chandrababu

காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகியிருக்கிறார் மோடி. அவரது தலைமையில் 30 கேபினெட் அமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள், 5 தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் என 71 பேர் கொண்ட கூட்டணி அமைச்சரவையும் பதவியேற்றிருக்கிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 11 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

அமைச்சரவையில் நெருக்கடிக் கொடுப்பார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசத்திற்கும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் தலா 1 கேபினெட் மற்றும் 1 இணையமைச்சர் பதவி மட்டுமே தரப்பட்டுள்ளது.

Advertisment

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் மோடிக்கு குடைச்சல் தருவார்கள்; நிம்மதியாக அவரால் ஆட்சி செய்ய முடியாது என்கிற எதிர்க்கட்சிகளின் எண்ணங்களை உடைத்து, அவர்கள் இருவருக்கும் தலா 2 இடங்களுக்குள் சுருக்கியிருக்கிறார் மோடி என்கிற கருத்துகளை பரப்பிவருகின்றனர் பா.ஜ.க. வினர்.

Advertisment

இது எப்படி சாத்தியமானது? என பா.ஜ.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ""தேசிய ஜனநாயக கூட்டணியில் நாயுடுவும், நிதிஷும் முக்கிய பார்ட்னர்கள்தான். மறுக்க முடியாது. அவர்கள் இருவரிடமும் 28 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். கூட்டணி மந்திரிசபையில் 5 கேபினெட், 5 இணையமைச்சர் பதவிகளை நாயுடுவும், 4 கேபினெட், 4 இணையமைச்சர் பதவிகளை நிதிஷும் ஆரம்பத்தில் கேட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், 16 எம்.பி.க்களை வைத்துள்ள நாயுடு 5 கேபினெட்டும், 12 எம்.பி.க்களை வைத்துள்ள நிதிஷ் 4 கேபினெட்டும் கேட்டால் 240 எம்.பி.க்களை வைத்துள்ள பா.ஜ.க., கேபினெட்டில் எத்தனை இடங்களை எதிர்பார்க்கும்? அதனால் நீங்கள் கேட்கும் எண்ணிக்கை லாஜிக் இல்லாதது என்று அவர்கள் இருவரிடம் ராஜ்நாத்சிங்கும் அமித்ஷாவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதம்தான் அமைச்சரவையின் எண்ணிக்கை இருக்கமுடியும். அந்த வகையில் அதிகபட்சம் 81 பேர் கொண்ட அமைச்சரவைதான் அமைக்க இயலும். ஆனால், அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு விருப்பம் இல்லை. நாட்டின் நலன் கருதி பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

அதனால் "இப்போதைக்கு இருவருக்கும் தலா 2 அமைச்சர் பதவி, அதில் ஒன்று கேபினெட். இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள்' என ராஜ்நாத்சிங்கும் அமித்ஷாவும் தெளிவுபடுத்தினார்கள். 5 கேட்ட சந்திரபாபு நாயுடு, கேபினெட் பதவிகளில் 4, 3, 2 என இறங்கி அழுத்தம் கொடுத்தார். இதே பாணியில் நிதிஷ்குமாரும் வலியுறுத்த... மோடியும் பா.ஜ.க. தலைவர்களும் தங்கள் நிலைப்பாட்டிலேயே உறுதியாக நின்றனர்.

ஒரு கட்டத்தில், "உங்கள் ஆதரவு இல்லாமலும் பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியும். பார்த்துக்கொள்ளுங்கள்' என பா.ஜ.க. தரப்பில் சொல்லப்பட்டது. அதன் உள்அர்த்தத்தை நாயுடுவும் நிதிஷும் புரிந்துகொண்டார்கள். குறிப்பாக, "மத்திய பா.ஜ.க. ஆட்சியின் ஒத்துழைப்பில்லாமல் மாநிலத்தில் உங்களால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாது என்பதாகவே அதன் உள்ளர்த்தம் இருந்தது. அதனால், மத்திய அமைச்சர்களாக நீங்கள் யாரை சொல்கிறீர்களோ, அவர்களுக்கு வாய்ப்பு தரப்படும். அவர்களின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கிறது என்பதையும், பா.ஜ.க.வுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது மேலும் சில வாய்ப்புகள் உங்கள் கட்சிக்கு கொடுக்கப்படும்' என அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டது.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள், மத்திய அரசின் உதவியுடன் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய மோடி அரசுடன் இணக்கமாக சென்றால் மட்டுமே காரியம் சக்சஸ் ஆகும் என்பதை நாயுடுவும், நிதிஷும் புரிந்துகொண்டதால், 1 கேபினெட், 1 இணையமைச்சர் பதவிகளுக்கு ஒப்புக்கொண்டனர். மோடியின் எண்ணங்களை ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும் சரியான கோணத்தில் கொடுத்த அழுத்தமே நாயுடுவையும், நிதீஷையும் வழிக்கு கொண்டுவந்தது''’என்று விவரிக்கின்றனர் பா.ஜ.க.வினர்.

அந்த வகையில், மோடியின் 71 பேர் கொண்ட அமைச்சரவையில் நாயுடுவின் தெலுங்கு தேசத்தை சேர்ந்த ராம்மோகன் நாயுடுவுக்கு கேபினெட் அமைச்சர் பதவியும், பெம்மசானி சந்திரசேகருக்கு இணையமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ராஜீவ்ரஞ்சன் சிங்கிற்கு கேபினெட் பதவியும், ராம்நாத் தாக்கூருக்கு இணையமைச்சர் பதவியும் தரப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமிக்கு கேபினெட்டும், தமிழத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு மீண்டும் இணையமைச்சர் பதவியும் ஒதுக்கியிருக்கிறார் மோடி.

முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்த 20 பேருக்கு மீண்டும் மோடி வாய்ப்புத் தரவில்லை. அவர்களெல்லாம் பதவியேற்பு விழாவில் உற்சாகமின்றி காணப்பட்டனர். அமைச்சரவையில் உத்தரபிரதேசம், மகாராஸ்ட்ரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாவிட்டாலும், பா.ஜ.க.வின் வாக்குகள் இந்தமுறை அதிகரித்திருப்பதாக பெருமையுடன் சுட்டிக்காட்டியிருந்தார் மோடி. இதனால் மோடியின் 3.0 அமைச்சரவையில் தமிழகத்திற்கு 2 வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்.முருகனுக்கு மட்டுமே வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்த மாநில தலைவருக்கு அல்வா கொடுத்துவிட்டார் மோடி.

கடந்த ஆட்சியில் 66-ஆக இருந்த மோடியின் அமைச்சரவை இந்த முறை 71-ஆக அதிகரித்துள்ளது. பிரதமராக பதவியேற்றதையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகளை இறுதி செய்வதில் கவனம் செலுத்தினார் மோடி. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை மோடிக்கு நாயுடுவும், நிதிஷும் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும், மோடியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டுதான் இருக்கும் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்!