வாழ்நாளில் ஒருமுறை யாவது அந்த மேயர் அங்கியை அணிந்து கொண்டு, அட்ட காசமான சிம்மாசனத்திலமர்ந்து மேயர் தர்பார் நடத்திவிட வேண்டுமென்ற கனவு ஒவ்வொரு கவுன்சிலர்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணனின் ராஜினாமாவை அடுத்து கவுன்சிலர்கள் பலரும் மேயர் கனவில் உள்ளனர்.
2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தி.மு.க. அணியில் வென்ற கவுன்சிலர் கள் சிலர் மேயர் பதவியின் பொருட்டு காய்களை தங்களது மேல்மட்ட ஆதரவுப் புள்ளி களின் மூலம் நகர்த்தினார்கள். தி.மு.க. கவுன்சிலரான கே.ஆர். ராஜூ மேயராகிவிட தீவிரமாகச் செயல்பட்டார். அதற்கேற்ப மேயர் தேர்வுக்குத் தேவையான கவுன்சிலர்களை தனது பக்கம் கொண்டுவர ஸ்வீட் பாக்ஸ் களைத் தாராளமாகவே வழங்கினார் கவுன்சிலர் கே.ஆர். ராஜூ. மணல் மற்றும் குவாரிகளின் பிசினஸில் கோலோச்சுகிற கே.ஆர். ராஜூவின் இந்த செயல்பாடுகள் மாநகரமளவில் வியப்பாகவே பேசப்பட்டது.
பொருளாதார வறட்சியே கண்டிராத கே.ஆர். ராஜூக்கு, கவுன்சிலர்கள் கவனிப்பு ப்ளஸ் மாவட்டத்திற்கான சிறப்பு அன்பளிப்புகள் என்று "சி'க்கள் கணக்கில் காலியாகியிருக்கிறதாம். ஆனாலும் கடைசி நேர அதிர்ஷ்டத் தின் கோணம் ஒருசில டிகிரி விலகியதன் காரணமாக, நெல்லை மாநகரத்தில் முதன்மை ஸ்தானத்திலிருக்கிற பிள்ளைமார் சமூகம் சார்ந்த சரவணனை மேயர் வேட்பாளர் என்று கட்சித் தலைமை அறிவிக்க, சரவணன் மேயரானார். மா.செ. அப்துல் வகாப்பின் ஆதரவாளர் கே.ஆர். ராஜூ துணை மேயரானார்.
மேயர் சரவணனின் பதவிக் காலத்தில் கவுன்சிலர்களோடு அனுசரித்துப் போகாதது, தொடர் சச்சரவுகள், மேயர் மீது அடுக் கடுக்கான ஊழல் குற்றச்சாட்டு கள், மாமன்றப் புறக்கணிப்பு என்று நெல்லை மாநகரம் தலைமைக்குத் தலைவலியானதுடன் விவாதப் பொரு ளானதால் இறுதியாக மேயர் சரவணன் ராஜினாமா செய்யவேண்டியதானது. மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மேலிட உத்தரவுப்படி பொறுப்பு மேயராக துணை மேயர் கே.ஆர்.ராஜூவை அறிவித்துவிட்டார்.
இதையடுத்து அடுத்த மேயர் யார்? என்கிற எதிர்பார்ப்புகள், மேயர் நாற்காலியைக் குறிவைத்து கவுன்சிலர்களின் காய்நகர்த்தல்கள் என்று மாநகரம் அதகளப்படுகிறது.
மேயர் தேர்தலில் ஆரம்பகட்ட செயல்பாடுகளின்படி, இந்த முறையும் மேயர் வாய்ப்பு பிள்ளைமார் சமூகம் சார்ந்தவர் களுக்கே தரப்படலாம் என்ற நம்பிக்கையில் அந்த சமூகம் சார்ந்த தி.மு.க.வின் 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், 27-வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் இருவரும் நாற்காலி ரேஸை துவக்கியிருக்கிறார்கள். இவர்களில் கவுன்சிலர் கிட்டு என்ற ராம கிருஷ்ணனை மேய ராக்கிவிட வேண்டு மென்ற கர்மசிரத்தை யோடு எம்.எல்.ஏ.வும் முன்னாள் மாநகர மா.செ.வுமான அப்துல் வகாப், தனக்கு வேண் டப்பட்ட மேலிடப் புள்ளிகளின் மூலமாக மூவ்களை மேற்கொண்டார். இதன்மூலம் தற்போதைய மாநகர மா.செ.வான டி.பி.எம்.மைதீன்கானுக்கு டப் கொடுப்பது என்ற நோக்கத்திலிருக்கிறாராம். ஏனெனில், மேயர் சரவணனின் பொறுப்புக் காலங்களில் தி.மு.க.வின் அனைத்து கவுன்சிலர்களும் அப்துல் வகாப்பின் கண்ணசைவிலேயே இருந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள் மாநகர தி.மு.க.வினர்.
அடுத்து 54-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும் மாநகர மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான கருப்பசாமி கோட்டை யப்பன் பற்றியும் பேசப்படுகிறது. பொறியாளர். 1996-ன் போது அப்போதைய நெல்லை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாள ரான கோட்டையப்பன் அரசியல் எதிரிகளால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது பதற்றத்தையும் அரசியல் அனலையும் கிளப்பியது. அவரது மகனே கருப்பசாமி கோட்டையப்பன். கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பம் என்ற பெயருமிருக்கிறது. மாநகர தி.மு.க. நிர்வாகிகளில் முக்கியமானவர், கருப்பசாமி கோட்டையப்பனை மேயராக்கு வதில் முனைப்பிலிருக்கிறார் என்ற பேச்சும் கிளம்புகிறது.
தற்போதைய துணை மேயரான கே.ஆர். ராஜூவும் மேயர் பதவியைக் குறிவைத்து பல்வேறு வழிகளில் பய ணிக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கி லிருக்கும் கே.ஆர்.ராஜூ அண்மையில் அவரைச் சந்தித்ததோடு அமைச்சர் ராஜகண்ணப்பனையும் பார்த்துவிட்டு வந்திருக் கிறார்.
இதனிடையே ஜூலை 12-ஆம் தேதி யன்று அன்பகம் கலை தலைமையில் நெல்லை வருகின்ற குழு, நெல்லை யில் நிலவுகிற மேயர் தேர்வுக்கான நிலவரங்களை ஆய்வுசெய்து கட்சித் தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாம். குழுவின் ஆய்வறிக்கை, உளவுத் துறையின் ரிப்போர்ட், மாநகர மா.செ.வின் கருத்து, இம்மூன்றையும் ஆய்வுசெய்த பின்னரே கட்சித் தலைமை மேயர் வேட்பாளர் பற்றி அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், மேயர் பதவியின் ஆயுட்காலம் 2 வருடம் 8 மாதமே. மேயர் வேட்பாளராக அடுத்து ஒருவரை நியமித்தால் சர்ச்சைகள் கிளம்பலாம். அதனைத் தவிர்க்கிற வகையில் தேர்தல் வைக்காமல் துணைமேயரையே பொறுப்பு மேயராக்கி காலத்தை ஓட்டிவிட லாம் என்ற திட்டத்திலிருக்கிறது தலைமை என்றும் பொறுப்பான இடத்திலிருந்து தகவல்கள் லீக் ஆகின்றன.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்