பிள்ளைகள் இருந்தும் அவர்களால் கவனிக்கப்படாத, கவனிக்க இயலாத, வறுமையில் வாடிய முதியோர்களின் பரிதாபச் சூழலைக் கண்டு வேதனைப்பட்ட நாம், அவர்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, "முதியோர் வாழ்க்கை! முதல்வரின் பார்வைக்கு...' என்ற தலைப்பில், 2007ஆம் ஆண்டு ஜனவரி 24, நக்கீரன் இதழில், வறுமையில் வாடிய முதியோர்கள் குறித்த செய்தி வெளியிட்டோம். அப்போது முதல்வராக இருந்த கலைஞர், நக்கீரன் செய்தியைப் படித்துவிட்டு, ஆண் பிள்ளைகள் இருந்தும் கவனிக்கப்படாமல் வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாதம் 400 ரூபாய் என்று அறிவித்து உடனடியாக அதை நடைமுறைப்படுத்தினார்,
முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு அரசாங்கத்தின் உதவித்தொகை பெற்றுத்தருவதற்கு யாரும் உதவிசெய்ய முன்வர மாட்டார்கள் என்பதோடு, லஞ்சத்தை எதிர்பார்க்கும் அதிகாரிகளிடம் பேசி வாங்குவதும் அவர்களுக்குச் சிரமம் என்பதை உணர்ந்த நமது நக்கீரன் ஆசிரியர், அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, களத்திலிறங்கிச் செயல்பட வேண்டுமென்று கூறினார்.
அதோடு, எளிய மக்களுக்கான உதவியைத் தராமல் இழுத்தடிக்கும், லஞ்சம் எதிர்பார்க்கும் அதிகாரி களைச் சும்மா விடக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார். ஆசிரியரின் எண்ணப்படியே எங்களுடைய பத்திரிகைப் பணியோடு, முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட எளிய மக்களுக்காகப் பல்வேறு சமூக நலத்துறை அதிகாரிகளைச் சந்தித்து, நம்மால் இயன்ற உதவிகளை நேரடியாகப் பெற்றுத்தந்து வருகிறோம். இப்படி தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் நக்கீரன் கைகொடுத்து வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமூக நலத் துறை வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம், நம்மை நாடிவந்த பலரின் கோரிக்கை விண்ணப்பங்களைக் கொண்டு சென்று, நலிந்தோர்களுக்கு உதவித் தொகை பெற்றுத் தந்துள்ளோம். வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர். இவருக்கு கிடைத்து வந்த மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, இடையில் நின்றுபோனது.
அதை வட்டாட்சியர் ரவிச்சந்திரனின் கவனத்திற்கு கொண்டுசென்று, மீண்டும் பாப்பாத்தியம்மாளுக்கு உதவித்தொகை தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதே ஊரைச் சேர்ந்த பொன்னம் மாள் என்பவர், கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து, வயது முதிர்ந்த காலத்தில், வறுமையில் வாடிய நிலையில், அவருக்கு அரசாங்கத்தின் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்தோம்.
பெருமாள் கோவிலி−ல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வாழ்ந்து வந்த ஏழைப்பெண் லட்சுமிக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தோம். போத்திரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு. இவருக்கு மூன்று சின்னச் சின்ன குழந்தைகள். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.
குழந்தைகள் சிறியவர்களாக இருந்ததால் இவரால் கூலி− வேலைக்குச் செல்லவும் முடியவில்லை. இவரது நிலையை ரவிச்சந்திரனின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். உடனடியாக வேம்புக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விதவை உதவித்தொகை கிடைக்க உத்தரவிட்டார்.
அதேபோல், செங்கமேடு கிராமத் தைச் சேர்ந்த 65 வயது அஞ்சலை யும், அவரது கணவர் தங்கராசுவும், செங்கற் சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் மத்தியில் இட்−லி வியாபாரம் செய்து பிழைத்து வந்தனர்.
ஒருநாள் செங்கற்சூளையில் இட்−லி வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, செங்கல் ஏற்றுவதற்கு வந்த லாரி ஒன்று அஞ்சலை கணவர் தங்கராசு மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கணவரை இழந்து வறுமையில் வாடிய அஞ்சலை, ஆதரவின்றி தவித்தார். அவரது நிலையை வட்டாட்சியர் ரவிச்சந்திரனின் கவனத்திற்கு கொண்டுசென்றோம்.
அஞ்சலை கணவர் இறப்பிற்கு அரசு வழங்கும் விபத்து காப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்து 2500 ரூபாயை பெற்றுத் தந்ததோடு, அஞ்சலைக்கு விதவை உதவித்தொகையாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கும் வட்டாட்சியர் ஏற்பாடு செய்தார்.
இதேபோல், கணவனால் கைவிடப்பட்ட காசி, மாற்றுத்திறனாளிகள் செல்லம்மாள், பெரியம்மாள், கணவரை இழந்த அஞ்சம்மாள், கல்யாணி, சிங்காரி, முதியோர்கள் ராஜேந்திரன், கந்தசாமி, பெரியசாமி, எறையூரைச் சேர்ந்த முதியவர் மாணிக்கம், இருளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பாலாயி, பூவாள், கொட்டாரம் அஞ்சலை, தங்கராசு, மகனை இழந்து வறுமையில் வாடிய பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவஜோதி ஆகியோருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்தோம். கணவரை இழந்து தவித்து வந்த கனகாவிற்கு அரசின் உதவித்தொகை பெற்றுத் தந்தோம். காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு முதியோர்களுக்கு உதவித்தொகையைப் பெற்றுத் தந்தோம். இப்படியாக, நக்கீரன் நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டதன் மூலம், ஒரு ரூபாய்கூட லஞ்சம் கொடுக்காமல், இழுத்தடிக்கப்படாமல், தங்கள் வாழ்க்கைக்கான வாழ்வாதார உதவித்தொகையைப் பெற்றவர்களின் பட்டியல் இன்னும் நீளமானது. அதில் சிறு துளியே இங்கே காட்டியிருப்பது.
திட்டக்குடி சமூகநல வட்டாட்சியராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அலுவலக வாசலில், "இடைத்தரகர்களுக்கு இங்கே வேலை இல்லை!' என்று கொட்டை எழுத்துக்களில் பிரிண்ட் செய்து ஒட்டினார். அதனை செய−லிலும் காட்டும்விதமாக, இடைத்தரகர்கள் இல்லாமல் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை, அவர்கள் ஊருக்கே நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்தி, அவர்கள் உதவித்தொகை பெறுவதற்குத் தகுதியானவர்கள் தானா என்பதை உறுதிசெய்தபின், அவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் உதவித்தொகை கிடைக்கச் செய்துவருகிறார். பெருமுளை கிராமத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்தார்.
அதேபோல் பெண்ணாடம் நரிக்குறவர் இன மக்களில் சிலர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந் தனர். அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி உடனடியாக உதவித்தொகை கிடைக்க உத்தரவு வழங்கினார்.
இப்படி மக்கள் பணியில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவரும் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நம்மிடம், "இங்கு வட்டாட்சியராக பொறுப்பேற்ற பிறகு விபத்து மரணம் தொடர்பாக 223 பேர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, உழவர் அட்டை பெற்றுள்ளவர்களின் ஆண், பெண் பிள்ளைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் திருமண உதவித் தொகை என 677 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்பிற்கான அரசு உதவித்தொகை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர் போன்ற பல்வேறு தரப்பு மக்களுக்கும்.சமூக நலத்துறையின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்துள்ள திட்ட உதவிகளை, உண்மையான பாதிக்கப்பட்ட பயனாளிகளைக் கண்டறிந்து, முறையாகக் கொண்டு சேர்ப்பது எங்களைப் போன்ற அரசு ஊழியர்களின் தலையாய பணி. அதை முடிந்தவரை மிகச்சரியாகச் செய்துவருகிறோம். தகுதியுள்ள பயனாளிகள் குறித்து எங்கள் கவனத்திற்கு யார் கொண்டு வந்தாலும் அவர்கள் குறித்து பரிசீலனை செய்து, அவர்களுக்கான உதவிகள் விரைவாகக் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்'' என்றார்.
அரசின் நலத் திட்டங்களை பயனாளி களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், அலுவலர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களோ, உதவி கேட்டு விண்ணப்பிக்கும் மக்களை மிகவும் துச்சமாகப் பார்த்து, மரியாதைக்குறைவாக நடத்துவதோடு, லஞ்சத்தை எதிர்பார்த்து அவர்களை அலைக்கழித்து, நோகடித்து, காலதாமதம் செய்வதுண்டு. பின்னர் இடைத்தரகர் களை அணுகும் பயனாளிகள், அவர்கள் மூலமாக லஞ்சத்தை அளித்து, உதவித்தொகையைப் பெறுகிறார்கள். இத்தகைய அவல நிலையைப் போக்கி, சரியான பயனாளிகளுக்கு, எவ்வித லஞ்சமும் பெறாமல், உரிய நிவாரணத்தைக் கிடைக்கச் செய்துவரும் வட்டாட்சியர் ரவிச்சந்திரனுக்கு நக்கீரன் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.''
"ரவிச்சந்திரன் போன்ற அதிகாரிகள்தான் தமிழகத்திற்கு தேவை. இவர்களைப் போன்றவர்களே அரசுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தருகிறார்கள்'' என்கிறார்கள் அவர் மூலம் பயன்பெற்ற பயனாளிகள்.