ந்த நான்கு வயது சிறுவனுக்கு நிகழ்ந்த அந்த கொடூரம்... பலரையும் திகிலிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி யிருகிறது.

குமரி மாவட்ட முட்டம் அருகே உள்ள கடியப்பட்டணம் என்பது மீனவ கிராமமாகும். இங்கு வசித்த ஜான் ரிச்சர்ட், சௌதி அரேபியாவில் மீன் பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சகாய சில்ஜா. இந்தத் தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஜோகன் ரிஷி என்ற மகனும் மூன்றுமாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

cccc

Advertisment

இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஜோகன் ரிஷி வீட்டின் அருகில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான். இதை அவ்வப்போது வீட்டில் வேலை செய்து கொண்டியிருந்த தாய் சில்ஜா கவனித்துக்கொண்டிருந்தார். இதற்கிடை யில் கைக்குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைப்பதற்காக பெட்ரூமுக்குச் சென்ற சகாய சில்ஜா, கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தபோது, மகனைக் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தில் தேடியும் குழந்தையைக் காணவில்லை. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. குழந்தை குறித்த எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதை யடுத்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை, பல் வேறு திசையிலும் விசாரணையை முடுக்கியது.

அப்போது அவர்களுக்கு கிடைத்த பல்வேறு தகவலின் அடிப்படையில், அதே தெருவில் வசிக்கும் பாத்திமா என்பவர்மேல் சந்தேகம் வர... அவளைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், நகைக்காக குழந்தையை அவள் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது.

அது குறித்து பதட்டம் மாறாமல் விவரித்த தனிப்படை போலீசார்....

cc

Advertisment

"பாத்திமா ஆடம்பர செலவுக்காக அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானவர்களிடம் கடன் வாங்கியிருப்பதும், அதைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதும் தெரியவந்தது. மேலும் தனியார் வங்கி ஒன்றில் போலி நகையை வைத்து 12 லட்ச ருபாயை மோசடி செய்த வழக்கும் அவள்மீது இருக்கிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டிய அவள், பலத்த பிரச்சினைக்கு நடுவில், இந்த மாதம் 25-ம் தேதி பணத்தை தருவதாக கூறியிருக்கிறாள். இந்த நிலையில் பணத்துக்கு என்ன செய்வது என்று பரிதவித்த அவள் பார்வையில், தெருவில் தனியாக விளையாடிய ஜோகன் ரிஷி பட்டுவிட்டான். காலையில் இருந்தே அந்த குழந்தையை நோட்டமிட்ட அவள், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குழந்தையிடம் பொம்மை துப்பாக்கியைக் காட்டி, தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயின் மற்றும் கையில் கிடந்த அரை பவுன் பிரேஸ்லெட்டை பறித்திருக்கிறாள். அப்போது குழந்தை சத்தம் போட்டு அழுததால், அதன் வாயில் துணியைச் சுத்திக் கட்டியதோடு, கழுத் தையும் நெரித்து, வீட்டில் இருந்த பீரோவுக்குள் அடைத்து வைத்துவிட்டாள். அரைமணி நேரத்தில் குழந்தை பீரோவுக்குள்ளேயே இறந்துவிட்டது. அதற்காக அவள் கவலைப்படவே இல்லை.

அதன்பிறகு நகையை அடகு வைத்து விட்டு குழந்தையின் தாயாருக்கு ஆறுதல் கூறிய படியே அவளும் குழந்தையை அங்குமிங்கும் தேடுவது போல் போக்கு காட்டியிருக்கிறாள். மேலும் இரவு குழந்தையின் உடலை கடலில் வீச முடிவு செய்திருக்கிறாள். இரவு முழுவதும் ஆட்கள் தேடிக்கொண்டு இருந்ததால் அது முடியாமல் போய்விட்டது. அதனால், வீட்டுக்குள்ளயே குழந்தையைப் புதைக்க முடிவு செய்தாள். இந்த நிலையில் அவள் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயை வாங்கிய பெண், அவள்மீது சந்தேகமாகி எங்களுக்குத் தகவல் கொடுத்தார். எங்கள் அடுத்த கட்ட விசாரணையில் அவள் சிக்கிக்கொண்டாள்'' என்று விவரித்தார்கள்.

தன் குழந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்த சில்ஜா துடியாய் துடித்துக் கதறியதைப் பார்த்து அந்த ஊரே கண்ணீர் வடித்தது. இந்த நிலையில் ஆவேசமடைந்த ஊர் மக்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து உடைத்தனர்.

குழந்தைக்கு அணிவித்து அழகு பார்த்த நகைகளே, அதன் உயிரைப் பறிக்கக் காரணமாகிவிட்டது என்பது கொடுமையிலும் கொடுமை.