111 கொள்ளையில் கூட்டணி!

சென்னையில் சாலைகள் போடுவதற்கு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களின் சங்கம் கடந்த வாரம் வெளிப்படையாகக் கலகம் செய்தது. சாலைப் பணிகளை இடையிலேயே நிறுத்தி விடப் போவதாக மிரட்டல் விடுத்தார்கள்.

""சென்னையில் குறிப்பாக வடசென்னையில் எங்கள் பணிகளுக்குச் சொல்லொணா அளவுக்கு இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் ஆணையர் அமைதியாக இவ்வளவையும் வேடிக்கை(Silent Spectator) பார்ப்பவராக இருக்கிறார். எங்களை இந்தப் பிடுங்கல்களிலிருந்து விடுவித்து, உரிய பணியை, உரிய வகையில், உரிய காலத்தில் செய்ய ஆணையர் எங்களுக்கு உறுதுணையாக இல்லாவிட்டால், நாங்கள் பணி நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்''.

""ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இடையறாது கமிஷன் கேட்டுத் தொல்லை கொடுக்கிறார்கள். ஆணையர் உடனடியாக குறுக்கிட்டு, நாங்கள் தொல்லை இல்லாமல் பணி செய்யத் துணை செய்ய வேண்டும்''.

Advertisment

ஒப்பந்தக்காரர்கள் தனித்தனியே பயப்படுவார்கள். ஆகவே அவர்களுக்காகச் சங்கம் பேசுகிறது. சங்கத்திற்குத் தனி முகம் கிடையாது. சங்கத்தையே ஒழிப்பதென்பது நடக்க முடியாத காரியம்.

இந்தச் சங்கம் தனிப்பட்ட முறையில் இதே கோரிக்கைகளை ஒரு மடலில் எழுதி ஆணையரிடம் நேரில் கொடுத்திருந்தால், அவர்கள் கண் முன்னாலேயே அந்த புகார் மடல் குப்பைத் தொட்டிக்குப் போயி ருக்கும். இவை எல்லாம் தெரிந்துதான் சங்கம் வெளியே வந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசுகிறது.

ஒப்பந்தக்காரர்கள் யாருக்கும் கொடுப்ப தில்லை என்று "கொள்கை நோன்பு' நோற்பவர்கள் இல்லை. எத்தனை தடவைதான் கொடுப்பது? யார் யாருக்குத்தான் கொடுப்பது? என்பதுதான் அவர்களின் கலகத்தின் அடிப்படை.

Advertisment

அவர்கள் சொல்லியிருப்பதில் குறிப்பான செய்தி எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கேட்கிறார்கள், மிரட்டுகிறார்களே என்பதுதான். குறிப்பாக வடசென்னையிலாம்.

அதனுடைய பொருள் ஆளுங்கட்சிக்குக் கொடுப்பது வழக்கம்தான் என்றாலும் ஒப்பந்தம் முடிவாகும் இடத்தில் "எவ்வளவு கொடுத்தால் கட்டுப்படியாகும்' என்பது பேசி முடிவு செய்யப்பட்டு விடுகிறது. அதன்பிறகு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டுவார்கள் என்றால் எப்படித் தொழில் செய்வது?

ஏற்கனவே நூறு ரூபாய் ஒரு சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அறுபது ரூபாய்க்குத்தான் வேலை நடக்கிறது. நாற்பது ரூபாய் பல கைகளுக்குப் பங்கிடப்படுகிறது. போட்ட ஆறாவது மாதத்தில் சாலைகள் வாயைப் பிளந்து விடும்.

இப்போது தொடர்புடையோர் நீங்கலாகச் சட்டமன்ற உறுப்பினர்களும், அதுவும் எதிர்க் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கு கேட் பது என்று வந்துவிட்டால், அந்தச் சாலைகளில் என்னதான் மிஞ்சும், வெறும் தாரைத் தவிர.

நான் அண்ணஞ்சார் தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தபோது, காரைக்குடியில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நகரத்திற்கு, மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்குச் சிமெண்டுச் சாலை ஒன்று போட்டார்கள்.

தார்ச்சாலை போடுவதைப் பார்த்திருக் கிறோம். சிமெண்டுச் சாலை எப்படிப் போடுவார்கள் என்பதைப் பார்த்ததில்லை என்பதால், பையன்களெல்லாம் அதைப் பார்க்கப் போனோம். சிமெண்டைப் பரப்பி, பாத்தி கட்டித் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்கள்.

போட்டு முடிந்த பிறகும் போய்ப் பார்த்தோம். வழுவழு என்றிருந்தது சாலை.

அதற்குப் பிறகு மிதிவண்டி ஓட்டிப் பழகுவது, மிதிவண்டிப் பந்தயங்கள் நடத்துவது எல்லாமே அந்தச் சாலையில்தான்.

இதிலே என்ன வியப்பென்றால், அந்தச் சாலை அறுபது ஆண்டுகளைக் கடந்து, சிறு சிறு குறைகளோடு இன்னும் உயிர்ப்புடன் புழக்கத்தில் இருக்கிறது.

ஊர் பெருகி விட்டது. அண்மையில் கழிவு நீர்க் குழாய்கள் பதிப்பதற்காக, அந்தச் சாலையின் நடுவே பிளந்து பதிப்பது என்று நகராட்சி முடிவு எடுத்தபோது, தொண்டு நிறுவனத்தினர் சிலர் கூடி, அதன் பாரம்பரியப் புகழ் போய்விடும் என்பதால் சாலையின் ஓரத்தில்தான் கழிவுநீர்க் குழாய்களைப் பதிக்க வேண்டும் என்று செய்த கலகத்தின் காரணமாக, அந்தச் சாலையின் ஓரத்தில் அவை புதைக்கப்பட்டன.

அந்தச் சாலையைப் போட்ட ஒப்பந்தக்காரர் (Contractor) "நேமம் மைக்கேல் உடையார்' என் தகப்பனாரிடம் அவர் நெருக்கம், ஆகவே எனக்குத் தெரியும்.

pp

அண்மையில் கற்பகம் அம்மையார் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, (அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இத்தகைய பெருச்சாளிகள்தாமே இரண்டு கட்சிகளிலும் இருக்கிறார்கள்) காரைக்குடி குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து முத்தாளம்மன் கோயில் வரை ஒரு சிமெண்டுச் சாலை போட்டார். போட்ட மூன்றாவது மாதத்தில் வாயைப் பிளந்து குண்டும் குழியுமாகி விட்டது. வண்டிகளெல்லாம் அச்சு ஒடிந்து விடும் என்று சுற்றுச் சாலையில் செல்லத் தொடங்கின. கற்பகம் மிகவும் விவரமானவர். யாரையும் நம்பமாட்டார், நேரடி வரவு செலவுதான்.

காரைக்குடியில் நாற்பத்தி ஐந்து ஆண்டு களாக சே.நா.விசயராகவன் சிறப்புற நடத்தி வரும் காந்தியத் தொண்டர் மன்ற விழாவில் நான் பேசும்போது குறிப்பிட்டேன்: அறுபது ஆண்டுகளாக உயிர்ப்புடன் திகழும் தொடர்வண்டி நிலையச் சிமெண்டுச் சாலைக்கு (அதன் ஒப்பந்தக் காரர்) "நேமம் மைக்கேல் உடையார் சாலை' எனப் பெயரிட வேண்டும்.

மூன்றே மாதத்தில் வாயைப் பிளந்துவிட்ட குதிரை வண்டி நிறுத்தச் சிமெண்டுச் சாலைக்கு "நகர்மன்றத் தலைவர் கற்பகம் சாலை' எனப் பெயர் சூட்ட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொருவரின் யோக்கியதையும் மக்களுக்கும் வரலாற்றுக்கும் தெரிய வரும்.

அந்தப் பேச்சு பெரும் புகழ் பெற்றது. செய்தித்தாள்களில் விரிவான இடத்தைப் பெற்றது.

என் மீது செயலலிதா பெருஞ்சினம் கொண் டதற்கான பல காரணங்களில் அந்தப் பேச்சும் ஒன்று.

ஆள்பவர்கள் இராசாசியாகவும், காமராசரு மாக இருந்தால், ஒப்பந்தக்காரர்கள் மைக்கேல் உடையார்களாக இருப்பார்கள்.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எடப் பாடியும், இசுடாலினுமாக இருந்தால், ஆளுங் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்க்கு மட்டுமில்லை, எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்க்கும் வால் முளைத்துவிடும். பங்கு பலன்கள் வந்து விடும்.

ஒப்பந்தக்காரர்களும் கலகம் செய்து பார்த்துவிட்டு, "நமக்கென்ன வந்தது?' என்று வெறுந்தாரை ஊற்றி விட்டுப் போவார்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஒரு வகையில் கூட்டணிக் கட்சிகள்தாம். தமிழ்நாட்டுக்குச் சீமைச் சாராயம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பாதி தி.மு.க.வுடையது. பாதி அ.தி.மு.க.வுடையது.

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால், தி.மு.க. கப்பம் கட்டும். தி.மு.க. ஆட்சியில் இருந்தால் அ.தி.மு.க. கப்பம் கட்டும். இப்படி ஒரு ஏற்பாடு எந்த மாநிலத்திலாவது உண்டா? அதுதான் திராவிடப் பாரம்பரியம்.

எடப்பாடி ஆட்சி ஏன் கவிழ வேண்டும் என்று இரண்டு திராவிடக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுமே நினைக்கிறார்கள்.

ஒரு சங்கம் வெளிப்படையாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரும் "கேட்கிறார்' என்று சொன்ன பிறகு, இசுடாலின் கூப்பிட்டு அவர்களைக் கண்டிக்க முடியாதா? எப்படி முடியும்? கண்டிக்கிறவர் அண்ணாவா?

நான்கு ஆண்டுகளாகப் பிசிறில்லாமல் ஆட்சி நடத்துகிறாரே எடப்பாடி.

உள்ளுக்குள் அ.தி.மு.க.வின் சிறந்த கூட்டணிக் கட்சி தி.மு.க.தான்.

ஆட்சி மாற்றம் என்பது தலைமை மாற்றமும் சட்டமன்ற உறுப்பினர்களின் வரிசை மாற்றமும் தானே.

பந்தியில் முதல் வரிசையில் இருந்தால் என்ன? கடைசி வரிசையில் இருந்தால் என்ன? விருந்து ஒன்றுதானே!

ஒப்பந்தக்காரர்களின் சங்கம் அப்படித்தானே சொல்கிறது. இந்தக் குற்றச்சாட்டினைக் கேட்டு இரண்டு தலைவர்களில் யாராவது கொதித்ததுண்டா?

"எதிரிக்கு ஏன் கொடுத்தாய்' என்று அவரோ, "எதிரியிடம் ஏன் வாங்கினாய்' என்று இவரோ கேட்டதுண்டா?

கிராமங்களில் சொல்வார்கள் :

கூட்டுக் களவாணிகள்!

(தொடரும்)