(105) எடப்பாடிக்கு என்ன வந்தது?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முசுலிம்கள் குறிப்பாக முசுலிம் பெண்கள் தமிழ் நாடெங்கும் நடத்தி வருகிற போராட்டம் குறித்து மாநில அரசிடம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
குடியுரிமைச் சட்டம், மக்கள் பதிவேட்டுச் சட்டம் ஆகியவற்றிற்கு பா.ச.க.வின் மைய அரசுக்கு எடப்பாடி அரசு அளித்து வரும் ஆதரவு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கேரளாவைப் போல், பிற பன்னிரெண்டு மாநிலங்களைப் போல் மைய அரசின் அந்தச் சட்டங்களைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமலிருக்க, அவற்றிற்கு எதிரான தீர்மானத்தைச் சட்ட மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.
எதற்கும் மசியவில்லை எடப்பாடி. தில்லி மாநிலங்கள் அவையில் இந்தச் சட்டங்கள் நிறைவேறத் தன்னுடைய உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்த அ.இ.அ.தி.மு.க. அதே சட்டங்களை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்புவது அறியாமை. தில்லியில் உள்ள பா.ச.க. அரசுக்கு முழுக்க விலை போய்விட்ட கட்சி அ.இ. அ.தி.மு.க.
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான விலையைக் கொடுத்து தமிழ்நாட்டில் துடைத் தெறியப்படும் நிலையை அடைந்த பிறகும், பாடங் கற்றுக் கொள்ளும் தகுதியான நிலையில் அந்தக் கட்சியின் தலைமை இல்லை.
வெறும் பதினெட்டு விழுக்காடாக அ.இ.அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்து விட்ட பிறகும், அ.இ.அ.தி.மு.க. மாறவில்லை என்றால், அஃது அழிவை நோக்கிய பயணம்தானே.
செயலலிதாவும் எல்லா தவறுகளையும் முரட்டுத்தனமாகச் செய்வார். ஆனால் மக்கள் எதிர்க்கிறார்கள் என்றால், அதிகாரம் பறிபோய் விடும் என்னும் அச்சத்தில், எச்சிலை விழுங்கிக் கொண்டு பின்வாங்கி விடுவார். அதிகாரத்தை விடத் தன்மானம் பெரிதென்று அவர் எப்போதும் கருதியதில்லை.
குலதெய்வக் கோயில்களுக்கு ஆடு, மாடு வெட்டுவதற்கு எதிராக அவர் கொண்டு வந்த சட்டத்தை, அவரே குப்பைத் தொட்டியில் வீசி விட்டார்.
ஒருநாள் ஓர் இளைஞனைத் தன்னுடைய சுவீகாரப் புத்திரன் என அறிவிப்பார். அந்த இளைஞனுக்கு நூறு கோடி செலவில் திருமணம் செய்து வைப்பார். "ஏது இவ்வளவு பணம்?' எனக் கேள்வி எழும்பி, செயலலிதா பதவி இறக்கம் செய்யப்பட்ட பிறகு, "அந்தப் பையன் என் மகனே இல்லை' என்று அறிவிப்பார்.
தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
செயலலிதாவின் சேவல் சின்னக் காலத்திலேயே அவரோடு இணைந்தும், அவரிடமிருந்து பாதி யைத்தான் கற்றுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
யார் யாரை எல்லாம் மேயவிட்டால், தான் தொடர்ந்து தோட்டக்காரனாக இருக்க முடியும் என்பது எடப்பாடிக்குக் கை வந்திருக்கிறது. கட்சியை மேய்ப்பது ஒரு பாதி என்றால், மக்களை வசப்படுத்துவது இன்னொரு பாதி.
ஆனால் இதே போக்கில் போனால், அடுத்த ஐந்தாண்டுக்குத் தோட்டக்காரனை மாற்றி விடுவார்கள் மக்கள் என்பது எடப்பாடிக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
தன்னுடைய ஆட்சியின் குற்றத்தால், தான் பதவி இழப்பது ஒரு வகை. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் வழித்தெறியப்பட்டதற்குக் காரணம் சேர்க்கைக் குற்றம்.
ஊழலின் உச்சம் எடப்பாடி என்றா லும், தி.மு.க. அதற்குச் சற்றும் சளைத்த தில்லை என்பதால், "விட்டையில் முன் விட்டை என்ன? பின் விட்டை என்ன?' என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாற்று இல்லை. ஆகவே ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்யும் கேவலமான அரசியல் கடந்த ஐம்பதாண்டு களாக நடந்து வருகிறது இந்த இன்பத் தமிழ்நாட்டில்.
இதற்கு அப்பாற்பட்டு வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட, மக்களைப் பிளவுபடுத்திப் பார்க்கும் இன்னொரு கேவலமான அரசியல், பாரதிய சனதா கட்சியின் வாயிலாகத் தமிழ்நாட்டுக்குள் கடந்த ஐம்பதாண்டுகளாக நுழைய முயன்று வேர் கொள்ள முடியாமல் தவிக்கிறது.
எதிர்பாராத விபத்தாக மோடி தில்லியில் ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில், அதிகாரத்தின் துணைகொண்டு இந்த பிளவு அரசியலைப் பெரிதாக்கி, இந்தியாவை ஓர் இந்து நாடாக்கும் முயற்சிக்கு எடப்பாடி ஏன் துணை போக வேண்டும்? சில தேவைகள் இரு தரப்பிலும் இருந்தன. அவை முடிந்தன. இதே நிலை நீடித்தால் ஆட்சியை அடுத்த முறை அடைய முடியாமல், எடப்பாடிக்குப் போய் உழவு செய்யும் நிலை ஏற்படுமே ஒழிய, ஏற்படப் போகும் வேறு நன்மை என்ன?
பா.ச.க.வின் கூட்டும், அந்தக் கூட்டின் காரணமாகக் கண்ணை மூடிக் கொண்டு, மோடி கொண்டு வரும் பிளவுச் சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதும், எல்லா வகையிலும் ஒரு தற்கொலை முயற்சி என்பது எடப்பாடிக்குப் புரிய வேண்டாமா?
வீட்டை விட்டு வெளிவராத முசுலிம் பெண்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்றால், எந்த அளவுக்கு அவர்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்க வேண்டும்.
எடப்பாடியார் சட்டமன்றத்தில் வழக் கத்திற்கு மாறாகச் சீற்றத்துடன் பேசுகிறார்.: "தமிழ்நாட்டில் இந்தச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? ஒரே ஒருவரையாவது காட்ட முடியுமா?'
இதையேதான் ரசினியும் சொல் கிறார்: ""அப்படி ஒரு பாதிப்பு முசுலிம்களுக்கு வருமென்றால், அவர்களுக்காகக் களத்தில் நிற்கிற முதல் ஆளாக நான் இருப்பேன்.'
வெள்ள மட்டம் உயரும் என்னும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போகும் போது எவ்வளவு பெரிய ஆளும் எந்த வகையில் உதவ முடியும்?
எடப்பாடி கேட்கிறாரே ஒரே ஒருவரை யாவது காட்ட முடியுமா என்று.
சட்டம் நடைமுறைக்கு வரும் போது, ஒரே ஒரு முசுலிமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முசுலீம் சமூகத்தையும் காட்ட முடியும்- "அவர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆகிவிட்டார்கள்' என்று. அப்போது காட்டி என்ன பயன்? வெள்ளம் தலைக்கு மேல் போயிருக்குமே.
பாகித்தானில் மாற்று மதத்தார்க்கு "சரி உரிமை' இல்லை. வங்கதேசத்தில் இல்லை. உலகின் பல நாடுகளில் இல்லை.
அங்கெல்லாம் பெருவாரியான மக்களின் மதமே அரசு மதம். இவை சிந்தனையால், செயலால் வளர்ச்சி அடையாத நாடுகள்.
ஆனால் அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகளில், இந்தியாவில் மனிதர்களுக்குத்தான் மதம் உண்டே ஒழிய, அரசுக்கு மதம் கிடையாது.
இந்தியாவில் நூற்றுக்குப் பத்து கோடியாக இருக்கும் இந்துக்களுக்கும், பத்து கோடிக்கு மேல் இருக்கும் முசுலிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் வெறும் ஆயிரம் குடும்பங்களே உள்ள பார்சிகளுக்கும் சமமான உரிமைதான்.
இன்னும் சொன்னால் சிறுபான்மை நிறு வனங்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் கூட இந்தியாவில் உண்டு. இதுதான் காந்தி செதுக்கிய இந்தியா.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரு கிறார். மோடி அரசின் சமய வெறுப்புக் கொள்கை குறித்து அவர் மோடியுடன் விவாதிப்பார் எனக் குறிப்புகள் தெரிவித்தன. டிரம்பிடம் கண்டிப்பாக "வாயை மூடு' என்று சொல்ல முடியாது.
மோடி அரசின் மத வெறுப்புக் கொள்கை யை துருக்கி அதிபர் கண்டித்தபோது, "இது உள்நாட்டு விவகாரம், வாயை மூடு' என்றது இந்திய அயல் விவகாரத்துறை.
மலேசிய அரசு இந்தச் சட்டங்களைக் கண்டித்தபோது சினத்தின் உச்சத்திற்கே போன மோடி, மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்திவிட்டார்.
நாம் இசுலாமிய நாடுகளிலிருந்துதான் கச்சா எண்ணெய் (Crude Oil) வாங்குகிறோம் என்பது மோடிக்கு வசதியாக மறந்து போய்விட்டது போலும்.
United States Commission on International Religious Freedom சொல்கிறது.
இந்தச் சட்டம் தவறான இலக்கைக் கொண்டி ருக்கிறது. முசுலிம்கள் மட்டுமே NRCஆல் கடுமை யாகப் பாதிக்கப்பாடுவார்கள். முசுலிம் அல்லா தவர்கள் caa சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு விடுகிறார்கள்.
It runs counter to India's rich secular pluralism and the constitution என்று வரிந்து வரிந்து இந்தியாவின் மைய அரசை சாடியிருக்கிறது. உலக நாடுகளில் நம்முடைய முகம் தொங்கி விட்டது.
உலக நாடுகளுக்கெல்லாம் புரிவது நம்முடைய எடப்பாடிக்குப் புரியவில்லை.
ஆனால் இன்னொரு பக்கம் "இதற்கு விலை ஆட்சியோ?' என் னும் அச்சமும் எடப்பாடிக்கு இருக்கிறது.
மெக்கா பயணம் (Haj)மேற்கொள்ள இருக்கும் இசுலாமியர் களின் வசதிக்காக பதினைந்து கோடியில் ஓர் இல்லம் கட்டிக் கொடுக்கப் போகிறதாம் எடப்பாடி அரசு. இசுலாமிய மத குருக்களுக்கு (Ulama) மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1500லிருந்து ரூ.3000 ஆக உயர்த்துகிறதாம் எடப்பாடி அரசு.
அவர்கள் புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25000 மானியமாக வழங்கப் போகிறார்களாம்.
வாழ்வதற்கு உரிமை கேட்கிறார்கள் முசுலிம் கள். அவர்களில் சிலருக்குப் பொரி உருண்டை வழங்குவதைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
மோடி அறிவு தெளியும் பருவம் எய்து முன்னரே வெறுப்பு அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டு விட்டார்.
எடப்பாடிக்கு என்ன வந்தது?
(தொடரும்)