றுமாத தி.மு.க. ஆட்சியில் முற்றுகைக்குள் ளான அமைச்சர் என்பதில் முதலிடம் பிடித்திருக்கிறார் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி. சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள வீட்டை முற்றுகையிட்டவர்கள் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர். அதன் தலைவர் அன்பரசனிடம் பேசியபோது, "தமிழகம் முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இதில் பார் நடத்துவதற்கான லைசன்சுக்குரிய தொகையை டாஸ்மாக் நிர்வாகத்திடம் கட்டிவிட்டு பார்களை நடத்துவோம். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை லைசன்ஸ் பெறும் முறையை கொண்டுவந்தனர். அதன் காலம் 2021 அக்டோபர் மாதத்தோடு முடிந்த நிலையில்... "டிசம்பர் 30-ந் தேதி பார் டெண்டர் நடத்தப்படும்' என தற்போதைய தி.மு.க. அரசு அறிவித்தது.

mm

பார் எடுக்க விருப்பமுள்ளவர்கள்தான் பார் நடத்துவதற்கான இடத்தைக் காண்பித்து அதில் பார் உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பார் நடத்தணும்னா, குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் ஒரு மாதத்தின் விற்பனைத் தொகையில் 1.8 சதவீதமும், பேரூராட்சி பகுதிகளுக்கு 1.6 சதவீதமும், ஊராட்சி பகுதிகளில் 1.4 சதவீதமும் பார் விற்பனை வரித் தொகையாக டாஸ்மாக் நிர்வாகத்திடம் கட்டவேண்டும். சென்னையில் ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு மாதத்தின் சரக்கு விற்பனை 10 கோடி ரூபாய் எனில் அந்த கடையை ஒட்டி பார் லைசன்ஸ் எடுத்துள்ள உரிமையாளர் 18 லட்ச ரூபாயை டாஸ்மாக் நிர்வாகத்திடம் கட்ட வேண்டும். இதுபோக, ஒரு பாரை உருவாக்குவதற்கு குறைந்தது 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டியதிருக்கிறது. ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம், சைடிஷ் அயிட்டங்களுக்கான முதலீடு தனி. கொரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால் பெரும் நட்டம்.

இந்த முறையாவது பிழைப்பு நடத்தலாம் என பார்த்தால், கோர்ட்டுக்குப் போய்தான் விண்ணப்பமே வாங்க முடிந்தது. ஆனால், அதைப் பூர்த்தி செய்தும் எங்களால் பாக்ஸில் போட முடியவில்லை. ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் தரப்பினர் தமிழகம் முழுவதும், நேரம் முடிந்தபிறகும் விண்ணப்பங்களைக் கட்டுக் கட்டாகப் போட்டனர். டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளவே யில்லை. முறைகேடுகளைக் கண்டித்துதான் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். முதல்வர் தலையிட்டு, வெளியிப்படைத்தன்மையுடன் பார் டெண்டர்களைக் கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பார் உரிமையாளர்கள் பலரிடமும் நாம் பேசியபோது, ’"கொரோனா பாதிப்பை முன்வைத்து எங்களுக்கே மேலும் 2 ஆண்டுகள் பார்களை ஒதுக்கியிருக்கலாம். ஆனாலும் டெண்டர் விட்டனர். ஒரு விண்ணப்பத்தின் விலை 525 ரூபாய். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் 25,000 ரூபாய்க்கான இ.எம்.டி. தொகையையும் கட்ட வேண்டும். ஆனால், பலரின் விண்ணப்பங்களை நாங்கள் பார்த்தபோது, ஒருத்தருடைய பேங்க் அக்கவுண்டில் இருந்தே பல விண்ணப்பங்களுக்கு இ.எம்.டி. பணம் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு எங்களுக்கு அதிர்ச்சி.

Advertisment

mm

இதுகுறித்து அமைச்சரின் தம்பி அசோக்கிடம் எங்கள் நிர்வாகிகள் விவாதித்தபோது, "குறைந்தபட்சம் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 12 லட்சம் வரை என மாதந்தோறும் கொடுக்க வேண்டும் என்றும், பாரில் விற்கப்படும் பொருட்களை தாங்கள் சொல்கிறவர்களி டம் மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும்' என்றெல்லாம் வலியுறுத்தினார். இதற்கு சங்கத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை.

மணல் பிஸினஸ் போல, டாஸ்மாக் பார் வருமானத்தையும் தமிழ்நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப் பார்க்கிறார்கள். தமிழகத்தை சென்னை, திருச்சி, மதுரை, கோவை என 4 மண்டலமாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்தையும் நிர்வகிக்க 2 நபர்களை அமைச்சரின் தம்பி அசோக் நியமித்திருக்கிறார். அவர்கள் மூலம் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து, மாதத்திற்கு இவ்வளவு என டார்கெட் வைத்து வசூலிப்பதுதான் அசோக் பொறுப்பிலான திட்டம். ஒவ்வொரு பாரும் தாங்கள் விரும்பும் நபருக்கே கிடைத்தால்தான் மெகா வசூல் கச்சிதமாக இருக்கும் என்பதற்காகவே டெண்டர் வில்லங்கங்கள் அரங்கேறுகின்றன.

தமிழகம் முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகளுக்கும் பார்கள் திறந்து, ஒரு பாருக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 12 லட்சம் வரை மாதந்தோறும் கப்பம் கட்ட வேண்டும். சராசரியாக 5 லட்சம் என வைத்துக் கொண்டாலும் மாதம் சுமார் 260 கோடி ரூபாய் வசூலிப்பதுதான் அமைச்சர் தரப்பின் திட்டம்'' என்கிறார்கள் அதிரடியாக.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த மெகா திட்டத்தை எதிர்க்க முடியாமல் தி.மு.க. அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க் களும் திணறுகின்றனர். சொந்தக் கட்சிக்காரர்கள் கூட விண்ணப்பிக்க முடியாதபடி, கிடைக்காதபடி அமைச்சர் தரப்பு பிரேக் போட்டிருக்கிறது. செம கடுப்பில் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "எந்த ஆட்சியா இருந்தாலும் டாஸ்மாக் பார்தான் எம்.எல்.ஏ. மற்றும் லோக்கல் நிர்வாகிகளுக்குமான மாத வருமானம். ஆனால், இப்ப செந்தில்பாலாஜி தனி ரூட்டில் செல்கிறார். அவரது துறையில் எந்த அமைச்சரும், தி.மு.க.வினரும் தலையிடக்கூடாது என நினைக்கிறார். அமைச்சர் நேருவிடம் திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவர், "எனது தொகுதியிலுள்ள டாஸ்மாக் பார்களை எனக்கே ஒதுக்க வேண்டும்' என சொல்ல, "யோவ்… டாஸ்மாக் அந்த ஆள்கிட்டே இருக்குய்யா... யாரும் தலையிட முடியாது. பார் எடுக்கிறதை விட்டுட்டு வேற எதையாவது பாரு' என திட்டி அனுப்பிவிட்டார் நேரு. இப்படித்தான் எல்லா மாவட்டங்களிலும் இருக்கு.

ddஅமைச்சர்களும் கட்சியினரும் சிபாரிசோடு வரக்கூடாது என்பதற்காகவே ’மாவட்டத்திலுள்ள பார்களை ஒருங்கிணைத்து முழுமையாக நாங்களே கவனிக்கப்போகிறோம்’ என அனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் அனுப்புகிறார் செந்தில் பாலாஜி. லோக்கல் கட்சிக்காரன் நாலு காசு சம்பாதிக்க விடாம கார்ப்பரேட் பாணியில் கல்லா கட்டும் திட்டமெல்லாம் நல்லாவா இருக்கு? பரமசிவன் கழுத்து பாம்பாக இருக்கிறார் செந்தில் பாலாஜி. தலைமைதான் இதை உணரணும்''‘என்று வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகிய இருவரின் கருத்தை அறிய அவர்களை தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர்கள் பிக்அப் பண்ணவில்லை.

இந்த நிலையில், தனக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து பத்திரிகை யாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "டாஸ்மாக் பார் அமைப்பதற்கான விண் ணப்பத்தினை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். அதனால் டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கடந்த காலங்களில் பார் லைசன்ஸ் முறையாக விடப்படவும் இல்லை. அதனை வெளிப்படைத்தன்மையுடன் முறைப்படுத்துகிறோம். ஏற்கனவே 66 நிபந்தனைகள் இருக்கிறது. அத்துடன், பார்களை தூய்மையாக வைத்திருப்பது, முழுமையாக இருக்கைகள் அமைப்பது என 2 நிபந்தனைகளை புதிதாக சேர்த்திருக்கிறோம். டெண்டரில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது'' என்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் பார் மாஃபியாக்கள் உருவாக்கப் படுகிறார்கள் என செந்தில் பாலாஜிக்கு எதிராக கச்சைக் கட்டும் குற்றச்சாட்டுகள் முதலமைச்சரின் நேர்மைக்கு சவால் விடுவதாக இருக்கிறது என்கிறார்கள் நிலவரம் அறிந்த உயரதிகாரிகள்.

Advertisment

_________________________

சசி நிறுவன சரக்குக்கு ஸ்பெஷல் மரியாதை!

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரிடம் விசாரித்தபோது, "தமிழகத்துக்கு தேவையான மதுபானங்களை 5 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதில் சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனமும் ஒன்று. மிடாஸ் சரக்குகள் டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாக கொள்முதல் செய்வதையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் சில லாரி நிறுவனங்கள் மிடாஸ் சரக்குகளை எடுத்துக் கொண்டு வந்து டாஸ்மாக் சில்லரைக் கடைகளிலும் பார்களிலும் இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர். துறையின் மேலிட ஆதரவு இல்லாமல் இந்த திருட்டுத்தனத்தை செய்ய முடியாது. பழைய விசுவாசத்திற்காக இது செய்யப்படுகிறது''‘என்கிறார்கள் அதிரடியாக.