அமித்சா, சட்டத்தை நகைப்புக்குரியதாக்கவில்லையா?
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 4.7 விழுக்காடாகச் சரிந்து இடுப்பொடிந்து கிடக்கிறது. ஏற்றுமதி மறைந்து விட்டது. தொழில் உற்பத்தி மந்தமாகி விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் தலையை விரித்துக் கொண்டு ஆடுகிறது. பங்குச் சந்தை தலைகீழாகத் தொங்குகிறது.
எல்.ஐ.சி. உட்பட மிகவும் இலாபகரமான மைய அரசின் பொதுப் பங்குகள் விற்கப்படுகின்றன. இலாபகரமானவையே விற்பனைப் பட்டியலுக்கு வந்துவிட்ட பிறகு, ஏர் இந்தியா ஏலம் விடப்படுவதைப் பற்றி கேள்வியே இல்லை. நிலைமையைச் சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் இருப்பில் கைவைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்றால், நம்முடைய நாட்டின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து மிக எளிய மனிதனுக்குக்கூடப் புரியும்தானே.
சுப்பிரமணியசாமி வெளிப்படையாகக் கூறுகிறார்: ""தலைமையமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது, நிதியமைச்சர் நிர்மலாவுக்கும் பொருளாதாரம் தெரியாது. நிலைமை வேறுவிதமாக எப்படி இருக்கமுடியும்?''
சமைக்கத் தெரியாதவன் சமையல் அப்படித்தான் இருக்கும் என்பது மிகவும் கேவலமான குற்றச்சாட்டு. சமைக்கத் தெரியாதவருக்குச் சமையல் கட்டில் என்ன வேலை? ஆனால் நிதியமைச்சர் நிர்மலா கூறுகிறார்: "நிலைமை நன்றாக இல்லைதான்; ஆனால் அபாயமணியை அழுத்தும் நிலை இன்னும் ஏற்படவில்லை'.
நிதியமைச்சர் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு உள்ளாகி விட்டால், அபாயமணியை அழுத்தும் காலம் தொலைவில் இருக்க முடியாதுதானே!
ஒரு பெரிய நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்கு, பரந்த மனப்பான்மை என எதுவுமே இல்லாத இருவரிடம் நாடு மாட்டிக்கொண்டுவிட்டது.
ஒருவருடைய ஆட்சியில் நல்லது நடக்கவில்லை என்பது கூட குற்றமில்லை. காரணமே இல்லாமல் எந்தத் தேவையும், எந்த நெருக்கடியும் இல்லாமல் நாடு பற்றி எரிவதுதான் கொடுமையிலெல்லாம் கொடுமை.
தலைநகரம் தில்லி பற்றி எரிகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட வர்கள் எந்தக் காரணமும் இல் லாமல் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்படுவோம் என்பதை அரசுக்கு கூற வந்த வர்கள் அவர்கள். தனிநபர் சத்தியாக்கிரகம் எடுபடாது இந்த அரசிடம் என்று திரளாக குழுமி உணர்த்த விரும்பினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த விலை நாற்பது உயிர்கள். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காயம்பட்ட நிலையில்.
இந்த உயிர்ச் சேதம் உரிமை கேட்டுப் போராடியதன் விளைவு! அப்படி ஓர் உரிமை "உனக்கில்லை' என்று அரசு கருதும்போது அதை எதிர்த்துப் போராடுதல் என்பது அரசின் பார்வையில் சட்டமீற லாகும். எது சட்டமீறல் என முடிவு செய்வது மக்க ளில்லை, அதிகாரத்தில் இருப்பவர்கள்.
சட்டம் என்பது மக்களாட்சியில் மக்க ளுக்காக என்று பொய் யாக கற்பிக்கப்பட்டிருக் கிறது.
இப்படி ஒரு சட் டம் வேண்டும் என்று கடந்த எழுபதாண்டு கால விடுதலை பெற்ற இந்தியாவில் யாரும் கோரவில்லை. மோடி செய்த இந்த என்.ஆர்.சி., சி.ஏ.ஏ., என்.பி.ஆர். சட்டங்கள் இல்லாத இந்தியா எழுபதாண்டுகளாக ஒன்றும் குடிமுழுகிப் போக வில்லை.
நமக்கு நாமே அளித் துக்கொண்ட அரசியல் சாசனம் என்பதுதான் நம்முடைய சட்டநூலின் முகப்பு வாசகம்.
இதுபோன்ற சட்டங்கள் நாம் தேர்வு செய்து அனுப்பிய நம்முடைய பிரதிநிதிகளால் செய்யப்பட்டவை. ஆகவே அந்தச் சட்டங்கள் நம்மால் செய்யப்பட்டதாகவே பொருள்.
மோடி, அமித்ஷா போன்றவர்களின் ஐந்தாண்டு கால நமைச்சலைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக் கப்பட்ட இந்த சட்ட வடிவங்கள் உயிர்பெற, எடப்பாடியின் அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் பதினோரு பேர் வாக்களித்தார்கள்.
இந்தச் சட்டம் யாருக்காக வருகிறது? யாருடைய உரிமை களை இந்தச் சட்டம் பாதிக்கக் கூடும்? என்பன போன்ற கேள்விகளை இந்தப் பதினோரு பேரும் எழுப்பிப் பார்த்து, விடைதேட முயன்றதுண்டா?
இந்தப் பதினோரு பேரில் யாருக்காவது இது குறித்த தனிச்சிந்தனை உண்டா? பத்து இலட்சத்திற்கும் மேலான மக்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தங்க ளின் பிரதிநிதியாக இவர்களை அனுப்பி, இவர்கள் செய்யும் செயலை தாங்கள் செய்ததாக ஏற்றுக்கொள்கிறார்களே! மூளை யும் சுயமரியாதையும், நியாயத் தின்படி செயல்படும் தன்மையும் உள்ளவனைத்தான் அனுப்பு கிறோமா என்று கணப்பொழு தாவது சிந்தித்ததுண்டா?
நாம் தேர்ந்தெடுத்த பிரதி நிதிக்கு யோசனை இல்லை. இந்தப் பிரதிநிதிகளை ஒரு கட்சியில் கட்டுப்படுத்தும் தலைமைக்காவது யோசிக்கும் தன்மை உண்டா?
எழுபது ஆண்டுகளாக தேவைப்படாத சட்டங்கள் ஆட்சியினருக்கு இப்போது தேவைப்படுவது நமைச்சலின் காரணமாகவா? நன் மையின் காரண மாகவா?
எடப்பாடியின் கட்டளை அவர்களை மோடிக்கு இசைவாக வாக்களிக்கச் செய்தது. எடப்பாடி எந்தச் சிந்தனையின்பேரில் இந்த முடிவினை எடுத்தார்?
ஊழலான ஆட்சி, மேலான அதிகாரம் படைத்த இன்னொரு அமைப்புக்கு இசைந்து போகாவிட்டால் அதனால் பாதிப்பு ஏற்படும், அதிகாரம் பறிபோகக் கூடும் என்னும் அச்சம்தான் இத்தகைய கட்டளையை எடப்பாடி பிறப்பிப்பதற்குக் காரணம்.
எடப்பாடியை விட இசுடாலின் மேலானவர் இல்லை என்பது வேறு.
ஈழம் அழிவதற்கு சிங்களவனுக்குத் துணை நின்றது காங்கிரசு. பதவியை உதற முடியாமல் தமிழினம் அழிய காரணமானவர்கள்தாமே தி.மு.க.வினர். வரலாறே பொறுக்காத குற்றம் அது.
இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த அமித்ஷா சொன்னார்:
"முசுலிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை' என்று சட்டம் போட காரணம் ஆப்கானித்தானம், பாக்கித்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் துன்புறுத்தப்பட வாய்ப்பில்லை. ஆகவே அவர்களுக்கு குடியுரிமை அளிக்கத் தேவையில்லை.
கண்ணுக்குத் தெரிந்த ஒரு வரலாற்று உண்மை அமித்ஷா கண்ணை மூடிக்கொண்டு பார்க்க மறுக்கும் ஒரு கலப்படமற்ற உண்மை. பாக்கித்தான் என்னும் முசுலிம் நாடு, படையெடுத்துச் சென்று வங்கதேச முசுலிம்களை கொன்று குவித்தது. பாக்கித்தான் இராணுவம் வங்கதேசப் பெண்களை கற்பழித்துச் சூறையாடியது.
ஒரு முசுலிம் நாட்டின் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளான முசுலிம்கள் பல லட்சம் பேர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இந்திரா புகலிடம் அளித்தார். போர் முடிந்து பெரும்பான் மையோர் திரும்பிவிட்டனர். எஞ்சியவர்கள் யார் என இனம் காண கொண்டுவரப்பட்ட சட்டமே இது.
அசாமில் மிகக் குழப்பமான முறையில் தப்பும் தவறுமான ஒரு கணக்கெடுப்பு நடந்து முடிந் திருக்கிறது. அதில் தாங்கள் இந்தியர்கள்தாம் என ஆவணம் காட்ட முடியாதவர்கள் வெறும் 19 லட் சம் பேர்தாம். ஆவணம் இல்லாத எல்லாரும் சட்ட விரோதமானவர்கள் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அது இருக்கட்டும். இவர்களில் 12 லட்சம் பேர் இந்துக்கள். வெறும் 6 லட்சம் பேர்தான் முசுலிம்கள். ஒரு லட்சம் பிறர்.
இவர்களில் இந்துக்களுக்கு இடமளித்துவிடு வார்கள். வெறும் 6 லட்சம் பேரை வெளியேற் றத்தான் இந்தச் சுரங்கம் தோண்டும் சட்டம். அவர்களை எப்படி வெளியேற்றுவீர்கள்? தடுப்புக் காவலா? எவ்வளவு காலத்திற்கு? அல்லது யூதர்களை இட்லர் நடத்திய முறையா?
இந்த 6 லட்சம் முசுலிம்களை அசாமில் அடையாளப்படுத்த முடிந்தது போல இந்தியா முழுவதும் சில லட்சம் பேரை அடையாளப்படுத்தி, அதில் மற்றவர்களுக்கு உரிமை வழங்கிவிட்டு, முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு இந்தத் திட்டத்திற்கு ஏற்படப் போகும் செலவு ஐம்பதாயிரம் கோடி. வெறுப்பைத் தவிர இந்தத் திட்டத்தில் மிஞ்சி இருப்பது என்ன?
முசுலிம் மதத்தவரும் முசுலிம் நாட்டால் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள் என்னும் வரலாற்று உண்மை அமித்ஷா கொண்டுவந்த சட்டத்தை நகைப்புக்குரியதாக்கவில்லையா?
(தொடரும்)