"உடல்நலனுக்காக தரப்படும் மருந்து மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் போக்கு இளையோர்களிடம் அதிகரித்துக்கொண்டே யிருக்கிறது. இதனை கண்காணித்துத் தடுக்க வேண்டிய மருந்து கட்டுப்பாட்டுத்துறை இதில் கவனம் எடுப்பதில்லை' என குற்றம்சாட்டுகிறார்கள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள்.

பிரபல மருந்து நிறுவனத்தின் சென்னையைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி நம்மிடம், "வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மயக்கவியல் மருத்துவர்கள் பரிந்துரையின்கீழ் நோயாளிக்கு வழங்க வேண்டிய மாத்திரை, வெளியே மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கிடைக்கிறது. 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் எம்.ஆர்.பி விலை 350 ரூபாய். ஆனால் சட்டவிரோதமாக சிலர் ஒரு மாத்திரை 100 ரூபாய்க்கு விற்பதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கிறது. அந்த மாத்திரையை வாங்கி போதைக் காக பயன்படுத்துகிறார்கள்'' என்றார்.

drugs

இதுபற்றி திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல மூத்த மயக்கவியல் மருத்துவர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, "நீங்கள் குறிப்பிடும் மாத்திரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நோயாளி களுக்கு சில நாட்களுக்கும், கேன்சர் நோயாளி களுக்கு வலியில்லாமல் தூங்கவும் தருவோம். மற்ற நோயாளிகளுக்கு பெரும்பாலும் தருவதில்லை. இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது அது போதையில் இருப்பதுபோலவே இருக்கும். அதனைத் தெரிந்துகொண்டு சிலர் பயன்படுத்தலாம். நோயாளிகளுக்கே லோ டோஸ்தான் தருவோம், அதுவும் சில தினங்களுக்குதான் தருவோம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதைக்காக வாங்கிப் பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தை உருவாக்கிவிடும்''’என்றார்.

Advertisment

இதுபற்றி மருத்துவர்கள், மெடிக்கல் ரெப்களிடம் விசாரித்தபோது, "கம்பெனிகள் மருந்து, மாத்திரைகளை மொத்த ஸ்டாக் கிஸ்ட்களுக்கு அனுப்பும், அவர்கள் மருத்துவமனை மருந்தகங்களுக்கு மருந்துகளை அனுப்பும்போது, பில்லில் மருத்துவர், மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் லைசென்ஸ் நம்பர் அதில் வருவதுபோலவே பில் போடவேண்டும். ஒன்றிரண்டு ஏஜென்ஸிகள், இறந்துபோன மருத்துவர்கள், இடம்மாறி வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்ற மருத்துவர்களின் பெயர்களில் பில் போட்டு அதனை வெளியே விற்பனை செய்துள்ளனர்.

இதுபற்றி தெரியவந்து சில ஸ்டாக்கிஸ்ட்டுகள் மீது ஏற்கனவே புகாராகியுள்ளது. மருந்தகங்களின் தொழில் போட்டியில் வாடிக்கை யாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள பல மருந்தகங்கள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்கின்றன. மாவட்டம்தோறும் மருந்துகள் விற்பனையைக் கண்காணிக்க ட்ரக்ஸ் கன்ட்ரோலர் என்கிற மருந்துகள் ஆய்வாளர் இருக்கிறார். இவர் மெடிக்கல் ஷாப்கள், மருந்து விற்பனை ஏஜென்ஸிகளைக் கண்காணிக்க வேண்டும், அதிரடி ரெய்டுகள் செய்யவேண்டும், ட்ராப் செய்யவேண்டும், அவர்கள் இதுவரை அப்படி செய்ததாக எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் விழிப்பாக இருந்தால் இப்படி போலியாக பில் போட்டு மருந்துகளை தனியே விற்பது, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். இதன்மூலம் போலி மருத்துவர்களுக்கு மருந்துகள் கிடைக்காமல் செய்யமுடியும், இளைஞர்களுக்கு போதைக்காக பயன்படுத்தும் மருந்துகள் கிடைப்பதைத் தடுக்க முடியும்''’என்றனர்.

ss

Advertisment

மருந்துகளை போதைக்காக பயன் படுத்துவதால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல நரம்பு மற்றும் மனநல மருத்துவர் தினேஷ்குமாரிடம் பேசியபோது, "இன்றைய இளைஞர்கள் கூகுள் மூலமாக சில மாத்திரைகளைக் கண்டறிகிறார்கள். வீட்டில் தந்தையோ, தாயோ நோய்க்கு சாப்பிடும் மாத்திரைகளில் தூக்கத்தை தரும் மாத்திரைகளை நோட் செய்துகொள்வது, மெடிக்கலில் வேலைசெய்பவர்கள், பேசிக்கொள்வதைக் கேட்டு அந்த மாத்திரைகளைக் குறித்துக்கொண்டு அதனை வாங்க முயல்கிறார்கள். வெளிநாடுகளில் ஒரு நோயாளி மருந்து, மாத்திரை வாங்கவேண்டும் என்றால் மருத்துவரின் தேதி குறிப்பிடப்பட்ட சீட்டு இருக்கவேண்டும். நம் நாட்டில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மெடிக்கலில் மாத்திரைகள் தரப்படுகின்றன.

ஆல்கஹால், இதுபோன்ற மாத்திரைகள் உட்பட சிலவற்றைப் பயன்படுத்துவதால் மூளையை செயல்படாமல் தடுத்துவிடும். இதன் மூலமாக அவர்கள் உடல் ஒரு நிம்மதியைப் பெறும். இது ஒருவித போதையைப்போல் இருக்கும். இதனைத் தொடரும்போது இந்த போதையை மூளை தேடும். தினச் சம்பளத்துக்கு போகிறவர்ககள் சம்பளம் கிடைத்ததும் இங்கு வந்துவிடுவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணம் இல்லாதபோது வீட்டில் அப்பா பாக்கெட்டிலிருந்து பணம் எடுப்பார்கள். பின்பு வீட்டிலேயே திருடுவார்கள். அங்கு கிடைக்காத போது குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களுக்குள் தற்கொலைக்கான எண்ணத்தை உருவாக்கும். தங்களுக்கு சம்பந்தமில்லாத, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை போதைக்காக, செக்ஸுக்காக எடுக்கும்போது நெஞ்சுவலியை உருவாக்கும், மூச்சுவிடுவதில் சிரமத்தை உருவாக்கும், கல்லீரலைச் செயல்படவிடாமல் தடுக்கும். நல்ல திடகாத்திர உடல் உள்ளவர்களையே ஓரிரு மாதத்தில் உருக்குலைத்து மரணத்தை நோக்கித் தள்ளிவிடும். அதனால் பள்ளி, கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், சோர்வாக இருக்கிறார்கள் என்றால் பெற்றோர் கண் காணிக்கவேண்டும். அவர்களை அதிலிருந்து மீட்கவேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்''’என்றார் எச்சரிக்கை குரலில்.