கடந்த 2000-ம் ஆண்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த பவாரியா கொள்ளையர்களைத் தமிழக போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி முனையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேரை என்கவுண்டர் செய்தது தமிழக போலீஸ்.
இதன்மூலம் வட மாநிலக் கொள்ளையர்களின் கொள்ளைச் சம்பவத்திற்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், மீண்டும் வட மாநிலக் கொள்ளையர்களின் கொள்ளைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரையடுத்த ஒரகடம் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் துளசிதாஸ், அக்டோபர் 4-ம் தேதி இரவு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, மற்றொரு டாஸ்மாக் கடையின் ஊழியரான ராமுவுடன் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 2 மர்ம நபர் கள் அவர்களைக் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில், துளசிதாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
மற்றொரு ஊழியரான ராமு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அவரது மார்புப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்திருந்தது தெரியவந்தது. இதனால் அந்த வழக்கு தீவிரமடையவும், காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்த மர்ம நபர்களைத்தேடி வந்தனர். இந்நிலையில், அக்டோபர் 10-ம் தேதி காலையில், பென்னலூர் கிராமத்தைச் சேர்ந்த சுங்கச்சாவடி ஊழியரான இந்திரா, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள உறவினரைச் சந்திக்க பென்னலூர் பகுதி பேருந்து நிறுத்தத்தில் காலை 8 மணி அளவில் காத்திருந்தார், அப்போது பைக்கில் வந்த வட மாநில நபர்கள் இருவர், இந்திராவிடம் அட்ரஸ் கேட்பதைப் போல அருகில் வந்து அவரது 5 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். இதைச் சற்றும் எதிர்பாராத இந்திரா கூச்சல் போடவும், அங்குவந்த பொதுமக்கள், அந்த இருவரையும் மடக்கிப்பிடிக்க முயலுகையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். பொதுமக்கள் சிதறி ஓடவும், அருகிலிருந்த ஏரிப்பகுதிக்குத் தப்பிச்சென்று பதுங்கிக்கொண்டனர். தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர், டி.ஐ.ஜி சத்யபிரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். மூன்று அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் குற்றவாளிகளைத் தேடினர். இரவு முழுக்கத் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் காலை பதினோரு மணியளவில் ஒரு கொள்ளையன் பிடிபட்டான். மதியம் ஒரு மணியளவில் இன்னொருவன் புதருக்குள் இருப்பதைக் கண்ட தலைமைக் காவலர் மோகன்ராஜ், கொள்ளையனைப் பிடிக்க முற்பட்டார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் மோகன்ராஜை சரமாரியாகக் குத்தினான். இதைக்கண்ட ஆய்வாளர் கிருஷ்ண குமார், உடனடியாகத் துப்பாக்கியால் சுட, முதுகில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கொல்லப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தூஜா ஷேக், மற்றொருவன் நயீம் அக்தர் என்பதும், இருவரும் இருங்காட்டுக்கோட்டையை அடுத்த காரந்தாங்கல் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. போலீசாரின் சோதனையில், குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்களோடு, அவர்களோடு தங்கியிருந்த ஒருவனும் கைது செய்யப்பட்டான். குற்றவாளிகள் பயன்படுத்திய 20-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், பான் கார்டுகள், ஆதார் கார்டுகள், கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியாவிடம் பேசினோம்... "இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. இந்த கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகு உடனடியாக போலீஸ் டீம் அந்தப் பகுதிக்குப் போச்சு. 300 போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அக்டோபர் 10-ம் தேதி, 12 மணிக்கு ஆரம்பிச்ச இந்த தேடுதல் வேட்டை, மறுநாள் ஒரு மணிக்கு முடிஞ்சது. மற்ற மாவட்ட போலீசாரையும் பயன்படுத்தினோம். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகரும், திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாரும் இந்த சம்பவ இடத்தில் இருந்தாங்க.
முதல் நாள் தேடுதல் வேட்டையில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியல. நைட் ஆயிடுச்சு. அப்பவும் குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க, அந்த பகுதியை ரவுண்டப் பண்ணிட்டோம். கடைசியா மறுநாள் காலையில் பதினோரு மணிக்கு நயீம் அக்தர் கைது செய்யப்பட்டான். அடுத்து ஒரு மணி அளவில் இன்னொரு குற்றவாளியைப் பிடிக்க முயன்றபோது, அவன் தலைமைக் காவலர் மோகன்ராஜை கத்தியால் வெட்ட முற்பட, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குற்றவாளியை நோக்கிச் சுட்டார். கூட தர்மலிங்கம் எஸ்.ஐ. இருந்திருக்காரு. இதான் நடந்தது'' என்றார்.
இதுபற்றி, பெயர் கூற விரும்பாத ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் சில தகவல்களைத் தெரிவித்தார். "தமிழ்நாட்டில் இப்போ பரவலாகத் துப்பாக்கிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பா பாத்தீங்கன்னா, பழைய ரவுடிங்ககிட்ட கத்தி, அருவா தான் பயன்பாட்டில் இருந்தது. ஆனா இப்போ பெரும்பான்மையான ரவுடிங்க, நாட்டுத் துப்பாக்கியிலிருந்து இம்போர்ட்டட் துப்பாக்கி வரை வச்சிருக்காங்க. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் பரவலாகக் கிடைக்கும்.
அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடிவரும் தொழிலாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஏற்கனவே குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், தங்களோட துப்பாக்கிகளையும் கொண்டுவரு கிறார்கள். முதலில் அவற்றை விற்பனைக்காகக் கொண்டுவந்தவர்கள், தற்போது கொள்ளைச் சம்பவத்துக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இதனை காவல்துறைதான் கட்டுப்படுத்த ணும். மெயினா பார்த்தீங்கன்னா, வட மாநிலங் களிலிருந்து ரயில் மூலமாகத் துப்பாக்கிகளை இங்கே கொண்டுவருகிறார்கள். முன்பு 2,000 ரூபாய்க்குக் கிடைத்த துப்பாக்கிகள், தற்போது, 5,000 முதல் 30,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கின்றன. இதனால்தான் இப்போது பெரிய ரவுடிகளிடம் துப்பாக்கி புழங்குகிறது. உளவுத்துறை இதுவிஷயத்தில் உடனடியாகத் தீவிரமாகச் செயல்பட்டு இவர்களைக் கண்டறியாவிட்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.
வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இங்கேயே ஓட்டர் ஐடி, ஆதார் கார்டு போன்றவற்றை வாங்கிக்கொடுத்து விடுவதால், இவர் களுடைய பின்புலம் குறித்து அறியமுடி யாமல் போய்விடுகிறது. இவங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறப்போ, அந்த வீட்டு உரிமையாளர் கண்டிப்பா இவர்களைப் பற்றிய தகவலைப் பெற்று, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க வேண்டும். அதேபோல, ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, வட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது'' என்று கூறி முடித்துக் கொண்டார்.
பெண்களைத் திடீரென குரல்வளையில் ஓங்கி அடித்து, நிலை குலைய வைத்து, உயிருக்கே ஆபத்து உண்டாக்கி, நகைகளைத் திருடிச் செல்வது, வடமாநிலக் கொள்ளையர்களின் கொடூர டெக்னிக். காஞ்சி மாவட்ட என்கவுன்டரில் திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமாரின் ஸ்கெட்ச் கச்சிதமாக அமைந்தது என்கிறார்கள் காவல் துறையினர்.
அந்த என்கவுன்டருக்கு அடுத்ததாக, தூத்துக்குடியில் நடைபெற்ற இன்னொரு என்கவுண்டர் சம்பவமும் பரபரப்பையும், ரவுடிகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆறு கொலைகள் செய்ததோடு, போலீஸாரைத் தாக்கி வாக்கி டாக்கியைப் பறித்த ரவுடி கிட்டப்பாவை 2015-ம் ஆண்டு நெல்லை சுத்தமல்லியில் என்கவுண்டர் செய்தது போலீஸ். அதன்பின், தென் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று தூத்துக்குடியில், சைக்கோ ரவுடியை என்கவுண்டர் செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.
"என்கவுண்டர் செய்யப்பட்ட துரைமுருகன், பாவூர்சத்திரத்தில் ஜெகதீஷ் என்பவரைக் கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக பாவூர்சத்திரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமை யிலான டீம், ராஜீவ் நகர் அருகே கோவளம் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு தலைமறைவாகப் பதுங்கியிருந்த துரைமுருகன் மற்றும் அவரது இரு கூட்டாளிகள் சிக்கியுள்ளனர். அவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது, இரு கூட்டாளிகளும் தப்பி ஓடிவிட்டனர்.
அப்பொழுது துரைமுருகன், காவலர் டேவிட் ராஜனையும், எஸ்.ஐ. ராஜபிரபுவையும் அரிவாளால் தாக்க, தற்காப்புக்காக எஸ்.ஐ. ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் துரைமுருகன் பலியானார். பலியான துரைமுருகனுக்கு 7 கொலை வழக்குகளும், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், 21 கொள்ளை வழக்குகள், 6 திருட்டு வழக்குகள் உட்பட மொத்தம் 35 வழக்குகளும் உள்ளன'' என, ரவுடியின் என்கவுண்டர் தொடர்பாகச் செய்தியறிக்கையை வாசித்தது தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை.
முந்தைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த துரை முருகன், கடந்த செப்டம்பர் 3-ம் தேதியன்று விடு விக்கப்பட்டிருந் தார். கடந்த 06-10-2021 அன்று, தனது நண்பனான விஜய், அவருடைய நண்பரான பூ வியாபாரி ஜெகதீசுடன் இணைந்து மது அருந்துகையில் ஏற்பட்ட தகராறில், ஜெகதீஷைக் கடத்திக் கொலை செய்து பிணத்தைப் புதைத்துள் ளார். அதையடுத்து காவல்துறையின் தேடுதல் வேட்டையில் துரைமுருகன் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பிரிவு அதிகாரி ஒருவரோ, "பாவூர்சத்திரத்தில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக திரிந்தவனை அவனது சொந்த ஊரான கூட்டாம்புளி திருமலாபுரத் திற்கு வருகையில் கைது செய்யப் போலீசார் காத்திருக்க, கடந்த இரு நாட்களுக்குமுன் அவனது அம்மாவை மருத்துவமனையில் காட்டிவிட்டு ஊர் திரும்பியுள்ள தகவல், போலீஸ் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த டென் சிங் டீமிற்கு கிடைக்க, அவரோ எஸ்.பி.க்கு தகவலளித்துவிட்டு, காலை 10.15 மணிக்கே துரைமுருகன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளையும் கஸ்டடியில் எடுத் துள்ளனர்.
அதன் பின்னர் எஸ்.ஐ. ராஜபிரபு டீமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து 15 கி.மீ. தூரமுள்ள கோவளம் கடற்கரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பிற்பகல் 03.15 மணியளவில் என்கவுண்டர் செய்யப் பட்டான். இவன் ஏற்கனவே 2009-ம் ஆண்டே என்கவுண்டரில் சிக்க வேண்டியது. அப்போது தப்பியவன், இப்போது சிக்கி பலியாகியுள்ளான்'' என்றார் அவர்.
அடுத்தடுத்த இந்த என்கவுண்டர்கள், பொதுமக்களுக்கு நிம்மதிப்பெருமூச்சை ஏற்படுத்தினாலும், மனித உரிமை ஆர்வலர் கள் இந்த என்கவுண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடுகிறார்கள் கிரிமினல்கள்.