(64) உண்மையை உரக்கக் கூவுங்கள்!
வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தல் அரசியல் நோக்கர்களின் கணக்குகளை மீண்டும் ஒருமுறை தவிடுபொடியாக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்புணர்வு தி.மு.க. கூட்டணியைக் கணிசமாக வெல்லச் செய்யும் என கணிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. வெறும் ஓரிடமாகக் குறைந்து உருக்குலைந்து போகும் என யாருமே கருதவில்லை. முகம்மதியர்கள் மற்றும் கிறித்துவர்களின் வாக்குகள், தி.மு.க. சேர்த்துக்கொண்டிருக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியின் வாக்கு வங்கியையும்விடக் கூடுதலானது.
பெரிய தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மோடி எதிர்ப்புணர்வு, பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் அ.தி.மு.க.வை மண்ணைக் கவ்வச் செய்து, தி.மு.க.வுக்கு மகுடம் சூட்டும் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நடந்தது.
ஆனால் ஐந்து இலட்சம் வாக்கு, நான்கு இலட்சம் வாக்கு வேறுபாட்டில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்ல முடியும் என யாருமே கருதவில்லை. அதுபோல் நடந்து முடிந்த வேலூர் தொகுதியில் பலமுறை தண்ணீரைக் குடித்து முழுகிவிட்டதோ என்று கருதப்பட்ட நிலையில் வாணியம்பாடி, ஆம்பூர் முசுலிம்களின் தயவால் தி.மு.க.வுக்கு தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாகிவிட்டது.
வேலூர் பாராளுமன்றத் தொகுதி மூன்றரை லட்சம் முசுலிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் முத்தலாக் சட்ட விவாதத்தின்போது, முசுலிம்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக முசுலிம்களை மூன்றாண்டு சிறைப்படுத்தும் சட்டத்திற்கு இசைவாக வாக்களித்ததும், பா.ச.க. ஆட்சியை வானளாவப் புகழ்ந்ததும், ஏறத்தாழ அ.தி.மு.க.வின் உயிரைக் குடித்துவிட்டது என்றே கருதப்பட்டது.
காசுமீரின் உரிமைப் பறிப்புச் சட்டம் தேர்தல் நாளில் காலை 11:00 மணிக்கு நிறைவேற்றப்படும் நிலையில், அதற்கு இசைவாக அ.தி.மு.க. வாக்களித்த நிலையில், தி.மு.க. ஐந்து இலட்சம் வாக்குகளில் வேலூரில் வெற்றிபெற்றால் வியப்பதற்கு ஏதுமில்லை என்று கருதப்பட்டதுபோய், வெறும் எட்டாயிரம் வாக்குகளில் தி.மு.க. வெற்றிபெற நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசுலிம்கள் மோடியால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டதால், அவர்கள் சிதறாமல் தி.மு.க.வுக்கு வாக்களிக்க நேரிட்டது. முசுலிம் அல்லாதவர்கள் அரசியல் ரீதியாகவே வழக்கம்போலவே வாக்களித்திருப்பர். மூன்று மாதத்திற்கு முன்னர் முழுமையாக இந்தப் பக்கம் இருந்தவர்களிடம் நேரிட்டிருக்கும் மாறுதலுக்கு என்ன காரணம்?
இப்போது மூன்று மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ள நிலையில், பெருத்த இடைவெளியோடு இருந்த போட்டி மிக நெருக்கமானதாக மாறிவிட்டதற்கான காரணம் என்ன?
அ.தி.மு.க.வின் அடிவருடும் போக்கு முன்பைவிடக் கூடிவிட்ட நிலையில், மோடியின் ஆட்சிப் போக்கு முன்யோசனை இல்லாமல், தன்மூப்பாக நடக்கின்ற வேளையில், தி.மு.க.வுக்கான மக்கள் ஆதரவு சுருங்கவேண்டிய கட்டாயம் என்ன?
தமிழ்நாட்டு அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியலில் மட்டுமல்ல; ஆட்சியிலும் கூட பெரிய மாறுதலில்லை. இரண்டும் திராவிட இயக்கங்கள். இந்தி எதிர்ப்பு; இட ஒதுக்கீடு; மையத்திலுள்ள ஆளுங்கட்சியைத் தழுவிச் செல்லல்; நீட் தேர்வு என இவற்றில் மட்டுமல்ல, இலவசங்களிலும் வேறுபட்டவை அல்ல. ஒரு கட்சி தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தால், இன்னொரு கட்சி மிக்சி, மின்விசிறி.
ஒரு கட்சி, தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காக அரசுப் பணத்தில் ரூபாய் இரண்டாயிரத்தை வறிய நிலையில் உள்ளோர்க்கு வழங்குவதாக வாக்களித்தது. இன்னொரு கட்சி, வீடு கட்டுவதற்கு மூன்று செண்டு நிலத்தைச் சொந்தப் பணத்தில் தருவதாக வாக்களித்தது.
தலைக்கு மூன்று செண்டு நிலம் கொடுத்து அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிற பொதுநல உணர்வாளர்கள், உலகம்பூராவிலும் உள்ள குடியாட்சி நாடுகளில், தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கமுடியும்.
"கொடுப்பதில்', "வாங்குவதில்', "இலவசங்கள் வழங்குவதில்', "பிறவற்றில்' என்று எதிலுமே வேறுபாடு இல்லை. தலைமைகளில்தான் வேறுபாடு. ஆகவே இரண்டும் அயராமல் மாறி மாறி வெற்றிபெறுவது இயற்கைதான்.
செயலலிதாவின் மறைவு காரணமாக அ.தி.மு.க. உடைய நேரிட்டபோது, ஒவ்வொரு பிரிவும் செயலலிதாவின் சாவை அரசியலாக்கின. அந்தச் சாவில் மர்மம் இருப்பதாகப் பறைசாற்றின. அதற்கென விசாரணைக் கமிஷனும் போடப்பட்டது. அந்த விசாரணைக் கமிஷன் இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் விசாரணையை முடிக்க வாய்ப்பில்லைதான். எப்படி முடியும்? அதுதானே அவர்களுக்குத் தெரிந்த அரசியல்.
இதிலே பெரிய வியப்பு, அந்தக் கட்சிக்கு நேர் எதிரான எதிர்க்கட்சித் தலைவரும், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக செயலலிதாவின் சாவுக்குக் காரணமானவர்களைப் பிடித்துத் தண்டிக்கப் போவதாக பொதுக்கூட்டங்களில் பறைசாற்றுவதுதான்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே ஒரேயொரு பிரச்சினைதான் தீர்க்கப்பட முடியாததாக இருக்கிறது; செயலலிதாவின் சாவு மர்மம். எவ்வளவு சிக்கலான பிரச்சினை.
பசிபிக் கடலில் அமெரிக்கா அணுவெடிப்புச் சோதனைக்குத் தயாரானபோது, அதை நிறுத்தவேண்டும் என நேருவும் இராசாசியும் குரல் கொடுத்தனர்.
கடைசியில் நேரு நேர்நேர் பகையான இராசாசியை இந்திய அரசின் பிரதிநிதியாக அமெரிக்க குடியரசுத் தலைவர் கென்னடியிடம் பேச அனுப்பினார்.
கென்னடி உயரம்; இராசாசி குட்டை. நடந்துகொண்டே இராசாசி பேசுகின்றபோது, கென்னடி குனிந்து தன் காதை இராசாசி வாயருகே கொண்டுவந்து கேட்கிறார்.
ஒருகாலத் தமிழ்நாட்டில் இராசாசி நேருவை எதிர்த்தார்; இராசாசியை காமராசர் எதிர்த்தார்; காமராசரை முத்துராமலிங்கத் தேவர் எதிர்த்தார்; முத்துராமலிங்கத் தேவரை அண்ணா எதிர்த்தார்; அண்ணாவை ம.பொ.சிவஞான கிராமணியார் எதிர்த்தார். இவர்களையெல்லாம் பொதுவுடைமை பி.இராமமூர்த்தியும் சீவானந்தமும் எதிர்த்தார்கள்.
யானைகள் பூனைகளோடு மோதுவதில்லை; அரிமாக்களோடுதான் மோதும்.
அந்த அளவுகோல் காலத்தால் குறைவுபட்டுக் குறைவுபட்டு இன்றைய கேவலமான நிலைக்கு வந்துவிட்டது.
ஆட்சி என்பது "வெட்கமில்லாமல் கொள்ளை அடிப்பதற்கு' என்னும் நிலை சிறிது சிறிதாக வளர்ந்து, எல்லாக் கட்சிகளும் ஒரு போக்குடையவையாக வளர்ந்துவிட்டன.
ஆட்சி என்பது அலிபாபா குகை. அதைத் திறப்பதற்கான மந்திரம் தெரிந்தால் போதும்;
தேர்தல் என்பது போர் போல. அதற்குத் துணை வேண்டும்; கூட்டணி வேண்டும்.
காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் கூட்டு வைத்துக்கொள்வதன் மூலம் அறுபது விழுக்காடு வாக்குகளைச் சிதறாமல் சேர்த்து காங்கிரசைத் தோற்கடிக்க முடியும் என்பதை 1967-க்கு முன்னர் கண்டறிந்து சொன்னவரும், கூட்டணி அரசியலுக்கு வித்திட்டவரும் இராசாசிதான்.
1967-ல் தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் வலதுசாரி சுதந்திரக் கட்சியும், இடதுசாரி பொதுவுடைமைக் கட்சியும் ஒன்றாக இருந்தன. ஒருவர் இன்னொருவருக்காகப் பரிந்து பேசவில்லையே தவிர, மற்றபடி எதிர் வேட்பாளரை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்கவில்லை. இதுதான் கூட்டணி தருமம்.
கூட்டணி என்பது இட ஒதுக்கீடும் ஒப்பந்தமும்தான் (Seat adjustment). அது கொள்கை ஒப்பந்தம் இல்லை.
இப்போது கூட்டணி என்பது தலைமைக் கட்சியோடு வேறுபடக்கூடாது; அப்படி ஒரு வேறுபாடு இருந்தால் அதை வெளியே சொல்லக்கூடாது என்பது நடைமுறையாகிவிட்டது.
ஏனெனில் பாராளுமன்றத்தை அடுத்து ஊராட்சித் தேர்தல் வரும், கூட்டுறவுத் தேர்தல் வரும்; பின்பு சட்டமன்றத் தேர்தல் வரும். ஆகவே மொத்தச் சிறு கட்சிகளும் கூட்டணிக் கட்சித் தலைவரை "தடவிக் கொடுத்தே' காலத்தைக் கழிக்க வேண்டியதாகியிருக்கிறது. துணைக்கட்சிகள் காலகாலத்திற்கும் துணைக் கட்சிகளாகவே இருந்துவிடுகின்றன.
வைகோவும் காங்கிரசும் ஒரே கூட்டணி. காசுமீரின் உரிமையை மோடி பறித்துவிட்ட நிலையில், பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து வெகுண்டு பேசிய வைகோ, மோடிக்கு நிகராக நேருவும் தவறு செய்தவர்தான் என்று பேசுகிறார்.
அமித்சா, வைகோ பேசுவதற்கு நேரம் பெற்றுத்தந்த காரணத்தால், காங்கிரசையும் சாடினார் வைகோ எனச் சொல்கிறார் காங்கிரசுத் தலைவர் அழகிரி.
கூட்டணியைக் குலைக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் அழகிரி. கூட்டணித் தலைவர் இதை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் விரும்புகிறார் காங்கிரசுத் தலைவர்.
மோடி, மோசம் என்று வைகோ சொல்வதால் அமித்சா அடைகின்ற எரிச்சலைவிட, நேருவும் மோசம்தான் என்று சொல்லும்போது அமித்சாவுக்கு ஏற்படுகின்ற இதம் கூடுதலானது என்பதால், மோடியோடு நேருவையும் ஒரு தட்டில் வைத்து வைகோ பேசுகிறார் என்னும் எண்ணம்தானே யாருக்கும் ஏற்படும்.
காங்கிரசை தனியாக வேறு சூழலில் விமர்சிப்பது வேறு. அது பிழையே இல்லை. காங்கிரசு தவறு செய்யாத கட்சி இல்லை.
"குல்லா தருகிறேன்' என்று நேரு சொன்னாரே "தந்தாரா' என்று கேட்பதற்கும், வேட்டியையே மோடி உருவி விடுவதற்கும் வேறுபாடு இல்லையா?
வேட்டி தந்தவரும், வேட்டியை உருவியவரும் ஒன்றா?
கூட்டணியில் மாறுபாடு கூடாது என்பது தேர்தல் நேரத்தில்தான். எல்லாமே தனித்தனிக் கட்சிகள்; தனித்தனி போக்குடையவை.
உரசுங்கள். தலைமைக் கட்சியிடம் போய் முறையிடாதீர்கள். பிரசவத்திற்குப் பிறகு தாய் வேறு; பிள்ளை வேறு! உரசுவதற்கு அஞ்சி உண்மையை முடக்காதீர்கள். உண்மையே மகத்தானது; உரக்கக் கூவுங்கள்!
(தொடரும்)