45 தீயவும் நல்லவாம்!
தெலுங்கானாவில் சட்டமன்றத்திற்கு ஆயுள் போதுமான அளவு இருந்த போதும், அதன் முதல்வர் சந்திரசேகரராவ் மோடியை இணக்கப்படுத்திக் கொண்டு, சட்டமன்றத்தைக் கலைத்துப் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்தச் செய்து, முழு வெற்றி பெற்று ஆட்சியை இன்னும் ஐந்தாண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொண்டுவிட்டார்.
பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடந்தால், மோடியின் மீதுள்ள கோபதாபங்கள், தன்னைச் சாடிப் பாதித்து விடக் கூடும் என்று அஞ்சி முந்திக் கொண்டார்.
எடப்பாடியின் மீது மோடி கூட்டணி ஒப்பந்தத்தைத் திணித்தது போல, தன் மீது கூட்டணியைத் திணிக்க முடியாதவாறு நழுவிக் கொண்டார்.
தெலுங்கானா உருவாகப் போராடினார் என்பது ஒன்றுதான், அவருடைய அரசியல் தகுதி! நெறிமுறைகளைப் பற்றிக் கவலையே இல்லாதவர் அவர்.
தெலுங்கானா பிரித்து விடப்படும்வரை காங்கிரசோடு நயந்து, அடிவருடித் தன் காரியத்தைச் சாதிப்பதிலேயே குறியாய் இருந்தார்!
தெலுங்கானாவைப் பிரித்துத் தந்தது தான்தான் என்று காங்கிரசு உரிமை கொண்டாடி, அதிக இடங்களைக் கோரித் தன்னை முழுமையடைய விடாது என்பதால், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரசை முறித்துக் கொண்டு, தன்னுடைய கட்சியைத் தனித்து நிறுத்தி முழு வெற்றியும் பெற்றார்.
மனங் கனிந்து பிரித்துத் தந்த பெருமையும், அதன் காரணமான வெற்றியும் தன்னை வந்தடையும் என்று எதிர்பார்த்த காங்கிரசு அந்தத் தேர்தலில் முழுத் தோல்வியைத் தழுவியது!
"காங்கிரசாக எப்படி பிரித்துத் தரும்; நான் போராடியதன் விளைவல்லவா தெலுங்கானா உருவாக்கம்' என்று சொல்லிச் சொல்லிக் காங்கிரசுக்கு, அதற்குரிய பங்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
நம்மை எதிர்ப்பதற்கு யாருமில்லை என்கின்ற நிலையில் டில்லிப் பேரரசின் அரியணையைக் குறிவைத்தார்! ஆந்திராவின் முதல்வராக வரவிருந்த செகன் மோகன் ரெட்டிக்கு வேண்டிய பண உதவி செய்து, சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தத் துணையா யிருந்தார்.
தமிழ்நாட்டையும் கேரளாவையும் வளைக்க முடியும் என்று நம்பினார்.
கடைசியில் அவருடைய மாநிலத்திலேயே விழுந்து விட்ட ஒரு பொத்தல் அவருடைய கனவுகளைச் சுக்குநூறாக்கி விட்டது.
மிகையான கனவுகள் நொறுங்கி விட்டனவே தவிர, தெலுங்கானா முழுமையாக அவர் கையிலேதான் இருக்கிறது.
தெலுங்கானா உருவாக்கத்தில் காங்கிரசின் ஆதரவு நிலைக்கு, அது அடைந்திருக்க வேண்டிய எண்ணிக்கையே வேறு! ஆனாலும் காங்கிரசு வெறும் பதினெட்டுச் சட்டமன்ற உறுப்பினர் களையே பெற்றது.
சந்திரசேகரராவுக்கு நினைத்தது நடக்க வில்லை என்றவுடன் எதிர்க்கட்சி என்று ‘"பெயருக்கு இருந்த'’ காங்கிரசு உறுப்பினர்களில் இரண்டு பங்கை, அஃதாவது பன்னிரண்டு உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கிக் காங்கிரசை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
அவர்களில் இரண்டு பேர் மந்திரிகளாகி விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மெத்தையையும் தலையணையையும் பஞ்சை அடைத்துச் செய்யாமல், பணத்தை அடைத்துச் செய்து கொடுத்தார்.
இவ்வளவுக்கும் சந்திரசேகரராவுக்குத் தேவைக்கு மேல் பெரும்பான்மை இருக்கிறது. எதிரியே இல்லாமல் ஆள்வதில் உள்ள வெறி அவருக்கு.
ஒன்று: தன் கட்சியே வெல்ல வேண்டும்; அல்லது வென்றவனை எல்லாம் தன் கட்சி ஆக்கிக் கொண்டு விட வேண்டும். ஏறத்தாழ எல்லாமே விலை மாடுகள்தாமே!
ஏறத்தாழ இரண்டு லட்சம் வாக்காளர்கள் பதினெட்டுத் தொகுதிகளில் சந்திரசேகரராவ் "கூடவே கூடாது' என்று கருதி, அவரைத் தோற்கடித்துக் காங்கிரசை வெல்லச் செய்தனர்.
அதில் பன்னிரண்டு உறுப்பினர்கள் அந்த மக்களை மோசடி செய்து, அந்த மக்கள் விரும்பாத கட்சிக்கு விலை போய் விட்டனர் என்பது எவ்வளவு பெரிய மோசடி!
"சந்திரசேகரராவுடன் தேர்தலுக்குப் பிறகு இணைவோம்' என்பதை இவர்கள் வெளிப்படுத்தி இருந்தால், இவர்கள் பன்னிருவரையும் "வேண் டாம்' என்று தோற்கடித் திருப்பார்கள்.
‘மொல்லமாறி, முடிச்ச விக்கிகளின்’ தரத்திற்கு அரசியல்வாதிகள் வந்து விடுவது என்றால், ஒவ் வொரு சட்டமன்ற உறுப் பினரும் பல கோடி ரூபாய்களைச் சுருட்டுவதுதான் அரசியல் என்றால், அது வெகு விரைவில் வல்லாட்சியாக (Tyranny) மாற்றம் பெற்று விடும் என்பான் அரிசுடாடில்!
தமிழ்நாட்டில் விலை கொடுத்துத்தான் எடப்பாடி ஆட்சியைத் தக்க வைத்துள்ளனர்!
வாக்களிப்பதற்கு மக்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். எல்லாரும் பணம் கொடுப்பதால், எல்லாரிடமும் வாங்கிக் கொண்டு, தன் விருப்பத்திற்கு வாக்களிக்கின்றனர் மக்கள்.
பணம் கொடுத்தாலும் நமக்கு போடுவார்கள் என்பதற்கு உறுதி இல்லாதபோது, ஏன் கொடுக்க வேண்டும் என்னும் கேள்வி எழுகிறது.
பணம் கொடுக்காவிட்டால், நாம் பரிசீல னைக்கே எடுத்துக் கொள்ளப்பட மாட்டோம் என்னும் அச்சம்தான் எல்லாரையும் பணம் கொடுக்க வைக்கிறது.
தேர்தல் நாளில் மட்டுமே வாக்காளர்கள் மதிப்பும் விலையும் பெறுகிறார்கள். அதற்குப் பிறகு வாக்காளன் ஒவ்வொருவனும் தன்னுடைய எளிய காரியங்களை நியாயப்படியும், சட்டப்படியும் செய்து கொள்வதற்கு, அதே சட்டமன்ற உறுப் பினர்க்கு ஒன்றுக்குப் பத்தாக விலை கொடுக் கிறார்கள். மக்களிடம் நியாயச் சீற்றம் எழுவதில்லை. அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள்.
அதற்குக் காரணம் எல்லாக் கட்சிகளும் அதே நிலையில்தான் இருக்கின்றன. எதிர்க்கட்சி யாய் இருக்கும்போது ஆளுங்கட்சியின் ஊழல் களைப் பட்டியலிடுவார்கள். இவர்கள் ஆளுங் கட்சியாய் ஆகி விட்டால், அவர்கள் பட்டியலிடு வார்கள். ஐந்தாண்டு என்பது நீண்ட இடைவெளி. அவ்வளவு நினைவுடையவர்கள் அல்லர் மக்கள்.
முந்திய காலத்தில் எல்லாத் தலைவர்களுமே நாணயமானவர்களாக இருந்தார்கள்.
இராசாசி, காமராசர், முத்துராமலிங்கத் தேவர், ம.பொ.சி; இவர்களின் அதே தரத்தில் அண்ணா!
அண்ணா, இராசாசியை உடன் வைத்துக் கொண்டு, ஆட்சி மாற்றம் கோரியதற்கு அடிப் படைக் காரணம் காமராசரின் போதாமை அன்று! இந்தித் திணிப்பு, வடபுல ஏகாதிபத்தியம், அரிசிச் சிக்கல், விலைவாசியைச் சரியாகக் கையாளத் தவறியது இவையே காரணம். அதன் பிறகு அரசியலே ஊழல் பற்றியதுதான்! அதன்பின் வந்த தலைவர்கள் அதே தரத்திற்கு ஒரே மாதிரியாக உருவானார்கள்தாம்!
ஒரு தலைவன் தவறானவனாகவும், ஊழ லாகவும், முன் மாதிரியாகவும் அமைந்து விட்டால், பிறகு அதே தரத்திற்கு உள்ளவர்களெல்லாம் நாம் ஏன் தலைவராகக் கூடாது என்று கருதத் தொடங்கி விடுவார்கள். "அவனால் முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது' என்னும் கருத்தோட்டம்தான் ஒரே மாதிரியான தரத்திற்குத் தலைவர்களை உருவாக்கி விடுகிறது.
காந்தி காலத்து தலைவர்களின் அலைவரிசை வேறு; விடுதலை பெற்ற இந்தியத் தலைவர்களின் அலைவரிசை வேறு; 1990களுக்குப் பிறகு உருவான தலைவர்களின் அலைவரிசை வேறு; இந்தக் காலகட்டம் சரிவின் உச்சம்! ஊழலுக்காகச் சிறை சென்ற பீகாரின் லல்லு பிரசாத்; "ஏன் இவர்கள் செல்ல வில்லை? நீதி எங்கே ஒச்சப்பட்டது'’ என்னும் கேள்விகளுக்கு விடை காண முடியாவிட்டாலும், பொதுவாழ்வில் அழுக்கேறி நிற்கும் மாயாவதி; முலாயம்சிங் யாதவ்! அப்புறம் நிகழ்கால எடப்பாடியின் அலைவரிசை! அவருக்குக் கட்சிக்குள் பகை ஓ.பன்னீர்செல்வம்; கட்சிக்கு வெளியே பகை தினகரன்; சிறையில் வாழும் சசிகலா!
கலைஞரை எதிர்த்து ஒரு கூட்டத்தில் உட்கட்சியில் ஈ.வே.கி. சம்பத்; கண்ணதாசன்!
கலைஞருக்கு மாற்றாக முடியும் என்று MGRஆல் சிந்தித்திருக்கவாவது முடியுமா?
அதற்குக் கலைஞர் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சியில் சில குறைகள் நிகழும்போது, அவற்றை முன்னிறுத்தி, அதற்கு அடுத்த வரிசையில் இருந்த செல்வாக்கு மிக்க MGRதான் எதிர்நிலைக்கு வர முடியும்! அதுவரையிலும் காலம் அவரைக் காத்திருக்க வைக்கிறது.
அதுபோல் MGR மறைவுக்குப் பிறகு, வலிமை மிக்க தலைவரான கலைஞரை எதிர்க்க, வி.என்.சானகியால் முடிந்திருக்காது. ஆகவே வலிய செயலலிதாதான் நிலைபெற முடிகிறது.
செயலலிதாவுக்குப் பின்னரும் கலைஞர் சில காலம் வாழ்ந்தாலும், அவர் நலக் குறைவால் செயலற்றுப் போய்விட்ட காரணத்தால், சசிகலா, எடப்பாடி என ஒரு வரிசை எழ முடிந்தது.
கலைஞருக்கோ, செயலலிதாவுக்கோ மாற்றாக வர முடியும் என்று கனவில் கூடத் தோன்ற முடியாது என்பதால்தான், எடப்பாடி காலம் வரை கமலகாசன் காத்திருக்க நேரிட்டது.
ஆளுங்கட்சி-அதற்கு எதிர்ப்பு என எல்லாமே ஒரே அலை வரிசையில்தான் அமையும். அது காலத்தின் ஏற்பாடு!
ஒரு காலத்தில் ஒரு கட்சியிலிருந்து இன் னொரு கட்சிக்கு இலாப நோக்கம் கருதி மாறுபவன் இழிவாகக் கருதப்பட்டான்.
ஆனால் பெரியாரிடமிருந்து சீவானந்தம் மாறியபோது, திராவிடர் கழகத்தின் போதாமை யைச் சுட்டிக் காட்டிச் சென்றதால், பெரியார்தான் அதற்கு மாய்ந்து மாய்ந்து விடையிறுக்க வேண்டிய நிலையில் இருந்தார்.
ஆனால் இப்போதெல்லாம் ஆளுங்கட்சிகளை அடிவரை உறிஞ்சி விட்டு, அங்கே கரை ஏற முடியவில்லை என்றவுடன், அதற்கு மாற்றுக் கட்சியில் நுழைந்து, நுழைந்த வேகத்திலேயே செல்வாக்குப் பெற்று விட முடிவதன் காரணம், இன்றைய அரசியலே கொடுக்கல் - வாங்கலில் தானே மையங் கொண்டிருக்கிறது.
ஆளுங்கட்சி நிரம்பி வழியும் தெலுங்கானா விலேயே ‘சரக்கைக் கை பார்த்து வாங்கத் தெரிந்த வர்கள், காங்கிரசிலிருந்து சந்திரசேகரராவிடம் மேய்த்துக் கொண்டு வந்துவிடுவதற்குத் தேவைப்படும்போது, வறண்ட மாநிலங்களுக்கு அவர்கள் தேவைப்பட மாட்டார்களா? அது மட்டுமல்ல அவர்கள் மட்டுமே தேவைப் படுகிறார்கள் என்பது ஓர் அதிசயமா?
தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு’ (குறள் : 375)
அது செல்வம் செய்வதற்கு மட்டுமில்லை;
அரசியல் செய்வதற்கும் அதுதான் நிலை!
தீயவும் நல்லவாம்!
(தொடரும்)