அரசியல் தேர்தல் வெற்றிக்காக ஆந்திர அரசு பாலாற்றில் மீண்டும் ஒரு சிறு அணையைக் கட்ட முயற்சிக்க, தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கத்தில் உரு வாகும் பாலாறு, கடலில் கலக்கும்வரை 354 கி.மீ. பயணமாகிறது. கர்நாடகாவில் 99 கி.மீ, ஆந்திராவில் 33 கி.மீ, தமிழ்நாட்டிற்குள் திருப்பத்தூர் மாவட் டத்தில் வாணியம்பாடி அடுத்த பெரும்பள்ளம் என்ற இடத்தில் நுழைந்து, 222கி.மீ பயணமாகி வங்கக்கடலில் கலக்கிறது. 2010ல் கணேசபுரத்தில் 70 அடி உயரத்துக்கு அணை கட்ட முடிவு செய்தது ஆந்திரா. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து, கணேசபுரத்தில் அணை கட்டவில்லை எனச்சொன்னது ஆந்திரா. ஆனால் கர்நாடகா - ஆந்திரா எல்லையான சாந்திபுரத்தில் தொடங்கி ஆந்திரா - தமிழக எல்லையான புல்லூர் வரை 33 கி.மீ தூரத்துக்கு 23 தடுப்பணைகளைக் கட்டினார் ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு. பாலாற்றின் கிளை ஆறுகளான பாபுலு ஓம்கா, திப்ரோ குறுக்கேவும் தடுப் பணைகளைக் கட்டினார்கள். மேலும், சாந்திபுரம், விஜிலாபுரம், நஞ்செங்பெண்டா, கிடிமானி பெண்டா, போகல்ரே, பெத்தவெங்கா, பாலாறு, கங்குந்தி போன்ற இடங் களில் தடுப்பணைகளின் உயரத்தை 30 அடிவரை உயர்த்தியதில் தமிழகத்துக்கு பாலாற்றிலிருந்து தண் ணீர் வருவது 70 சதவீதம் தடுக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன்ரெட்டி, குப்பம் தொகுதி யில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவரும் சந்திரபாபு நாயுடுவை தோற்கடிக்க வேண்டு மென்பதற்காக அத்தொகுதியில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்தார். கடந்த 2022 செப்டம்பரில், குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெகன், "புல்லூர், குடிபள்ளி, சாந்திபுரம் தடுப்பணை களில் கூடுதலாக தண்ணீர் சேமிக்க அணையின் உயரத்தை அதிகரிக்க 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார். இதை அப்போதே நக்கீரன் வெளிப்படுத்தியது. இந்நிலையில், குப்பம் அடுத்த ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றில் சிறு அணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஜெகன், பிப்ரவரி 27ஆம் தேதி சாந்திபுரத்தில் அடிக்கல் நாட்டினார். ஆந்திராவின் இச்செயலுக்கு தமிழ்நாட்டில் பா.ம.க., ம.தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாலாறு பாதுகாப்பு சங்க உறுப்பினர் அம்பலூர் அசோகன் நம்மிடம், "பாலாற்றில் கணேசபுரம் - சாந்திபுரத்துக்கு இடையே ரெட்டிகுப்பத்தில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல, சிறு அணை. ஏற்கெனவே பாலாற்றில் 23 தடுப்பணைகளைக் கட்டி பாலாற்று நீர் தமிழ்நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டது ஆந்திரா. ஆந்திராவில் ஆறுகளை இணைக்கும் அந்திரிநிவா திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அந்த தண்ணீர் குப்பத்துக்கு கால்வாய் மூலமாக 15 தினங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை சித்தூர், திருப்பதிக்கு கொண்டு செல்லத் திட்டமிடுகிறார்கள். அந்த தண்ணீரோடு பாலாற்று நீரையும் கொண்டுபோகவுள்ளார்கள். அதற்காகவே அணை கட்ட முடிவு செய்துள் ளார்கள். இந்த அணையில் தேக்கப்படும் நீரை 75 ஏரிகளுக்கு திருப்பி விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதோடு சித்தூர், திருப்பதிக்கு போனால் சுத்தமாக நமக்கு தண்ணீரே வராது'' என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "1892ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி, பல மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியி லுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணைக் கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுக்கவோ, நீரைத் திருப்பவோ, நீரைத் தேக்குவதற்குரிய எந்தவொரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கையில், ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பது ஒப்பந்தத்தை மீறுவதாகும். இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்கவுள்ளது. அதோடு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித் திருப்பதை எதிர்த்து மேலும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் 2016ல் தொடுத்துள்ளது. இரண்டு அசல் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல, கூட்டாட்சிக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எவ்வித செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மீறி ஆந்திர அரசு அணை கட்ட முயன்றால் தமிழ்நாடு அரசு அதனைத் தடுத்தாக வேண்டும்!
-கிங்