நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, 6 மாதங்களுக்கு மேலாகியும், அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருகிறார் ஆளுநர் ரவி.
இந்த சூழலில்தான், நீட் விவகாரத்தில் மாநில அரசின் கோப்பில் ஆளுநர் அக்கறை காட்டாத போக்கினை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, ’ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள்’ என அவரைச் சந்தித்து வேண்டுகோள் வைப்பதற்கான முடிவை எடுக்கிறது தி.மு.க. தலைமை. தி.மு.க. எம்.பி.க்கள் மட்டும் என்பதாக இல்லாமல், தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பது என்பதாக தீர்மானிக்கப் பட்டு நாடாளுமன்ற மக்களவையின் தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதியை சந்திக்க முடிவெடுத்திருந்தனர்.
அதன்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க தி.மு.க. டி.ஆர் .பாலு, அ.தி.மு.க. நவநீத கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெங்கடேசன் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களை சந்திக்க மறுத்துள்ளார் ஜனாதிபதி. இதற்கு கொரோனா கால கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியிருக் கிறார்கள். மனுவினை ஜனாதிபதி மாளிகையில் கொடுத்துவிட்டு திரும்பி யிருக்கிறார்கள் தமிழக எம்.பி.க்கள்.
அதேசமயம், "மனுவில் குறிப் பிட்டுள்ள பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் விவாதிக்க வும்' என டி.ஆர்.பாலுவுக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தரப் பட்டுள்ளது. இதனை மேற்கோள் காட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் சார்பில் நேரம் கேட்கப்பட, கடந்த 28-ந் தேதி நேரம் ஒதுக்கினார் அமித்ஷா. அந்த நேரத்தில் அமித்ஷாவை சந்திக்க டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் சென்றபோது, அமித்ஷா இல்லை.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறார். இங்கு வருவதற்கு நேரமாகும் என தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்திருக்கிறார்கள் தமிழக எம்.பி.க்கள். ஆனால் அமித்ஷா வராததால் அங்கிருந்து எம்.பி.க் கள் கிளம்பிச் செல்ல, அடுத்த ஒருமணி நேரத்தில் அமித்ஷா வந்துவிட்டதை அறிந்து அவரை சந்திக்க எம்.பி.க்கள் மீண்டும் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் அமித்ஷா.
இதனால், தமிழக எம்.பி.க்கள் அப்செட்டான நிலையில், அமித்ஷாவின் அப்பாயின்ட்மெண்டிற்காக மீண்டும் அவர்கள் முயற்சித்தபோதும் நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேசமயம் மறுநாள் 29-ந் தேதி மீண்டும் எம்.பி.க்கள் நேரில் சென்றபோதும் உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அமித்ஷாவை சந்திக்க இரண்டு நாட்கள் படையெடுத்தும் எம்.பி.க்களால் சந்திக்க முடியாத தும், அவர்களை சந்திக்க அமித்ஷா மறுத்திருப்பதும் டெல்லியில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலு,”"ஜனாதிபதி அலுவலகத்தில் நாங்கள் கொடுத்த மனு உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால்தான் அமித்ஷாவின் அலுவலகத்துக்கு சென்றோம். உள்துறை அமைச்சருக்கு நிறைய வேலைகள் இருக்கும். இருந்தாலும் சந்திப்பதற்கான நேரத்தை சொல்லியிருக்கலாம்'' என்று சொல்லியிருக்கிறார்.
தமிழக எம்.பி.க்களை திட்டமிட்டே அமித்ஷா புறக்கணித் திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் ஆகியோ ரிடம் நாம் கேட்டபோது,” "ஒன்றிய அரசின் அமைச்சர்களை எம்.பி.க் கள் சந்தித்து, தங்களின் மாநிலங்களுக்காக கோரிக்கை வைப்பதும், எம்.பி.க்களுக்காக ஒன்றிய அமைச்சர்கள் நேரம் ஒதுக்கிச் சந்திப்பதும் இயல்பான விசயம். தனிப்பட்ட ஒரு எம்.பி. நேரம் கேட்கவில்லை. தமிழகத்திலிருந்து பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் குழு நேரம் கேட்கிறது. அப்படிப்பட்ட சூழலில், தமிழக எம்.பி.க்களை, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருக்க வேண்டும். ஆனால், சந்திக்காமல் அதற்கு என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்கத்தக்கதல்ல. புறக்கணித்திருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது'' என்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது,”"நீட் தேர்வு விலக்கு விவகாரம் குறித்து பேசுவதற்காக அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் விரும்புகிறார்கள் என்றாலும், தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிதி, பேரிடர் கால நிவாரணங்களுக்கு தமிழக முதல்வர் கேட்டுள்ள நிதி ஆகியவற்றை விவாதிப்பதற்காகவும் அவர்கள் வருகிறார்கள்'' என பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழக எம்.பி.க்களை அமித்ஷா சந்திக்கும் போது, அந்த சந்திப்புகளில் நடக்கும் விவாதங் களில் அமித்ஷா ஏதேனும் கமிட் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அது மேலும் சிக்கலாகும். தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு உண்டு. நீட் தேர்வு விலக்கு சாத்தியமே இல்லை என்கிற முடிவில் இருக்கிறது ஒன்றிய அரசு. அப்படியிருக்கையில், அமித்ஷா இதில் பாசிட்டிவாக கமிட் ஆனாலும், நெகட்டிவ் வாக கமிட் ஆனாலும் அது அரசியல் சிக்கலை பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்தக் கூடும். அதனால் அவர் களை சந்திப்பதை இப்போதைக்கு தவிர்க்கலாம் என பிரதமர் அலுவலகத்தின் யோசனைகள் அமித்ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டதால்தான் தமிழக எம்.பி.க்களை புறக்கணித்திருக்கிறார்'' என புறக்கணிப்பிற்கான பின்னணிகளை சுட்டிக் காட்டுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தமிழக எம்.பி.க்களை ஜனாதி பதி மறுத்த நிலையில், அவர் களின் மனு உள் துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டதாக சொல்லப்பட்டிருந்தாலும் கூட, "அமித் ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் முயற்சித் திருக்கக் கூடாது. மாறாக, பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்திருக்க வேண்டும்' என்றும் டெல்லியிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
மிக வலிமையான பெரும்பான்மை பலத் துடன் ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வை, முந்தைய அ.தி.மு.க. அரசைப்போல அடிமைப்படுத்தவோ, தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட அரசாக மாற்றவோ ஒன்றிய பா.ஜ.க. அரசால் முடியவில்லை. அதனால், தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக இருக்கும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தினை சிக்கல் நிறைந்ததாக வைத்திருக்கவே விரும்புகிறது ஒன்றிய அரசு. மேலும், அதிக நிதி நெருக்கடியில் திணறும் தி.மு.க. அரசு நிம்மதியாக ஆட்சி செய்ய வழி கிடைத்துவிடாமல் இருக்க, நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தை வஞ்சிக்கும் காய்களை கவனமாக நகர்த்தி வருகிறார் மோடி.
அதனால்தான், தமிழகத்தில் வரலாறு காணாமல் தொடர்ந்த மழையால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டதற்காக வெள்ள நிவாரண தற்காலிக பணிகளுக்கு ரூ.1,510 கோடியும், கடுமையாக சேதமடைந்த உள் கட்டமைப்புகளை சரிசெய்ய ரூ.4,719 கோடியும் என சுமார் ரூ.6,230 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு 3 முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும், மோடி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இதற்காக சமீபத்தில் நினைவூட்டல் கடிதமும் எழுதினார் ஸ்டாலின்.
ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சமீபத்தில் ரூ.3,063 கோடி ரூபாயை கூடுதல் மானியத் தொகையாக விடுவித்துள்ள ஒன்றிய அரசு, அதனை அஸ்ஸாம், குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பகிர்ந் தளித்திருக்கிறது. இதில் சிறு துளிகூட தமிழகத் துக்கு ஒதுக்கவில்லை. அதுவும் கூடுதல் மானியமாக 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மோடி அரசு, கடுமையாக மழை வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியைக் கூட தராமல் வஞ்சிப்பது,… தி.மு.க. அரசை தங்களின் கைப்பாவையாக மாற்றுவதற்கான ஒரு யுக்தி என்பதாகவே பார்க்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு, நீட் தேர்வு நெருக்கடி, 7 பேர் விடுதலை ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழகத்தில் மறைமுக அரசியல் விளையாட்டினை ஆடும் மோடி, மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற் காக வருகிற 12-ந் தேதி விருதுநகர் வருகிறார். அந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சிப்ப தாக மோடியின் முன்னிலையில் அழுத்தமாகப் பேச வேண்டும். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும் ஸ்டாலின் பேச்சு அமைந்தால் மட்டுமே மோடி விளையாடும் அரசியலுக்கு நெருக்கடிகளை உருவாக்க முடியும். அப்படி பேசினால் தமிழக எம்.பி.க்களை சந்திக்க மறுத்த அமித்ஷாவுக்கும் பதிலடி தந்ததுபோல இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஒமைக்ரான் பரவலால் பிரதமர் நிகழ்ச்சி வேறு தேதிக்குத் தள்ளிப் போகக்கூடிய சூழல் உள்ளது. எனினும், பிரதமரை எப்போது சந்திக்க நேர்ந்தாலும் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியாக வேண்டும் என்கிறார்கள்.
சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில், தமிழக எம்.பி.க்களை சந்திக்குமாறு அமித்ஷாவுக்கு திங்களன்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.