால்தான் (Gandhian epoch) அழைக்கப்படுகிறது.

பெரியார் கருத்து வழியில் காந்தியை எதிர்த்தவரே தவிர, காந்தியப் பட்டறையில் உருவான காரணத்தால், பொதுவாழ்வில் அப்பழுக்கற்றவராக இருந்தார்! அதுபோலத்தான் நம்பூதிரிபாட் போல் பல தலைவர்கள்!

தீயினால் சுடப்படுகின்ற தங்கம் கசடு நீங்கி ஒளிர்வது போல், விடுதலைப் போராட்ட வேள்விக்கு அறிந்தே வந்தவர்கள், தியாகத் தீயில் கசடு நீங்கப் பெறுவது இயற்கைதானே. அதுதான் அந்தத் தலைமுறையின் தூய்மைக்குக் காரணம். இப்போது வருகிறவர்கள் எந்த நெருப்பாற்றிலும் நீந்தி வரவேண்டிய தேவை இல்லை.

ஒரு வலுவான கட்சிக்குள் நுழைந்து, நகராட்சி உறுப்பினரிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் வரை அதுஅதற்குள்ள விலையைத் தலைவனுக்குக் கொடுத்துவிட்டு, கோயிலில் செருப்புக் குத்தகை எடுப்பவன் ஒரு குறைந்த பணத்தைக் கட்டிவிட்டு, ஒன்றுக்குப் பத்தாக இலாபம் அடிப்பது போல், அரசியலைத் தொண்டுக்குரிய களம் என்னும் நிலையிலிருந்து, ஆட்டுத் தொட்டியாக்கி விட்டார்கள். ஆட்டுத் தொட்டியில் அறுபடப் போகிற ஆடுகள், நடக்கப் போவது தெரியாமல் நம்பிக்கையோடு அசை போட்டுக்கொண்டு சாவகாசமாக நிற்பது போல, எளிய மக்களின் நிலையும் இருக்கிறது.

அவர்கள் தேர்வு செய்வதற்கு இரண்டு கட்சிகள்தாம் இருக்கின்றன. இரண்டும் ஒரே மாதிரித் தரத்தில் இருப்பவைதாம். ஒரு பெரிய கட்சியாக உருவாகி விட்டால், எல்லாக் கேவலங்களோடும் அது இருந்தாலும் அந்தக் கட்சியை வீழ்த்துவது என்பது முடியாதது.

தி.மு.க.வுக்கு மாற்று காங்கிரசு என்னும் நிலை இருந்தது. காமராசர் மறைவுக்குப் பின்னர் காங்கிரசின் இடத்தைப் புதிதாக முளைத்த ஙஏதன் கட்சி முற்றாகப் பற்றிக்கொண்டது. உருவாகும்போதே அது தி.மு.க.வைச் சரி பாதியாகப் பிளந்து கொண்டு உருவானது. "அது வெல்லும்'’ என்னும் நம்பிக்கையை உண்டாக்கக் கூடிய கவர்ச்சியான, மக்களால் அறியப்பட்ட தலைவராக ஙஏத விளங்கினார். அவர் ஆளுங்கட்சியான தி.மு.க.விடம் "கணக்குக்' கேட்டார். அந்தச் செய்தி கடைக்கோடியிலிருந்த கடைசி மனிதனையும் உடனடியாகச் சென்று அடைந்து விட்டது.

MGR தி.மு.க. மீது சுமத்திய குற்றம் மக்களின் நினைவிலிருந்து மறையப் பதினான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது. அது மட்டுமல்ல MGRம் மறைய வேண்டியிருந்தது.

அதன் பிறகுதான் கலைஞர் ஆட்சிக் கட்டிலையே அணுக முடிந்தது. அதுவரை தி.மு.க.வை உயிர்ப்போடு வைத்திருக்கக் கலைஞரால் முடிந்ததற்கு காரணம் அவர் ஒரு போராளி மட்டுமல்ல. திராவிடக் கொள்கைகளில் ஊறியவரும் கூட! எழுத்து, பேச்சு எனப் பன்முகத் திறன் படைத்தவர். ஆனால் ஊழலை எதிர்த்து உருவான அந்தக் கட்சியின் பிந்திய தலைவர்கள் ஊழலுக்காகச் சிறை சென்ற கொடுமையை எங்கு போய்ச் சொல்லி முட்டிக் கொள்வது? அதன் விளைவு ஊழல் ஒரு பொருட்டாகவே தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது!

கலைஞர், செயலலிதாவுக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியல் எளிய அரசியலாகிவிட்டது. அன்றைக்கு அவர்களிடம் கட்சி கட்டுக்குள் இருந்தது. இன்று ஆட்சியில் இருப்பதால் ஒரு சாராரும், "அடுத்து நாம்தானே இருக்கிறோம்; வேற யார் வர முடியும்?' என்று இன்னொரு சாராரும் அரசியலை நடத்துகின்ற காலம் இது.

ஒரு தோல்வியைக் கூடத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எந்தப் பெரிய கட்சிக்கும் இல்லை. ஆனாலும் அவை நிலைபெற்றிருப்பதற்குக் காரணம், அவற்றை எதிர்கொள்வதற்குரிய உரம் சின்னச் சின்னக் கட்சிகளுக்கு இல்லாததுதான்.

சிறிய கட்சிகளிடம் புத்துணர்வோ, புதிய கருத்தோட்டமோ இல்லை. சாதிக் கட்சிகளாக இருப்பவை, எதிர்ச்சாதிக் கட்சிகளுக்கு எதிர் முகாமில் இருக்க வேண்டிய கட்டாயமுடையவை. அவற்றின் அரசியல் இன்னும் நூற்றாண்டுகளுக்கும் இது போலத்தான் இருக்கும். இன்னும் சில கட்சிகள், பெரிய கட்சிகளின் தேர்தல் சின்னத்தில் நின்று போட்டியிடுகின்றன. இவை வெற்றி பெற்றாலும் அந்தப் பெரிய கட்சியின் எண்ணிக்கையோடு சேர்த்துத்தான் பாராளுமன்றத்தில் கணக்கிடப்படுகிறது. பெரிய கட்சியின் கொறடாவின் கட்டளைக்கு உட்பட்டவர்கள்தாம் இவர்களும்! பெரிய கட்சிகள் தங்களின் எண்ணிக்கையில் இவர்களையும் உள்ளடக்கியே கணக்குக் கொடுக்கின்றன. இவர்கள் தனிக்கட்சி வைத்திருப்பதில் பொருள் எதுவுமில்லை!

தனிச் சின்னத்தில் நிற்க முடியாதவர்களுக்குத் தனிக் கொடி தேவை இல்லை. பாராளுமன்றத்தில் தனி அடையாளத்தை இழந்து விடுகிறவர்களுக்குத் தனிக் கொடி எதற்கு? கொடி என்பது தனித்த அடையாளம்தானே.

ஒரு கூட்டணிக் கட்சியோடு மாறுபடுவதற்குரிய உரத்தைப் பொதுவுடைமைக் கட்சிகளே இழந்துவிட்டனவே! அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வருமே; எப்படி மாறுபட முடியும்?

சிறிய கட்சிகள் மாறி மாறிக் கூட்டுச் சேர்வதால், மரமரத்துப் போய்விட்டன.

தமிழ்நாட்டில் ஊழல், இலவசங்கள் தவிர கடந்த ஐம்பதாண்டு அரசியலில் எந்த மாற்றமும் இல்லை. நாம் நூறு ரூபாய் வரிக் கட்டினால், ஊழல் காரணமாக அறுபது ரூபாய்ச் சேவையைத்தான் பெறுகிறோம். சப்பான் உட்பட சிறந்த நாடுகளிலெல்லாம் ஒரே ஒரு வகை GSTதான் உண்டு. அதுவும் வெறும் எட்டு விழுக்காடு.

இந்தியாவில் மட்டும்தான் 28 விழுக்காடு வரை GST வரி விதிக்கப்படுகிறது.

கொஞ்ச நாள் முன்பு வரை தோசைக்கு 18 விழுக்காடு வரி இருந்தது. ஒரு தோசை ஐம்பது ரூபாய்; அதற்கு வரி ஒன்பது ரூபாய். ஊழல் முற்றாக இல்லாத ஒரு தலைவன் இந்த நாட்டை ஆள நேரிட்டால், சப்பானைப் போல் ஒட்டுமொத்தமாக 8% GSTதான் எந்தப் பொருளுக்கும் இருக்கும்.

பழைய மன்னர்கள் வருவாயில் ஆறில் ஒரு பங்கை (16.5%) வரியாகப் பெற்றது போல், நமக்கும் வருமான வரி 16% ஆக இருக்கும்! ஊழலே இல்லாத சிங்கப்பூரிலும் ஆங்காங்கிலும் 15%தான் வருமான வரி!

வரிப் பெருக்கத்திற்கு ஊழலே காரணம்!

(தொடரும்)