"மேடம் இந்தவாட்டி குறி தப்பாது. கவனமாக மூவ் பண்ணீங்கன்னா மொத்தப் பேரையும் அமுக்கிறலாம்'' பக்கா ஸ்கெட்சுடன் சொன்ன தூத்துக்குடியின் க்யூபிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவின் 10 பேர் கொண்ட பிரிவு, வேம்பார் கடல் பகுதிக்கு அதிகாலையில் விரைந்திருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட கடத்தல்காரர்கள், படகில் கடலுக்குள் புகுந்திருக்கிறார்கள். விடாத க்யூ பிரிவு டீம், இரண்டு விசைப்படகில் அந்தக் கடத்தல் படகை விரட்டிச்சென்று சுற்றிவளைத்தனர். படகைச் சோதனை போட்டதில் மேல்தட்டில் எதுவும் கிடைக்காதநிலையில், படகின் அடித்தட்டை உடைத்துச் சோதனை யிட்டபோது கல்கண்டு கட்டி போன்ற பொருளை கொண்டு பேக் செய்யப்பட்ட 5 பேக்கேஜ்கள் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடை என மொத்தம் 10 கிலோ எடையுள்ள அந்தப் பொருளைக் கைப்பற்றியவர்கள், படகோடு சேர்த்து விளாத்திகுளம் பக்கமுள்ள கீழவைப்பாறின் சிலுவை, வின்ஸ்டன், கபிலன், சுபாஷ், அஸ்வின், கிங்பன், சைமன் ஆகிய ஏழு பேரைத் தங்களின் கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, "இது என்ன சரக்கு பார்சல்னு எங்களுக்குத் தெரியாது. இந்த பார்சல கொழும்பு பக்கத்துல ஒருத்தரிடம் ஒப்ப டைக்கணும்னு சொன்னாங்க. கடத்துறது என்னதுன்னு தெரியாது. இதுபத்தி இருதயவாஸிடம்தான் கேக்கணும், அவர்ட்ட நாங்க வேல செய்றோம்'' என்றதும், கடத்தலின் தலைவன் இருதயவாஸையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
அவனிடம் விசாரித்ததில், இந்த சரக்கு கோவாவிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, இலங்கையில் ஒரு பார்ட்டியிடம் ஒப்படைக்கும்படி சென்னை புள்ளி கூறியதாகச் சொன்னார். அந்த பார்சலில் இனிப்பு ருசி கொண்ட போதைச்சரக்கான கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் இருப்பதாகக் கூறியுள்ளான் இருதயவாஸ்.
க்யூ பிரிவின் விசாரணை அதிகாரியிடம் நாம் பேசியபோது, "போதை உலகில் இது வினோதமான புதுச்சரக்காகத் தெரிகிறது. போதைத் தடுப்பான நார்கோட்டிவ் யூனிட்டிடம் விசாரித்தபோது, பிடிபட்ட கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைனின் இந்திய மதிப்பு ரூ.10 கோடி. சர்வதேசச் சந்தையில் அது மூன்று மடங்கான ரூ.30 கோடி மதிப்பு கொண்டது. அந்த பார்சலை கொழும்பு நகரிலுள்ள ஆளுங்கட்சிப்புள்ளியின் மகனுக்கு நெருக்கமான தாஸ் என்பவரிடம் ஒப்படைக்க கூலி மட்டுமே 55 லட்சம் ரூபாய். விரளி மஞ்சள், கடல் அட்டை, சிகரெட் போன்ற வற்றுக்கு இலங்கையில் பத்து மடங்கு விலை கிடைப்பதால் கடத்தலையே இவர்கள் தொழிலாக்கிவிட்டனர்.
அந்தக் கடல்பகுதி விரைவான போட்டிங்கிற்கு சற்று வித்தியாசமாகக் காணப் படுவதால் வேம்பார் கடல் பகுதியை கடத்தல் தளமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். விரைவான போட்டிங் பகுதி என்பதால் சேஸ் செய்வதற்குள் எங்களுக்கு மூச்சு வாங்கிவிட்டது. பல்வேறு நெட்வொர்க்குகளைக் கொண்டிருக்கும் இருதயவாஸ், மரைன், கோஸ்ட்டல் கார்டு, நேவி போன்ற கடல் பாதுகாப்புப் படையிலும் சோர்ஸுகளை வைத்திருப்பான். அவர்கள் மூலம் சிக்காமல், சிரமமின்றி கடத்தல் தொழிலை நடத்திவருகிறான். இது மட்டுமில்லாமல் தனது ஊர் முழுக்க உளவாளிகளை வைத்திருப்பதால், போலீஸ் இவனைப் பிடிக்க ஊருக்குள் சென்ற மறுநொடி, தகவல்தெரிந்து தப்பித்துவிடுவான். எத்தனையோ முறை சிக்காமல் போனவன் இம்முறை எங்களின் கச்சிதமான குறிவைப்பில் சிக்கிவிட்டான்.
இந்த கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைனைக் கொண்டுசெல்லும்போது, மிக நுணுக்கமாகக் கையாள வேண்டும். ஊசிமுனை அளவு கூடக் காற்றுப்புகாமல் ஜாக்கிரதையாகப் பேக்கிங் செய்ய வேண்டும். காற்று புகுந்துவிட்டால், அது உருகித் தண்ணீராகி வீணாகிவிடும் என்பதால் பேக்கிங்கைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து மத்திய அரசின் என்.பி.சி.டி. எனப்படும் நார்கோட்டிவ் பீரோ ஆஃப் சென்ட்ரல் டிபார்ட் மெண்டிடம் கேட்டால் தெரியவரும்'' என்றார்.
க்யூ பிரிவின் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவிடம் பேசியபோது, "ஒரு வருடமாக எங்கள் குறியிலிருந்து தப்பி வந்தனர். ஆன்லைனிலும், வாட்ஸ்அப் கால்களிலும் இவர்கள் பேசிக்கொள்வதால் எங்களால் ட்ரேஸ் பண்ண முடியல. ஆனா இந்த முறை எங்க டீம் முழுவதும் கவனமாகச் செயல்பட்டதால வளைக்க முடிஞ்சிது. கல் உப்பு, கற்கண்டு போல இருக்கு அந்தப் போதைக் சரக்கு. சரக்குடன் பிடிபட்டவர்களை என்.ஐ.பி.யிடம் ஒப்படைத்து விட்டோம்'' என்றார்.
கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் பற்றி என்.பி.சி.டி. யூனிட்டிடம் பேசியபோது. "இவ்வகை பெட்டமைன், லீவோ டெக்ஸ்ட்ரோ, மற்றும் டெக்ஸ்ட்ரோ மெத்தாம் பெட்டமைன் எனப்படுகிற ரசாயன கெமிக்கல் மூலம் தயார் செய்யப்படுகிறது. இது மருத்துவப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படுகிறது. மன அழுத்தம், மன உளைச்சல், போன்ற மன வியாதி சம்பந்தமான வகையில் பாதிக்கப்பட்டு உறக்கமின்றித் தவிப்பவர்களுக்கு உறக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் மருத்துவப் பயன்பாடுடையது. கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலர் இதனை உறக்கத்திற்காகவும், போதைக்காகவும் அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் மூளையை பாதிப்பதோடு, நரம்பு மண்டலத்தைச் சிதைத்து நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது'' என்றார்கள். அற்ப போதைக்காக உட் கொள்ளப்படுகிற சரக்கின் வீரியத்தை உணராமல் இதற்கு அடிமையாவது கொடுமை.