mavali

இந்தத் தேர்தல் முடிவில் உங்கள் மனதில் அகலாது நின்றிருக்கும் முடிவு எந்தத் தொகுதியுடையது?

Advertisment

ஒன்றெல்லாம் இல்லை,… பத்துப் பதினைந்து தொகுதிகள் இருக்கின்றன. ஆணவமாய்ப் பேசி தோற்றுப் போன ஸ்மிர்தி ரானியின் அமேதி தொகுதி அத்தகையது. மற்றொன்று லக்கிம்பூரின் கெரி தொகுதி. இத்தொகுதியில்தான் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் வாகனம், போராடும் விவசாயிகளின் மீது புகுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மிஸ்ராவின் மகன் ஆஷிஷை கைதுசெய்யவே விவசாயிகள் பெரிய அளவு போராடவேண்டியிருந்தது. ஆனால், இந்த கெரி தொகுதியில் போட்டியிட்ட அஜய் மிஸ்ராவுக்கு இத்தொகுதி மக்கள் உரிய நீதியை வழங்கியிருக்கின்றனர். சமாஜ்வாடியின் உத்கர்ஷ் வர்மாவைத் தேர்வுசெய்து மிஸ்ராவைத் தோற்கடித்திருக்கின்றனர்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

Advertisment

இனி அ.தி.மு.க.வுக்கு என்னவாகும்?

ஒன்றும் ஆகாது. எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபின் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க 13 ஆண்டு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. அப்போதும் கட்சியை அரவணைத்துக் கொண்டுசென்றார் கலைஞர். ஆனால் ஆளாளுக்கு கட்சித் தலைவர் கனவில், முதல்வர் கனவில் தலைமைக்குக் கட்டுப்படாமல், பிற கட்சிக்காரர்களின் ஆசைவார்த்தை கேட்டு ஆடினால் கட்சி துண்டு துண்டாய் சிதறிப்போகும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு

ஜாதி, தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யாது என்பது சரியா?

இன்றைக்கும் இந்தியத் தேர்தல்களில் ஜாதி, வெற்றிக்கு ஒரு முக்கிய காரணிதான். ஆனால் இதர ஆயிரம் காரணங்களோடு ஆயிரத்து ஒன்றாவது காரணியாக ஜாதியையும் கணக்கில் கொள்ளலாம். முதல் காரணியாக ஜாதியை மனதில் வைத்து தேர்தலில் இறங்கினால் தோல்வி நிச்சயம்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

மோடியை விவேகானந்தரும், ராமரும் ஏமாற்றிவிட்டார்களே?

"எனக்கு கோவில் கட்டுங்கள்,… உங்களுக்கு வாக்கு வாங்கித் தருகிறேன்' என ராமர் சத்தியம் செய்தாரா… இல்லை, "குமரியில் வந்து எனது நினைவிடத்தில் தியானம் செய்வதுபோல் நடி உன் வெற்றிக்கு உத்தரவாதம் தருகிறேன்' என விவேகானந்தர் சொன்னாரா? மோடியின் பக்தி, விளம்பர ஸ்டண்ட் என்பது அம்பலமாகிவிட்டது. கூடவே ராமர் கோவிலுக்காக, தங்கள் நிலத்தையும் கடைகளையும், வீடுகளையும் இழந்துவிட்டு உரிய இழப்பீடு கிடைக்காத அப்பாவிகள் வாக்கு எந்திரத்தில் சரியான பொத்தானை கண்டறிந்துவிட்டார்கள். விவேகானந்தரும், ராமரும் மோடியை ஏமாற்றினார்களோ… இல்லையோ...… மக்களை ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்.

எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது பற்றி?

அரசியல்வாதிகளுக்கு தனிப்பெரும்பான்மை கொடுத்துவிட்டு இந்த பத்து வருடங்களாக நாம் பட்ட பாடு போதாதா! இனியாவது சரியான வேலையைச் செய்வோம் என்று நினைத்துச் செய்தார்களா,… இல்லை இயல்பாகவே அப்படி அமைந்ததா எனத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் அனுசரித்து ஐந்து வருடம்தான் ஆட்சி நடத்தட்டுமே! மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்… என்று தேர்தலுக்கு தேர்தல் முழங்குகிற அரசியல்வாதிகள், இந்த தீர்ப்பையும் ஏற்றுக்கொண்டு கூட்டாஞ்சோறு ஆக்குகிற வழியைப் பார்க்கட்டும்!

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

சென்னையில் தாய்ப்பாலே பாட்டிலில் விற்பனைக்கு வந்திருக்கிறதே…?

தாய்ப்பால் வங்கி இருக்கிறது. பால் சுரக்காத, தாய் இல்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தானமாகப் பெற்றுக் கொடுக்கும் சேவை அமைப்பு அது. ஆனால், காசை முதன்மை நோக்கமாகக் கொண்டு தாய்ப்பாலை வாங்கி விற்கும் கடையை என்னவென்று சொல்ல? எந்த ஒரு தாயும் தாய்ப்பால் விற்று லட்சாதிபதியாகிவிட முடியாது. அவர்களுக்கு என்ன நெருக்கடியோ! ஆனால் தாய்ப்பாலையும் விற்றுக் காசு சம்பாதிக்கலாம் என யோசித்து நடைமுறைப்படுத்திய அந்தக் கடைக்காரன், சுரண்டல்வாதிகளில் நம்பர் 1.

க. பால்வண்ணன், தென்காசி

அமையவிருக்கும் புதிய அமைச்சரவையை உமர் அப்துல்லா விமர்சித்துள்ளாரே?

புதிய அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, பவுத்தரோ, சீக்கியரோ இல்லை. ஆனால் இந்த அரசு தம்பட்டமடித்துக்கொள்ளும்போது மட்டும் 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்கிறது என்றிருக்கிறார். அவரது கேள்வி நியாயமானதுதானே!