வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும் சரி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. என்றாலும் சரி, சிவபெருமான் என்றாலும் சரி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முகம்தான் நம் கண்முன் நிற்கும். அவர் போடாத வேஷமில்லை என்பார்கள். அவரையே மிஞ்சக்கூடியவராக அரசியலுக்காகப் பல்வேறு வேஷங்களில் வெளுத்துவாங்குகிறார் நம் பிரதமர் மோடி. ஏழைத்தாயின் மகன் என்று தன்னைச் சொல்லிக்கொண் டாலும், விலையுயர்ந்த உடைகளுடன் அவர் போடுகின்ற கெட்டப்புகள், இந்தியா முழுக்க பேசுபொருளாக இருக்கின்றன. தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக, கடந்த திங்களன்று குருத்வாரா பாட்னா சாஹிப்புக்கு சீக்கியர்களின் கெட்டப்பில் காவி நிற டர்பன் அணிந்தபடி சென்ற பிரதமர், அங்கே வழிபாடு நடத்தியதோடு, சப்பாத்தி தேய்ப்பது போலவும், உணவு தயாரிப்பது போலவும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் பேசுபொருளாகின.
அரசியலில் ஏதேனும் பரபரப்பான சம்பவங்கள் அவரது ஆட்சிக்கு எதிராக நடக்கும்போதெல்லாம் பிரதமர் மோடி, வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் எடுத்து, அந்த சம்பவத்தை மறக்கடிக்கச்செய்து, தனது கெட்டப்பை பேசுபொருளாக்குவது வழக்கம். அதேபோல், விதவிதமான தொப்பிகளை அணிந்து போஸ் கொடுப்பதில் உலக அளவிலான தலைவர்களில், மோடி கின்னஸ் சாதனையே படைத்திருப்பார் என்று சொல்லலாம். அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்தே விதவிதமான தொப்பிகளை அணிந்து மக்களைக் கவர்வதில் குறியாக இருக்கிறார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, சுதந்திர தினமானாலும் சரி, குடியரசு தினமானாலும் சரி, மோடியின் தலைப்பாகை பேசுபொருளாகிவிடும்.
மோடி பிரதமரான பின்னர் எடுத்த போட்டோஷூட்கள், அவரது ஓட்டரசியலுக்கு, குறிப்பாக இந்துத்வா அரசியலுக்கும், தேசபக்தி அரசியலுக்கும் வலுச்சேர்க்கும் விதமாகவே இருக்கின்றன. தன்னை ஒரு பக்திமானாக, தவ முனிவரைப்போல் காட்டிக்கொள் வதில் முனைப்போடு இருக்கிறார்.
கடந்த 2019 பிப்ரவரி 14ஆம் தேதி, மிகவும் கொடூரமான புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்று, 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நடை பெறுவதற்கு முன்னதாக, டிஸ்கவரி சேனலின் வீடியோஷூட் ஒன்றில் மோடி பிஸியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அது பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கடந்த 2019 பிப்ரவரியில் உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரக்யாராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா வில், கலந்துகொள்ளச் சென்ற மோடி, அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்வதுபோல் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு, சர்ச்சையைத் திசைதிருப்பினார். 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்ததும் உத்தரகாண்டில் ஒரு குகையில் தவமிருப்பதுபோல் அவர் நடத்திய போட்டோஷூட் அவருக்கு மதரீதியிலான வாக்குகளை அறுவடை செய்ய உதவியது. அந்த குகையும், 'மோடி குகை' என்ற பெயருடன் சுற்றுலாத்தல மானது! 2019 செப்டம்பரில் சீன அதிபர் ஜின்பிங்கும் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது வெள்ளை வேட்டி சட்டையில் சீன அதிபருடன் கைகோர்த்து போட்டோஷூட் நடத்தினார் மோடி. அதோடு, மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளைச் சேகரித்து தூய்மைப்பணியில் ஈடுபடுவது போலவும் விடிகாலையில் போட்டோஷூட் நடத்தினார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்தபோது, ஊரடங்கில் இந்தியாவே முடங்கிக்கிடந்தபோது, ராமர் கோவில் கட்டுமான பூமி பூஜையை நடத்தி, அதில் மாஸ்க் அணிந்தபடி மஞ்சள் உடையுடன் பக்தி மார்க்கமாக கலந்துகொண்டார் மோடி. அடுத்ததாக ராமர் கோவில் திறப்பு விழாவில் இளமஞ்சள் நிற உடையில் பூசாரியாகவே மாறி ராம் லல்லாவுக்கு பூஜை செய்து தன்னை முன்னிறுத்திக்கொண்டார்.
கொரோனாவால் தினசரி 1000 பேர் இந்தியாவில் உயிரிழந்துகொண்டிருந்த... பொதுமுடக்கத்தால் அனைவரும் வருமானமின்றித் தவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான், பசுமையான சூழலில் ஒரு மரத்தடியில் அமர்ந்தவாறு மோடி பேப்பர் படிக்க, அருகில் வாத்துக்கள் நடந்தபடியான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார் மோடி. அதேபோல், மயிலுக்குத் தீனி போடுவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டார்.
2023 ஏப்ரல் மாதத்தில், சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கிவைக்க வந்த மோடி, அந்த ரயிலுக்குள் மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதுபோல் போட்டோஷூட் எடுத்த கையோடு, கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு சென்று, அங்குள்ள வனப்பகுதியில் வாகனத்தில் பயணித்தபடி, வைல்ட்லைஃப் போட்டோ கிராபர்களைப் போன்ற கெட்டப்பில் ஃபைனாகுலரில் பார்வையிடுவது போலவும், ஜீப்பில் பயணிப்பது போலவும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அடுத்ததாக நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை சரணாலயத்துக்குச் சென்ற மோடி, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியரைச் சந்தித்து, வனக்காவலர்களின் உடையணிந்து, தொப்பியணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். யானைகளைத் தொட்டுத்தடவியபடியும் போட்டோ எடுத்துக்கொண்டார்.
2023 நவம்பர் 19ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டம் அகமதாபாத்தில் நடந்தபோது அங்கு வந்த மோடி, இறுதியாட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வேண்டாவெறுப்பாகக் கோப்பையை வழங்கிய கையோடு, இந்திய வீரர்களின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைப் போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டார். இதே காலகட்டத்தில்தான் உத்தரகாண்டில் சில்க்யாரா என்ற இடத்தில் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளாகி 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கித்தவித்தபடியிருந்தனர். இன்னொருபக்கம் மணிப்பூரில் கலவரம் பெரிய அளவில் நடந்துகொண்டிருந்தது. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், கிரிக்கெட் வீரர்களோடு போட்டோஷூட் நடத்தியதோடு, திடீரென விமானப்படை வீரரின் கெட்டப்பில் மோடி நடந்து வருவது போலவும், தேஜஸ் போர் விமானத்தில் அமர்ந்து விரலை உயர்த்திக்காட்டுவது போலவும், டாட்டா காட்டுவது போலவும், விமானத்தில் பறப்பது போலவுமான புகைப்படங்களும் வீடியோக்களும் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன. அதில், மோடி பறப்பது போன்ற வீடியோக்காட்சி கிராபிக்ஸில் உருவாக்கப் பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் லட்சத்தீவில் 1,156 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கச் சென்றிருந்த மோடி, அங்கேயும் கடலுக்குள் லைஃப் ஜாக்கெட்டோடு நிற்பது போலவும், கடற்கரையில் ஈஸி சேரில் அமர்ந்து கடலை வேடிக்கை பார்ப்பது போலவும் போட்டோஷூட் எடுத்தார். இதையொட்டி மாலத்தீவு அமைச்சர் கமெண்ட் அடிக்க, அதுவே இரு நாடுகளுக்கிடையிலான பகையாக உருவெடுத்து, இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற உத்தரவிடும்படி பதட்டமானது. ஒரு போட்டோஷூட்டுக்கு இம்புட்டு அக்கப்போரா என்பதாகத்தான் ஆனது! அதே ஜனவரியில், நாசிக்கிலுள்ள கல்ராம் கோவிலில் வழிபாடு நடத்திய மோடி, அக்கோவிலில் தூய்மைப்பணியில் ஈடுபடுவதுபோல் போட்டோஷூட் நடத்தினார்.
அடுத்ததாக, பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, குஜராத்திலுள்ள துவாரகா மாவட்டத்தில், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி, அப்படியே துவாரகாவிலுள்ள கடலுக்கு சென்று, நீரில் மூழ்குவதில் பயிற்சிபெற்ற வீரர்களின் உதவியோடு ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புக் கவசங்களோடு தவம் செய்வதுபோல் வீடியோஷூட் எடுத்து, 'துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீகமான அனுபவம்!' என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இது முழுக்க முழுக்க இந்துத்வா வாக்குகளை அறுவடை செய்யும் உத்தியே! தற்போது அகில இந்திய அளவில் ராகுல்காந்தியின் எதார்த்தமான அரசியலுக்கு ஆதரவு பெருகிவரும் சூழலில், மோடியின் போட்டோஷூட் அரசியல் பின்னடைவைச் சந்திப்பதாக அரசியல்நோக் கர்கள் கருதுகிறார்கள்!