"எதிர்ச் சிந்தனைகளைக் கவனியுங்கள்'
இரசினிகாந்த் எப்போதாவது தோன்றுகிறார், எதாவது சொல்கிறார். உடனே அது பற்றிக் கொள்கிறது.
தொலைக்காட்சிகள் அதை விவாதப் பொருளாக்குகின்றன. எல்லா செய்தித்தாள்களும் அதை முதன்மைப்படுத்துகின்றன. ஆங்கில நாளிதழ்களே, தமிழ்நாட்டு அரசியல் என்று வந்துவிட்டால், இரசினி குறித்துப் பெரிதும் அக்கறை காட்டுகின்றன.
இரசினி எதிலும் இன்னும் தன்னைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அரசியல் சார்ந்த பல சிக்கல்களில் அவருடைய நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஆயினும் அவர் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறார்.
அரசியல் சிக்கல்கள் அரசியல்வாதிகளின் சிக்கல்கள் இல்லை. அவை பொதுமக்களின் சிக்கல்கள்தாம்.
வேளாண் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு என்றாலும், நீட் தேர்வு என்றாலும், காஷ்மீர் சிக்கல் என்றாலும், முத்தலாக் சொன்ன முகம்மதியனை மூன்று ஆண்டு சிறையில் வைப்பது என்றாலும், பணமதிப்பைக் குலைப்பது என்றாலும், ஐம்பது ரூபாய் தோசைக்கு ஒம்பது ரூபாய் வரி விதித்தது என்றாலும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.150ஐத் தொட்டது என்றாலும், எல்லாமே மக்கள் சிக்கல்கள்தாம்.
சிக்கல்கள் இயற்கை சார்ந்த சிக்கல்களாகவும் இருக்கக்கூடும். அரசின் முட்டாள்தனத்தால் ஏற்படும் சிக்கல்களாகவும் இருக்கக்கூடும்.
சிக்கல்கள் ஒரு பிரிவினரையோ, மக்கள் முழுவதையுமோ பாதிக்கக்கூடும். அப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்போது மக்களின் பரிதவிப்பை வெளிப்படுத்துவோர் அரசியல்வாதிகள்தாம்.
மக்கள் சிக்கல்களை எடுத்துப் பேசும் அரசியல்வாதிகள் சிறைக்குச் செல்லவும், காவலர்களின் தடியடிக்கும், துப்பாக் கிச் சூட்டுக்கும் கூட ஆளாவது உண்டு. அதன் காரணமாக அவர்கள் மக்களின் பரிவினையும், மதிப்பினை யும் பெற்று அதிகாரத்தில் அமர் வதும் உண்டு. தவறாகச் சிக்கல் களைக் கையாண்ட ஆட்சியாளர்கள் ஆட்சியை இழப்பதுண்டு.
1967-ல் அரிசி மற்ற உணவுப் பொருள்களின் "தக்குத்தானான' விலைவாசி உயர்வு, இந்தி பேசாத தமிழ்மக்களின் மீது இந்தி திணிப்பு என இரண்டும் முப்பதாண்டுகளாக ஆண்ட காங்கிரசை ஒன்றுமில் லாமல் ஆக்கிவிட்டது.
மாணவர்களைச் சுட்டு, டில்லி ஆதிக்கபுரியாரிடம் "பாறை போன்ற வர் பக்தவத்சலம்' எனும் பாராட் டைப் பெற்றார். அத்தோடு பக்தவத் சலம் ஒழிந்தார். காங்கிரசும் சேர்ந்து ஒழிந்து விட்டதுதான் சோகம்.
அதன்பின் தி.மு.க. செய்த பிழைகளால், கருணாநிதி ஒருமுறை அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற் றார். இன்னொரு முறை செயலலிதா மண்ணைக் கவ்வி, அ.தி.மு.க. வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு கட்சியின் செயல்பாடுகளுக்கும் அவற்றின் வெற்றி தோல்விகளுக்கும் உறுதி யாகத் தொடர்பு உண்டு.
தி.மு.க. அமைச்சர் ஆ.இராசா வின் 2ஜி ஊழல் பறையறையப்பட்டு, அதன் விளைவாகத் தி.மு.க. தோற் றது. மன்மோகன்சிங்கின் ஆட்சி யையும் அது மண்ணைக் கவ்வச் செய்து மோடியை அரியணை ஏற்றிவிட்டது காங்கிரசின் இன் னொரு சோகம். இது கூட்டணி ஊழலுக்குக் காங்கிரசு கொடுக்க நேரிட்ட காவு.
இங்கே தமிழ்நாட்டில் தி.மு.க. வும் அ.தி.மு.க.வும் கடந்த ஐம்ப தாண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
தலைமைகளின் வேறுபாடே கட்சிகளின் வேறுபாடு. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகளில் வேறு பாடு இல்லை என்பது வியப்பில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிந்த கட்சி. ஊழலிலும் கிஞ்சித்தும் வேறுபாடில்லை என்பதுதான் வியப்பு.
தி.மு.க.வை ஊழல் என்று சொல்லி கட்சி தொடங்கி, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும் ஊழலானது.
சர்க்காரியா கமிசன் வரை விரிவு பெற்று, ஊழலின் உச்சத்தைத் தொட்ட தி.மு.க. இந்திராவின் தயவால் சிறைக்குச் செல்லாமல் வெளியே வந்தது ஒருபுறம் என்றால், ஊழலுக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற செயலலிதா இன்னொருபுறம். இரண்டு கட்சிகளிலும் மந்திரியானவர்களெல்லாம் அந்தந்த மாவட்டங்களின் முதல்நிலைப் பணக்காரர் களாக ஆகிவிட்டார்கள்.
இந்த இரு கட்சிகளையும் அகற்றக் கடந்த ஐம்பதாண்டுகளில் பலர் முயன்றனர். மூன்றாவது அணிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதுவும் கடை போகவில்லை.
புதிய கட்சிகள், புதிய அணிகள் கடை போகாததற்குக் காரணம் கிராமங்கள் வரை ஊடுருவிய கிளை அமைப்புகள் அந்தக் கட்சிகளுக்கு இல்லை. அவற்றிற்குப் புதிய கருத்தோட்டங்களும் இல்லை.
ஒரு கட்சிக்குள் ஒரு மனிதன் நுழைய வேண்டும் என்றால் அவனைப் பிணைக் கின்ற கருத்து ஏதோ ஒன்றாவது இருக்க வேண்டும்.
"ஒக்ங்ஹள் ம்ர்ஸ்ங் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்' என்பார்கள். பூமி சுழல்வது எந்த அச்சில் என்றாலும், அரசியல் சுழல்வது கருத்து என்னும் அச்சில்தான். அவன் சேர்வது மனமகிழ் மன்றத்தில் அன்று. ஓர் அரசியல் கட்சியில். அதனால் அவன் எதிர்கொள்ள நேரும் துயரங்கள் ஏராளம். எதற்காக அந்தத் துயரங்களைத் தாங்க வேண்டும் என்பதற்குக் காரணம் வேண்டும்.
காமராசர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார்? நம்முடைய நாடு அயலானால் சுரண்டப்படுகிறது என்னும் கருத்து அவரனையோர்க்குக் காந்தியால் ஊட்டப் பட்டது. வணிகம், பொருளீட்டல் என்னும் இயல்பான வாழ்க்கை முறைகளிலிருந்து விடுபட்டு, மக்களைத் திரட்டல், கருத்தூட்டல், சிறை வாழ்க்கை என்னும் நிலைக்கு அவர் போகும்படியான உந்துதலை ஏற்படுத்தியது அது. சரியான கருத்தூட்டல், இந்தியாவைத் திரட்டியது.
"புரட்சி வேண்டும்' என்கிறார் இரசினி. அது மிகவும் கூடுதலான அழுத்தம் உடைய சொல். மக்களிடம் மனம் மாற்றம் என்று எதிர்பார்ப்பது ஒன்றே போதுமானது.
இந்த இரண்டு அழுக்குமூட்டைகளையும் வெளியில் தூக்கி வீசி விட அவர்கள் வெகுகால மாய்த் தயாராக இருக்கிறார்கள். அந்த நுகத்தடியில் யார் கழுத்தைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
ஆனால் எந்த வழியில் இந்த நாட்டைப் புதிய தலைமை நடத்தும் என அவர்களுக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் ஏறி அமர்வதே ஊழல் ஒழிப்பாகிவிடும். உட்கார்ந்த பிறகு செய்யப் போவதென்ன?
ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பிற கட்சிகளிலிருந்து வருபவர்கள் சுவைஞர்கள் எனப் பலருக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படும் என்பது சரி. இவர்கள் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கப் போகும் பொதுக் கருத்துகள் என்ன?
இது இந்துக்களின் நாடு என்பது பா.ச.க.வின் கொள்கை. முசுலிம்களும் கிறித்துவர்களும் அற்ற கட்சியாக பா.ச.க. இருப்பதற்கு அதனுடைய அடிப் படைக் கொள்கையே காரணம். அதுபோல் பொது வுடைமைக் கட்சியில் அம்பானிகளும் அதானி களும் சேருவார்களா? ஆதரவாவது கொடுப்பார்களா?
இராமதாசிடம் இருப்பவர்கள் திருமாவள வனிடமும் திருமாவளவனிடம் இருப்பவர்கள் இராமதாசிடமும் போவார்களா?
எல்லாத் தரப்பும் விரும்பும் கொள்கை என்று ஒன்று கிடையாது. நாட்டுக்கு விடுதலை என்ற போது கூட காந்தியோடு எல்லாரும் இணைய வில்லை. நீதிக்கட்சி வெள்ளையனுக்குப் பின்பாட் டுப் பாடியது. அவர்களுக்கு எதிரி பார்ப்பனரே தவிர வெள்ளையர் அல்லர். ""நாட்டுக்கு விடுதலை அளித்து விடாதீர்கள். அப்படி அளிப்பது என்று முடிவுக்கு வந்துவிட்டால், இலண்டனில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை மட்டுமாவது ஆளுங்கள்'' என்று மன்றாடினார் பெரியார்.
"ஆகவே ஒவ்வொரு அமைப்பும் எதைக் களைய வந்துள்ளது? யாரை எதிர்த்துப் போராடு கிறது?' என்பனவற்றை எல்லாம் வெளிப்படையாக அறிவித்தால்தான், அந்தக் கருத்துப் புள்ளியில் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைவார்கள்.
எல்லாரும் ஒன்றிணைவதற்கான "கருத்துப் புள்ளி எது' என்பதுதான் ஒரு கட்சியைக் கட்டுவதற்கான அடிப்படை. அது தவிர மற்ற எல்லாவற்றைப் பற்றியும் பேசினார் இரசினி.
ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் "இயந்திர கதியில்' செயல்பட்டுப் பழக்கப்பட்டவர்கள். "உயரத்தில் இருந்து' அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர் கள். மக்களின் மனவோட்டம் தெரியாதவர்கள். அவர்களால் கலந்து பழக முடியாது.
நீங்கள் கட்சி தொடங்கித் தொண்டர்கள் களத்தில் செயல்படுவதை அறிய முடிந்தால், நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும்.
ஓய்வு பெற்றவர்கள், அறிவுள்ளவர்கள் என்பது அறியாமை. வெளி விவகாரத் துறையில் உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவரை, ஓய்வு பெற்றபின் இப்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஆக்கி இருக்கிறார் மோடி. அந்தத் துறை "செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்தது போல்' ஆகிவிட்டது. கிருட்டிண மேனன் எங்கே? இப்போதிருக்கும் சங்கர் எங்கே?
இந்தியாவில் "மகா' என வரலாற்றாசிரியர் களால் போற்றப்படும் பேரரசர்கள் இருவர். அவர்களில் ஒருவரான மகா அக்பருக்குக் (Akbar the great) கையெழுத்துப் போடத் தெரியாது.
நம் காலத்தின் இன்னொரு மிகச் சிறந்த ஆட்சியாளர் காமராசருக்குக் கையெழுத்துப் போடத் தெரியும். பொதுநல உணர்வு, கூரிய இயற்கை அறிவு, செயல் ஊக்கம், நேர்மை, இவையே தேர்வுக்கான இலக்கணம்.
இரசினி அவர்களே!
தாளம் போடுபவர்களைத் தள்ளி வையுங்கள்,
எதிர்ச் சிந்தனைகளை கவனியுங்கள்!
(தொடரும்)