எதிர்க்கட்சியின் அறிவுத்தரம்! (112)
அண்மையில் "அட்சய பாத்திரம்' என்கின்ற தனியார் கொடை நிறுவனம் மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு காலை உணவினைத் தங்கள்செலவில் வழங்க இசைவு தருமாறு எடப்பாடி அரசினைக் கேட்டது.
நண்பகல் உணவினை வழங்கும் திட்டம் நீதிக்கட்சித் தலைவர் தியாகராச செட்டியார் மேயராக இருந்த காலத்தில் சிறு அளவில் சென்னையில் தொடங்கியது.
அப்புறம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமராசர் ஆட்சிக் காலத்தில் பகலுணவுத் திட்டமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு அது விரிவடைந்தது.
"ஆடு மேய்க்கப் போனால் சோறு கிடைக்கும்; பள்ளிக்கூடத்திற்கு வந்தால் சோற்றுக்கு என்ன செய்வது? என்று ஏழைப் பிள்ளைகளுக்கு ஓடும் சிந்தனையை மறித்து அவர்களைப் பள்ளிக்கு வரவைக்கவே காமராசர் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.
அதன்பின்னர் வந்த எம்.ஜி.ஆர். அதை சத்துணவு என்னும் பெயரில் மிகப்பெரிய அளவுக்கு விரிவு செய்தார்.
தொடக்கத்தில் கலைஞர் அதை நகையாடினாலும், எம்.ஜி.ஆரின் வெற்றித் திட்டங்களில் அது முதன்மையான ஒன்று என்று புரிந்துகொண்டபோது, தானும், தன்னுடைய ஆட்சியில் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறினால் கதை கந்தலாகிவிடும் என்பது கலைஞருக்குத் தெளிவாகப் புரிந்தது.
இப்படிக் கல்வியை மட்டுமன்று; உணவையும் இலவசமாக வழங்கி ஐம்பது, அறுபது ஆண்டுகளாகத் "தேடு கல்வி இலாதோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்' என்னும் உயர் நோக்கத்தோடு, தமிழ்நாட்டைக் கல்விமயப் படுத்துவதில் கண்ணுங் கருத்துமாக செயலாற்றினர் இந்த நாட்டின் முதல்வர்கள்.
இவர்களின் இந்தப் பெரும்பணியோடு, மாநகராட் சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவையும் தருவதாக ஓர் அறக்கட்டளை இப்போது முன்வருமானால், அது கைகூப்பி வரவேற்க வேண்டிய உயர் செயலல்லவா?
"அட்சயபாத்திரத்தின்' காலை உணவு வழங்கும் திட்டத்தினை "தி.மு.க. எதிர்க்கிறது' என்று தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் கீதாசீவன் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறார். தி.மு.க. எதைத்தான் எதிர்க்கவில்லை.
ஏன் இதை தி.மு.க. எதிர்க்க வேண்டும்? வயிற்றெரிச்சல்! சத்துணவும் நம்முடைய திட்டமில்லை; காலை உணவும் நம்முடைய திட்டமில்லையே என்னும் வயிற்றெரிச்சல்.
அட்சய பாத்திரம் என்று தமிழோசைப்படி முடியாமல், "அக்ஷய பாத்திரா' என்று வடவோசைப்படி அந்தப் பெயர் வாயைப் பிளப்பதிலிருந்தே, அது ஒரு பார்ப்பன அமைப்பு என தெளிவு படுகிறது.
அதனாலென்ன? தானம் பெறுவதை தருமமாகக் கொண்டவர் கள் தானம்செய்வது பெருமைக்குரியதுதானே? வெள்ளைப்பூண்டும், வெங்காயமும் அவர்கள் தரும் காலை உணவில் சேர்க்கப்படுவதில்லையாம். அதனால் உணவில் இருக்க வேண்டிய சத்தில் குறைபாடு ஏற்பட்டு, நம்முடைய பிள்ளைகள் நைசீரியப் பிள்ளைகள் போல் வயிறு வீங்கி, வெறுந் தோல் போர்த்திய எலும்புக்கூடாக ஆகிவிடுவார்களே என்பது கீதாசீவனின் அளப்பரிய வேதனை.
ஒரு வெள்ளைப்பூண்டு இல்லை என்பது முழு உணவையும் சத்தற்ற உணவாக ஆக்கிவிடுமா?
ஏன் வெள்ளைப்பூண் டோடு நிறுத்திவிட்டீர்கள்? ஆட்டுக்கறியில்தான் அதிகப் புரதம் (Protein)இருக் கிறது; அதை ஏன் போட வில்லை என்றும் கேட்க வேண்டியதுதானே?
ஓர் அமைச்சர் சொல்லியிருக்கிறார் : "காலை உணவுத் திட்டத்தை கீதாசீவன் தன் சொந்தப் பணத்திலிருந்து செய்ய முன் வருவாரேயானால், (அவர் விரும்பும் வெள்ளைப் பூண்டு, வெங்காயத்தோடு) அவர் அதைச் செய்ய அரசு இசைவளிக்கும்.'
அட்சயாவிடமிருக்கும் இந்தப் பொறுப்பை ரத்து செய்துவிட்டால், ஆட்டுக் கறியுடன் வழங்க எங்கள் தி.மு.க. முன்வரும் என்று சொல்லி கீதாசீவன் அமைச்ச ரின் வாயை அடைத்திருக்க வேண்டாமா?
2ஜிக்கான மைய அமைச்சு அவர்களிடம்தான் இருந்தது. சேது சமுத்திரத் திட்டம் நின்று போனாலும், அது நிற்கும் வரை நடை முறைப்படுத்தும் அதிகாரம் அவர்களிடம்தான் இருந் தது. இவர்கள் நினைத்தால் காலை உணவு வழங்க முடியாதா?
அட்சய பாத்திரத்தை அதைச் செய்யவிடாமல் தடுத்து, தமிழக அரசின் சமூகநலத்துறை அதை ஏற்றுச் செய்ய வேண்டும் என்று தி.மு.க.வின் மாண்புமிகு கீதாசீவன் "கவைக்கு ஆகாத' யோசனை ஒன்றை சட்ட மன்றத்தில் தெரிவித்திருக் கிறார். ஓ.பன்னீர்செல்வம் ஒருமுறை சொன்னாராம் "புத்தியை வாடகைக்கு வாங்கிச் செயல்படும் கட்சி தி.மு.க.' என்று. அதை மெய்ப் பித்திருக்கிறார் கீதாசீவன்.
அரசே இந்தக் காலை உணவுத் திட்டத்தை மேற்கொள்வதானால், அதற்கொரு வரி போட வேண்டும். கீதாசீவன் சொல்வது ஒரு நல்ல யோசனையா? பீகார் கிசோர் முந்நூற்றி எண்பது கோடி வாங்கிக் கொண்டு இவர்களுக்கெல்லாம் என்னதான் சொல்லிக் கொடுக்கிறார்?
அரசின் திட்டங்கள் வரம்புக்குரியவை. ஏனெனில் பணம் வரம்புக்குரியது (Money is secret)
வைரமுத்து ஒரு படத்திற்குப் பாட்டு எழுதினார். "புத்தம் புதிய பூமி வேண்டும்' என்று தொடங்கினார். சார் மன்னன் காலத்திற்குப் பிந்திய ருசியாவைப் புதிய பூமியாக்க லெனின் போட்ட திட்டங்களில், விட்டுப் போனவற்றைச் சொல்லப் போகிறார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்.
"தங்கமழை பெய்ய வேண்டும், தமிழில் உயிர் வாழ வேண்டும்' என விரித்தார்.
தமிழில் உயிர் வாழும் வாய்ப்பு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போல் சிலருக்கு மட்டுமே வாய்ப்பது. அஃது இருக்கட்டும்.
"தங்க மழை பெய்தால்' பூமியின் வறுமை போய்விடும் என்பது வைரமுத்துவின் கருத்தாக இருக்கக் கூடும்.
"Gold is a rare metal' தங்கம் மிக மிக அருகிக் கிடைப்பது. அதனால்தான் அதற்கு இவ்வளவு விலை.
தங்கம் மழையாகப் பொழியுமானால், அதனுடைய விலை தகரத்தின் விலையை விடக் குறைந்துவிடும். அப்போது தங்கம் வளத்தின் அடையாளமாக இருக்காது.
கண்ணதாசனும் "பொன்மழை' என்று பாடிச் சொதப்பவில்லையா? கண்ணதாசன், வைரமுத்து இவர்களுக்கெல்லாம் இலவச ஆலோசனை வழங்கியவர் ஆதிசங்கராச்சாரியார்.
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் கீதாசீவனுக்கு "இலவச ஆலோசனை' இசுடாலின், இசுடாலினுக்கு "விலை பெற்ற ஆலோசனை' பிரசாந்த் கிஷோர் என்பது போல.
ஓர் எதிர்க்கட்சி என்றால் எதைத்தான் எதிர்ப்பது என்பதற்கு ஒரு வரன்முறை வேண்டும்.
சட்டமன்றத்தின் தரம் இறங்கிப் போனதற்கு ஆளும் கட்சி மட்டுமே காரணமில்லை. எதிர்க்கட்சிதான் முக்கிய காரணம்.
இசுடாலின்தான் எதிர் அரசியல் என்றால் எடப்பாடி "இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு' நாடாள்வார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கீதாசீவனின் பேச்சுத்தான்
எதிர்க்கட்சியின் அறிவுத்தரம்.
(தொடரும்)