நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான நெல்லை, பாளை, நாங்குநேரி, அம்பை ராதாபுரம் என்று 5 சட்டமன்றங்களை உள்ளடக்கிய அதி.மு.க.வின் நெல்லை மா.செ. பொறுப்பிலிருப்பவர் தச்சை கணேசராஜா. நெல்லை மாநகர அ.தி.மு.க.வின் அரசியல் வட்டாரத்தில் இவருக்கு எதிரணியிலிருப்பவர் கட்சியின் சீனியரான சுதா பரமசிவன். அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர். நெல்லை ஆவின் சேர்மன் பொறுப்பிலுமிருப்பவர்.
"மா.செ. மற்றும் வலுவான மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என்ற பதவியும் கூடுதலாக தச்சை கணேசராஜாவிற்கு கட்சித் தலைமை கொடுத்ததுதான் நெல்லை அ.தி.மு.க.வில் கோஷ்டிகள் உருவாக அடித்தளம்' என்கிறார்கள் நெல்லை ர.ர.க்கள்.
அதோடு அண்மையில் "நெல்லை, பாளை பகுதிகளின் ஒ.செ. மற்றும் பகுதி செயலாளர் போன்ற அனைத்துப் பகுதிகளையும் இரண்டாகப் பிரித்து அதற்குப் புதிய பொறுப்பாளர்களை மா.செ. தச்சை கணேசராஜா நியமித்தது கோஷ்டிப் பூசலை உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது' என்கிறார்கள் இலைக்கட்சியினர்.
பாளை ஒன்றியம் கட்சிரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் ஒ.செ. பொறுப்பிலிருப்பவர் மருதூர் ராமசுப்பிரமணியன். அவர் மா.செ. கணேசராஜாவின் சமூகம் சார்ந்தவர். இரண்டாகப் பிரிக்கப்பட்டதில் மற்றொரு பகுதிக்கான ஒ.செ.வாக அந்தப் பகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் மூன்று சமூகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருக்குக் கொடுக்காமல் மீண்டும் தனது சமூகம் சார்ந்த ம.தி.மு.க.விலிருந்து வந்த முத்துக்குட்டிப் பாண்டியன் என்பவரை அந்தப் பொறுப்பில் வைத்திருக்கிறார் மா.செ.
பாளை பகுதியை இரண்டாக்கித் தெற்கு பகுதி என்றாக்கிய மா.செ. ராஜா, அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சிக்காரருக்குப் பதவியைத் தராமல், அந்தப் பகுதி சாராத ஒன்றியப் பகுதியிலிருக்கும் திருத்து சின்னத் துரையை பகுதி செயலாளராக்கிவிட்டார். அவர் இருக்கும் இடத்தின் பகுதிச்செயலாளராக பணி ஓய்வுபெற்று 65 வயதான சிந்து முருகன் நியமிக்கப்பட்டிருகிறார். இவரது மகன்தான் நெல்லை மாவட்ட வி.சி. கட்சியின் செயலர். அதேபோன்று மேலப்பாளையத்தை இரண்டாக பிரித்து அந்தப்பகுதி சமூகத்தவருக்கு முன்னுரிமை தராமல் தனது உதவியாளரான சண்முககுமாரை பகுதி செயலாளர் பொறுப்பில் வைத்துவிட்டார் மா.செ. ராஜா.
இப்படி அ.தி.மு.க. சார்பில் லாத நபர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தால் தேர்தல் வேலை நடக்குமா? அ.ம. மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்தவர்கள் ஒரிஜினல் அ.தி. மு.க.வினர். அவர்கள் ஏன் புறக்கணிக் கப்படுகிறார்கள்? இந்தப் பிணக்கால்தான், சுதா பரமசிவன் பக்கம், அவைத்தலைவர் சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், பாப்புலர் முத்தையா, அண்மையில் கட்சிக்கு வந்த கருப்பசாமி பாண்டியன், விஜிலா சத்யானந்த், ஏ.கே.சீனிவாசன் போன்றோர் நிற்கிறார்கள். இதனால் "மாவட்டத்தை கட்சி நிர்வாகத்துக் காகப் பிரிக்க வேண்டும்' என்கிற குரல் கேட்கிறது. சுதா பரமசிவன் அ.தி.மு.க. இரண்டான நேரத்திலிருந்தே எடப்பாடி பக்கமிருப்பவர். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று துணிச்சலாகப் போஸ்ட்டரடித்த முதல் நபர்.
கட்சியின் பெரும்புள்ளிகள் சுதா பரமசிவன் தரப்பில் என்றாலும், மா.செ.வின் சைடிலோ பேரவையின் ஜெரால்டு, பாளை பகுதி செயலாளரான ஜெனி என ஒரு சிலரே. இப்படி நெல்லை மாநகர அ.தி.மு.க.வில் இரண்டு டிராக் என்றான நிலையில்... கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கவும் மற்றும் சேரன்மகாதேவியில் மறைந்த பி.எச்.பாண்டியனின் மணிமண்டபம் திறப்புவிழா பொருட்டும் வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் வகையில், இரண்டு கோஷ்டிகளும் தங்களின் பலத்தைக் காட்ட ஆட்களைத் திரட்டி தனித் தனியான வரவேற்பைக் கொடுத்திருக்கின்றனர்.
நெல்லை, பாளை தொகுதிகளுக்கான சீட் ரேசும் விறுவிறுப்பாகியுள்ளது. நெல்லை தொகுதியில் பிள்ளை சமூகத்தவர்கள் மெஜாரிட்டி என்பதால் சுதா பரமசிவனின் தரப்பில் விஜிலா சத்தியானந்தையும், பாளைக்கு அவைத்தலைவர் சங்கரலிங்கம் அல்லது அவர் மகன் கார்த்திக் இவர்களை முன் நிறுத்தும் தீவிரத்திலிருக்கின்றனர். மா.செ. தச்சை கணேசராஜா, "நெல்லைத் தொகுதியை தனக்காகவும், பாளையை தனது ஆதர வாளர்களான ஜெ. பேரவைச் செயலர் ஜெரால் டிற்காகவும் வாங்கிவிட வேண்டும்' என்று வரிந்துகட்டுகிறாராம்.
""கட்சிப் பொறுப்புகளை கட்சிப் புள்ளிகளுக்கே பகிர்ந்தளியுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆனால் மா.செ.வோ கட்சியினரைக் கேட்காமல் அனைத்து வகையிலும் தன்னிச்சையாக தனது உதவியாளர் போன்றவர்களுக்கு கொடுப்பதுதான் விவகாரமே'' என்கிறார் சுதா பரமசிவனின் தரப்பான அவைத் தலைவர் சங்கரலிங்கம்.
மா.செ.வான தச்சை கணேசராஜாவோ, ""அ.ம.மு.க.விலிருந்து வந்த பாப்புலர் முத்தையா, விஜிலா சத்யானந்த் போன்றவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. கட்சிக்காரர்களைப் பொறுத்துதான் பதவிகள் தரப்படுகின்றன. ஒரு சிலர்தான் கோஷ்டியை உருவாக்குகிறார்கள்'' என்றார் நம்மிடம்.
"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கோஷ்டிகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் அவை களை எடுக்கப்பட்டன. இப்போதும் அப்படி துணிச்சலாக செயல்படுமா தலைமை' எனக் கவலையோடு எதிர்பார்க்கிறார்கள் நெல்லை ர.ர.க்கள்.