அந்த அடையாளம் கடைசிவரை தேவைப்பட்டது!
பேராசிரியர் அன்பழகன் காலமாகி விட்டார். திராவிட இயக்கத்தின் பெரியார் தலைமுறைத் தலைவர்.
பெரியாரால் உணர்வூட்டப்பட்டு, அண்ணாவால் செறிவூட்டப்பட்டு வளர்ந்த பழைய தலைமுறைகளின் தலைவர்.
அவர் பணியாற்றியது தமிழ்த்துறையில் என்பதால், திருக்குறள் மற்றும் பழந்தமிழ் நூல்களில் சிறந்த பயிற்சி இருந்தது.
அவருடைய பேச்சு தனித்தன்மை வாய்ந்தது. தேர்ந்தெடுத்த சொற்கள் அவருடைய பேச்சில் ஆட்சி புரியும். ஒரு கருத்தைத் தர்க்க பூர்வமாக வளர்த்தெடுத்து, பேச்சை மனங்கொள்ளும் வகையில் நிறைவு செய்வார் அன்பழகன்.
இன உணர்வுதான் அவருடைய எல்லாப் பேச்சுகளுக்கும் மையம்.
கால்டுவெல், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரிடம் தோய்ந்து வளர்ந்தவர் என்பதால் அவருடைய பேச்சில் வடசொற்கள் மிக அருகியே காணப்படும்.
அண்ணா புதிய தலைமுறையை ஈர்த்தார். நல்ல தமிழில் ஒரு புதிய பேச்சுப் பாணியையே தோற்றுவித்தார். அவரைப் பின்பற்றிப் பேசுகின்ற ஒரு பேச்சாளர் படையே அவரைத் தொட்டு உருவாகியது. ஏராளமான தாளிகைகள் தி.மு.க.வின் சார்பாக வெளிவந்தன.
ஆய்ய்ஹக்ன்ழ்ஹண் ஹப்ள்ர் ள்ல்ர்ந்ங் என்று அன்றைய ஆங்கில நாளிதழ்கள் ஒரு வரியில் அவருடைய இருப்பை மட்டும் புலப்படுத்திச் செய்தி எழுதுமே ஒழிய, அவர் என்ன பேசினார் என்பது அந்நாளிதழ்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
பெரும்பான்மையான நாளிதழ்கள், வார இதழ்களின் உரிமை பார்ப்பனர்களிடமிருந்தது அல்லது எதையும் தீர்மானிக்கும் ஆசிரியப் பொறுப்பு பார்ப்பனர்களிடமிருந்தது.
திராவிட இயக்கத்தின் தோற்றமே ஆரிய எதிர்ப்பில் மையங்கொண்டிருந்ததால் அண்ணா அனைய தலைவர்களின் பேச்சுகள் மக்களைச் சென்றடைய வாய்ப்பில்லை.
ஆகவே முன்வரிசைத் தலைவர்கள் எல்லாருமே எழுத்திலும் பேச்சிலும் வல்லமை கொள்வது காலத்தின் கட்டாயமாகியது.
திராவிட நாடு, முரசொலி, மன்றம், தென்றல் என எண்ணற்ற தாளிகைகள் படையெடுத்தன.
ஈ.வே.கி.சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். இவர்களின் பங்கு அளப்பரியது.
சம்பத்தின் பேச்சில் கருத்தோட்டம் மிகுந்திருக்கும். அவருடைய குரல் மிக இனியது. சொற்களைக் கையாள்வதில் மிகுந்த தேர்ச்சி உடையவர் சம்பத். கருத்துக்களின் பெட்டகம் அவர்.
அவருடைய இழப்பு கழகத்திற்கு நிகரற்ற இழப்பு. பெரியாரின் அண்ணன் மகனான சம்பத் பெரியாரோடு, மாறுபாடு கொண்டு, அண்ணாவின் தலைமையை ஏற்றது அண்ணாவுக்குக் கூடுதல் மதிப்பளித்தது.
அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும் திரைத்துறை வழியே இயக்கத்தை மிக எளிமையாகவும் வலிமையாகவும் எடுத்துச் செல்ல முடிந்தது.
"அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் கண்ணதாசனின் வரிகள் எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்டக் கிராமமான சாலைகளே இல்லாத பட்டி தொட்டி வரை போய்ச் சேர்ந்தது.
வேலூரில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கோடு மோதி ஈ.வே.கி.சம்பத் நிலைகுலைந்து வெளியேறும் நிலைக்கு உள்ளானார். அண்ணா சம்பத்திடம் உருகினார். சம்பத்தின் அளப்பரிய தேவையை உணர்ந்திருந்தார். கசிந்தார், கண்ணீர் மல்கினார். ஆனால் நடப்பு அரசியலில் எம்.ஜி.ஆரின் பயன்பாடு (மற்ண்ப்ண்ற்ஹ்) இழப்பதற்குரியது இல்லை என்பதில் அண்ணா திண்ணமாக இருந்தார்.
சம்பத் தன் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் அவர் ஊன்றி நின்றிருந்தால், அண்ணாவுக்கு மாற்றுத் தலைவராக உருவாகி நிலைபெற்றிருப் பார். அவர் கோபதாபங்களில் இந்திய தேசிய அரசியலில் போய்க் கரைந்து, தனக்குரிய உயரத்தை இழந்து விட்டார்.
அன்று சம்பத்தின் வெளியேற்றம் எம்.ஜி.ஆரின் இன்றியமையாமையை வெளிப் படுத்தவில்லையா?
வழவழப்பான நெடுஞ்செழியனோ, தன்னைப் பெரிதும் வருத்திக் கொள்ளாத அன்பழகனோ தலைமைக்கான பந்தய மைதானத்தை அடையப் போவதில்லை.
ஆகவே, எஞ்சியவர்கள் இருவர்தாம். ஒருவர் கலைஞர், இன்னொருவர் எம்.ஜி.ஆர்.
கலைஞர் முதல்வராவதற்குப் "பின் வலிமையாகத்' திகழ்ந்தவரே எம்.ஜி.ஆர்.தான். இராமாவரம் தோட்டம்தான் அண்ணாவின் வழித்தோன்றலைத் தீர்மானித்தது.
கலைஞர் முதல்வராகிவிட்டார். கட்சியிலும் ஆட்சியிலும் முதல் நிலைதான். ஆனால் அது தன்னுடைய வலிமையினால் மட்டுமே அடைந்த இடம் இல்லை என்பதனால், அவருக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
மாடு தன் போக்குக்குப் போக முடியாதவாறு அதன் கழுத்தில் ஒரு கட்டை கட்டி விடப்படுவது போல், எம்.ஜி.ஆர். என்னும் கட்டை கழுத்தை விட்டு அகலாதவரை தன்னுடைய முதலிடம் பெயரளவில்தான் என்பது கலைஞருக்குத் தெரிந்திருந்தது.
பெயருக்கு முதல்வராக இருக்க எடப்பாடி அல்லவே கலைஞர்.
அதேநேரத்தில் இராமாவரம் தோட்டத்தின் தயவினால் முடிவு செய்யப்பட்ட பதவிதானே அது என்னும் எண்ணமும் எம்.ஜி.ஆருக்குக் கொஞ்சமும் குறையாமல் இருந்தது.
மோதலுக்கு நாள் குறிக்கப்படுவது இயற்கைதானே. எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார். அண்ணா எதைச் செய்யத் தயங்கினாரோ, அதை கலைஞர் செய்து முடித்துவிட்டார்.
அதனுடைய விளைவு கலைஞர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது. ஆட்சி வளையத்திற்கு வெளியே, அவர் அவ்வளவு காலம் தாக்குப் பிடித்துத் தன்னுடைய கட்சியையும் தாக்குப்பிடிக்கச் செய்ததுதான் கலைஞரின் தனித்திறமை. அவருக்குள்ள நிகரற்ற தலைமைக் கூறு. ஆனால் காலம் சம்பத்திற்கு எதிராக எம்.ஜி.ஆரைத்தான் தாங்கியது. அதுபோல் கலைஞருக்கு எதிராகவும் எம்.ஜி.ஆரைத்தான் தாங்கியது.
திராவிட இயக்க நாட்காட்டி போடுவார்கள் அந்தக் காலத்தில். அதில் ஐம்பெருந்தலைவர்கள் படம் போட்டிருக்கும். அதில் எம்.ஜி.ஆர். படம் இருக்காது.
திராவிட இயக்கத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட (பெரியாரும் அப்படித்தான்) தலைவராக அண்ணா இருந்தார்.
கேள்விக்கு உட்பட்டவ ராக அதே சமயத்தில் சம்பத் தாலும், கருணாநிதியாலும் கூட வெல்ல முடியாத தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார் என்பது அறிவியக்கத்தில் வியப்பு தானே.
வெறும் திரைக் கவர்ச்சி அதற்குக் காரணமாக முடி யாது. அது அவருக்கு அடித்தளம் அமைத் துத் தந்திருந்தாலும் அவரிடமும் இயற்கை யான ஒரு தலை மைத்துவம் இருந்திருக் கிறது.
திராவிட இயக் கத்தின் மூன்றா வது வரிசையில் இந்தப் பக்கத்திற்குக் கலைஞர், அந்தப் பக்கத்திற்கு எம்.ஜி.ஆர்., செயலலிதா அந்த வரிசையில் வர முடியாது. அது இயற்கை முரண். அவருடைய ஆட்சிப் போக்கும் அந்த முரணை வெளிப் படுத்திக் கொண்டே இருந்தது.
இசுடாலினும் எடப்பாடியும் இயக்கத் தலைவர்கள் அல்ல. சங்கங்களுக்கு அடுத்த தலைவர் வருவது போன்றவர்கள் இவர்கள்.
தி.மு.க.வில் நான்காம் வரிசை இசுடாலின், ஐந்தாம் வரிசை அவருடைய மகன் என்று வரிசை பிடித்து படங்கள் போடுகிறார்கள்.
தி.மு.க.வுக்கு இருக்கும் அளப்பரிய சொத்துக்குத்தான் வாரிசுரிமையாக முடியும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது. அந்தச் சொத்து, ஆட்சியை வைத்து நீங்கள் உண்டாக்கிய சொத்து. அது நீங்கள் விரும்பும் கைகளுக்குப் போக ஏற்பாடு செய்வது எளிது.
ஆனால் இயக்கம் உங்களுக்கு உட்பட்ட தில்லை. காலத்திற்கு உட்பட்டது.
கலைஞரை அண்ணாவா தேர்வு செய்தார்? அண்ணாவின் புகழுக்கும் இயக்கத்தின் வலிமைக்கும் கலைஞரால் எந்தக் குறையும் ஏற்படவில்லையே. தானாக முளைத்த தலைமை கலைஞரின் தலைமை.
ஆனால் கலைஞரின் குடும்பப் பற்று வரலாற்றில் தன்னுடைய வம்சாவளி நிலை பெற வேண்டும்.
கட்சியில் தடையாக இருக்கக் கூடும் என்று கருதப்பட்டவர்களெல்லாம் கலைஞரால் அகற்றப்பட்டார்கள் அல்லது தள்ளி வைக்கப் பட்டார்கள்.
ஆட்சி அதிகாரம் கையிலிருந்ததால் அது எளிதாக நடந்தது. அன்பழகன் துணை முதல்வர் ஆக்கப்படவில்லை. மகன் இசுடாலினே ஆக்கப்பட்டார்.
இப்படித்தான் இந்தியா முழுவதிலும் நடந்தது, நடக்கிறது.
இசுடாலின் தலைமையை ஆவணப்படி பரிந்துரைத்தவரே அன்பழகன்தான்.
கலைஞர் இராசதந்திரி என்பதால் அன்பழகன் இதற்குப் பயன்படுத்தப்பட்டார். கலைஞரின் குறிப்பறிந்தது செயல்பட்ட அன்பழகனின் நட்பு சிராய்ப்புக்குள்ளாகாமல் கடைசி வரை கலைஞருடன் நீடித்தது.
அன்பழகன் அண்ணாவின் தலைமையில் பின்பு கலைஞருக்குப் பொதுச் செயலாளராக, அதன்பிறகு இசுடாலினுக்கும் பொதுச் செயலாளராக.
இந்தப் பொதுச்செயலாளர் பதவி கூட அவர்கள் அன்பழகனுக்குத் திராவிட இயக்கத்தின் பழைய தலைமுறை அடையாளம் என்று கருதிக் கொடுத்ததுதான். இயற்கை எய்தும் வரை அதில் இருந்தார்.
அன்பழகனின் அந்த அடையாளம் தலைமைகளுக்குக் கடைசி வரை தேவைப் பட்டது.
(தொடரும்)