(106) பெரியார் சமாதியில் புரண்டு படுத்திருப்பார்!
காந்திதான் இந்தியா வின் சிற்பி. ஏற்கனவே எப்போதும் இல்லாத ஒரு நாடு வெள்ளைக்காரனால் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டி ருந்தது. அவன் கட்டி வைத்த நாடு என்பதால், அவன் செல்லும்போது கயிறை உருவி விட்டுச் செல்வா னேயானால், நாடு பல கூறுகளாகச் சிதறிவிடும் என்னும் அச்சம் காந்திக்கு இருந்தது.
நாட்டுக்கு விடுதலை தேடித் தருவது ஒருவகைப்பாடு என்றால், அந்த நாடு வரலாற்றுக்குப் பழக்க மில்லாத நாடு என்பதால், அதைத் தொடர்ந்து கட்டிக் காப்பது இன்னொரு வகைப்பாடு என்பது காந்திக்குப் புரிந்திருந்தது.
விடுதலையைப் பெறுவதை விட, அந்த விடுதலையைக் கட்டிக் காப்பதே அதை விடப் பாடு என அந்தத் தலைவன் அறிந்திருந்தான்.
நாம் எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்று இல்லாத தாயை உருவாக்கி, பல தாய் ஈன்ற மக்களை எல்லாம், "இல்லாத' பாரத மாதாவின் மக்கள் என்று ""ஒரு பொய்யின் மீது இந்தியாவைக் கட்டினால்தான்'' அது நிலைபெற்று நிற்க முடியும் என்று பாரதி போல் கருதவில்லை காந்தி.
"பாரத் மாதா கீ சே' என்பது சவர்க்காரின் முழக்கம். பாரத் மாதா இந்து மக்களின் தாய் என்பது அவர் களின் வாதம். "நாவினில் வேதம் உடை யவள்' என்று பாரத மாதாவைத் துதிக்கின்றான் பாரதி.
""தெள்ளிய அந்தணர் வேதமும்
நின்றன் சீர்த்திரு நாமமும் ஓதி நிற்கின்றார்''
என்று பாரத மாதாவைத் துயில் எழுப்புகின்றான் பாரதி.
"வேதம் பாட வேண்டும், அதையும் பார்ப்பனர் பாட வேண் டும். அப்போதுதான் பாரத மாதா துயில் எழுவாள்'. ஏனென்றால் ஆரிய மக்கள்தாம் பாரத மாதாவின் தலைப் பிள்ளைகள் என்பது பாரதியின் உள்ளோட்டமாக இருக்கக்கூடும்.
பாரதி கட்ட விரும்பிய நாடு ஆரிய நாடு. பாரதம், பாரதிக்கு ஆரிய தேசம்தான். ""உன்னத ஆரிய நாடெங்கள் நாடே'' என்று வெளிப் படையாகவே பேசுகின்றான் பாரதி. பாரதியிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
செந்தமிழையும் செந்தமிழ் நாட்டையும் உயர்த்திப் பிடித்தவன் பாரதி என்றாலும், அவனைப் பொறுத்தவரை செந்தமிழ், நரர்களின் மொழி. சீரிய சமக்கிருதமே "தெய்வ பாஷை' பாரதியின் கட்டுரைகள் அப்படித்தான் பறை சாற்றுகின்றன.
எல்லா "சாதாரண பாஷைகளிடமிருந்து' வேறுபடுத்திக் காட்டச் சமக்கிருதம் "தெய்வ பாஷை' எனப்பட்டது எனப் பாரதி துந்துபி முழங்குகிறான்.
பாரதி தமிழைப் போற்றுவான், ஆனால் சமக்கிருதத்திற்கு நிகராக அல்ல.
பல நாடுகள் இணைந்த நாடுதான் இந்தியா என்பது பாரதிக்குத் தெரியாததன்று. அந்தத் தடயங்களை அழித்து, வடமொழியின் மீது, வேதத்தின் மீது இந்து என்னும் தாத்பரியத்தின் மீது இந்த நாடு கட்டப்பட வேண்டுமெனப் பாரதி விரும்புகிறான். இவற்றின் மீது கட்டப்படுகின்ற நாட்டில் ஆரியர்கள்தாம் தலைமை ஏற்க முடியும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே.
இத்தகைய வேதம் செழிக்கும் ஆரியத் தலைமை கொண்ட இந்து நாட்டில், முசுலிம்கள், கிறித்துவர் கள், பார்ப்பனரல்லாதாரின் நிலை என்ன என்பது குறித்துப் பாரதி விளக்கவில்லை என்றாலும், அவர் களெல்லாம் இந்த உன்னத ஆரிய நாகரிகத்தைத் தொழுது வழி நடக்க வேண்டும் என்பது அப்பெருங் கவிஞனின் உள்ளக்கிடக்கையாக இருக்கக்கூடும்.
ஆனால் காந்தி இதற்கு நேர்மாறானவர். இந்தியா பல இன மக்கள் வாழும் பல நாடுகளின் சேர்க்கை. அந்தச் சேர்க்கை நீடிக்க வேண்டுமென் றால், மொழி வழியான தேசியம் அங்கீகரிக்கப்பட்டு, மொழிவழித் தேசியம் என்னும் நிலையான உண்மையின் மீதுதான் ""காலத்தின் புதிய தேவை யான இந்திய தேசியம்'' நிலைபெற முடியும் என்று தெளிவாகவும் திண்ணமாகவும் சிந்தித்தார் காந்தி.
ஆகவே வெள்ளையன் காலத்தில் மதராசு இராசதானியில் இருந்த காங்கிரசு தட்சிணப் பிரதேசக் காங்கிரசு என அழைக்கப்படாமல், காந்தி யால் தமிழ்நாடு காங்கிரசு, கர்நாடக காங்கிரசு, கேரள காங்கிரசு, ஆந்திர காங்கிரசு என்று மொழிவழியாக, நாடு விடுதலை அடைவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிரிக்கப்பட்டு விட்டது.
விடுதலை பெறப் போகும் இந்தியா எந்த வகை யில் அமையும் என்று காந்தி பிரித்துக் காட்டி விட்டார். எல்லா நாடுகளும் இணைந்த நாடாக இந்தியா இருக்கும் என்பது நடைமுறையில் விடு தலைக்கு முன்னரே காந்தியால் காட்டப்பட்டு விட்டமையால், பிரிவினை எண்ணம் தலை தூக்கவே வேலை இல்லாமல் போய்விட்டது.
இந்தியா சவர்க்காரும், பாரதியும் விரும்பியவாறு ஓர் ஆரிய இந்து நாடாக உருவாக்கப்பட்டிருந்தால், பெரியாரும் அண்ணாவும், திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையில் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆரிய நாட்டுக்கு எதிரான திராவிட நாடு சரியான மோதலாக இருந்திருக்கும்.
காந்தி உருவாக்கிய இந்தியாவில் இந்து பெரும்பான்மையும், பார்சி சிறுபான்மையும் ஒரே வகையான உரிமையானவர்களே. ஏனென்றால், மதம் காந்தியின் இந்தியாவில் அளவுகோலாக இருக்காது. சமயச் சார்பின்மையே (நங்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம்) காந்திய இந்தியாவின் முதுகெலும்புக் கொள்கை.
மொழிவழித் தேசியங்கள்தாம் (கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ சஹற்ண்ர்ய்ஹப்ண்ள்ம்) இந்திய தேசியத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று அடிப் படையைக் காந்தி நிறுவிய காரணத்தால் இங்கே பாரத மாதாவுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. பாரத நாடு ஓர் இணைப்பு நாடு. அதை நாம் விரும்பி ஏற்றோம். ஆனால் பாரதமாதா என்னும் இணைப்பு மாதா இருக்க முடியாது.
காந்தியே தன்னைக் குசராத்தித் தாயின் மகனாகக் கருதியமையால்தான், தன் சுயசரிதையைக் குசராத்தியில் எழுதினார். நாம் நம்மைத் தமிழர்களாகக் கருதிக் கொள்வது போல, காந்தியும் தன்னைக் குசராத்தியாகவே கருதிக்கொண்டார்.
பாரதமாதாவுக்கு மண் எங்கே இருக்கிறது? பாரத மாதா பெற்ற மக்கள் யார்? ஒரே ஒரு பிள்ளையாவது நேரடியாகப் பாரத மாதா பெற்றதாகச் சொல்ல முடியுமா?
வங்கத்தாய், தமிழ்த்தாய், ஒரியத்தாய் உண்டு. பாரதத் தாய் எங்கு உண்டு?
ஆகவே காந்தியால் பாரத நாட்டை உருவாக்க முடிந்தது. பாரதத் தாயை, அது ஒரு முரண் என்பதால், உருவாக்க முனைய வில்லை. காந்தியின் மொழிவழித் தேசிய வெற்றிதான், திராவிட நாடு கொள்கையின் தோல்வி ஆகிவிட்டது.
ஒவ்வொரு மலையாளியும், கன்னடி யனும், தெலுங்கனும் தென்பாதி இந்தியாவில் அங்கமாக இருப்பதை விட, முழு இந்தியா வில் அங்கமாக இருப்பது இன்னும் வசதிதானே என நினைக்கும் நிலை ஏற்பட்டு விட்டதற்கு, காந்தியின் நாடு செதுக்கும் அறிவே காரணம்.
மாநிலங்களுக்கும் போதிய உரிமைகள் இல்லை என்பது வேறு, அது எல்லா மாநிலங்களுக்குமான பிரச்சினை.
1920-லேயே சவர்க்கார் இது இந்துக்களின் நாடு என்று சொன்னபிறகு, இந்தக் கருத்து வேர்கொள்ள முடியாமல் போனதற்குக் காந்தியின் மொழிவழித் தேசியமும், சமயச் சார்பின்மையுமே காரணம். அதனால்தான் காந்தியைக் கொல்ல நினைத்தார்கள், கொன்றார்கள்.
காந்தியைக் கொன்றது எதிர்விளைவை ஏற்படுத்தி, வெகுகாலம் ஆர்.எஸ்.எஸ். தலைதூக்க முடியாமல் போய்விட்டது.
2ஜி தொடங்கி, எண்ணற்ற ஊழலில் மூழ்கிய காங்கிரசு, ஆட்சியை இழந்தது என்பது சவர்க்கார் உயிர் பெறக் காரணமாகிவிட்டது.
இவ்வளவுக்கும் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்புக்குச் சவர்க்காரின் சமாதியைக் காட்ட முடியவில்லை. மோடியால், காந்தி ஆசிரமத்தைத்தான் காட்ட முடிந்தது.
முசுலிம்களை இரண்டாம் தரக் குடிகளாக்க முயலும் மோடி, டிரம்பை அழைத்துப் போய் ஒரு முசுலிம் அரசியின் சமாதியைத்தான் காட்டவேண்டி வந்தது.
சமக்கிருதத்துக்கு 643 கோடி நிதி ஒதுக்கி விட்டார்களே என ஒரு பொதுவுடைமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெகுண்டிருக்கிறார்.
சமக்கிருதம் இந்துக்களின் தேவ பாஷை என்கிறார்கள். ஆகவே மேலும் மேலும் நிதி ஒதுக்கு கிறார்கள்.
"நாங்கள் இந்துக்கள் இல்லை. திராவிட சமயத்தினர்' என்று மறுதலித்துப் பாருங்கள். பாரதியின் பாரதமாதாவைப் புறந்தள்ளிப் பாருங்கள். சமக்கிருதம் யாருடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த வந்த மொழி என்னும் உண்மைக் கணக்கு வந்துவிடும்.
மோடிக்கும் அமித்சாவுக்கும் குசராத்திதான் தெரியும். ஆனாலும் அவர்கள் "சற்சூத்திரர்கள்' என்பதால், சமக்கிருதத்திற்குக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்.
அதைவிடத் தாங்க முடியாத கொடுமை தி.மு.க.வின் தலைவர் இசுடாலின் ஒருமுறை "தி.மு.க.வில் இருப்பவர்களும் இந்துக்கள்தான்' என்று சான்று பகன்றது.
தி.மு.க.வில் திராவிட அடலேறுகள் இந்துக்களாக ஆகிவிட்ட பிறகு சமக்கிருதத்தை எதிர்ப்பதில் என்ன பொருள் இருக்கிறது? ஆழப் பார்வை வேண்டாமா?
பெரியார் புழுக்கம் தாங்காமல் சமாதியில் புரண்டு படுத்திருப்பார்.
(தொடரும்)