மலைவாழ் பழங்குடியான காணியின மக்களின் வாழ்வாதாரம் பொருட்டு மலை ஏறியிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நெல்லையில் நடந்த பொருநை இலக்கியத் திருவிழாவில், ஆதித்தமிழர் களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. அங்கே, நெல்லை மாவட்டம், அம்பையின் அருகேயுள்ள பாபநாசம் தென்மேற்குத் தொடர்ச்சி மலை மீது வாழ்கின்ற பழங்குடியினரான காணி சமூக மக்களின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
காணி சமூக மக்களின் வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம், குடும்ப வாழ்க்கை முறைகள், மலைக்குகைகளில் செடி கொடிகளாலான டெண்ட் அமைத்து நடத்தப்படுகிற அவர்களின் திருமணச் சடங்கு முறைகள் போன்றவற்றை விளக்கிய குறும்படத்தை, நிகழ்ச்சிக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து வியந்திருக்கிறார். அந்தப் பழங்குடி காணியின மக்களை, அவர்களின் இருப்பிடத்திற்கே தேடிச்சென்று சந்திக்க வேண்டுமென்று அப்போதே முடிவு செய்திருக்கிறார்.
பாபநாசம் பகுதியிலுள்ள தென்மேற்குத் தொடர்ச்சி மலை, அடர் வனக்காடுகளைக் கொண்டது. இதன்மீது உற்பத்தியாகிற பொருநை நதியான தாமிரபரணியாறு, பாபநாசம் பகுதி வழியாகத் தான் தரையிறங்கி தென்மாவட்டச் சமவெளிகளில் பாய்ந்தோடுகிறது. இங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு மலைப் பயணத்திலிருக்கிறது காரையாறு மலை. அங்கிருந்து மேலே சென்றால் அகஸ்தியர் காணிக் குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு மலை முகட்டுப் பகுதிகளில் காணியின வம்சாவழியினரின் சுமார் 150 குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர். மலையின் மீது கிழங்கு வகைகளைப் பயிரிடுவது தான் இவர்களது வாழ்வாதாரம். குடும்பம், பிள்ளைகள் என்றிருக்கும் இவர்கள், முந்தைய அரசுகள் வழங்கிய அடிப்படை வசதிகளைக் கொண்டு தான் பிழைப்பை நகர்த்தவேண்டிய கட்டாயம்.
இந்தச் சூழலில் தான் இவர்களின் வாழ்க்கைக் கட்டமைப்பு களைப் பற்றிய ஆவணப்படம் வாயிலாக ஈர்ப்பாகிப் போன அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காரையாறு மலை சென்று, அங்கிருந்து மலையேறி, சின்ன மயிலாறு அகஸ்தியர் காணி குடியிருப்புக்கு சென்று, பழங்குடியினரான காணியின மக்களைச் சந்தித்திருக்கிறார். அமைச்சர் தங்களைக் காண, தங்கள் மலைக்கே வந்ததால் அம்மக்களுக்கு ஆச்சர்யம். அமைச்சருடன் நெல்லை ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர். காணி சமூக மக்களிடம் சகஜமாகப் பேசிய அமைச்சர், அவர்களின் குறைகள். வாழ்வாதாரம் பற்றிக் கேட்டறிந்தார்.
"ஐயா, சுதந்திரமடைஞ்சு இத்தன வருஷ காலமாச்சு. எங்களத் தேடி மலைப்பக்கம் இதுவரைக்கும் யாரும் வரலைய்யா. எங்களத் தேடி வந்த மொத அமைச்சர் நீங்க தாம்யா. நாடு நகரத்தப்போல தலைமுறை, தலைமுறையா எங்க மலைக்குடியிருப்புகளுக்கு கரண்டு கெடையாதுய்யா. சோலார் மூலம் மின்சாரம் கெடைச்சது சரிப்பட்டு வரலைய்யா. இப்ப தி.மு.க. ஆட்சிக்கு வந்து போர்டு வந்தப்பறம் தாம்யா எங்களுக்கு கரண்டு கெடைச்சிருக்கு. நன்றிங்கய்யா'' என்றவர்கள்...
"தாமிரபரணியாறு இந்த மலையிலதாம்யா ஓடுது. குடிதண்ணீருக்காக பள்ளத்தாக்கு தாண்டி அங்கபோயி எடுக்கிறது சிரமமாயிருக்குய்யா. எங்க குடியிருப்புக்கு குடிதண்ணீர் பைப்லைன் போட்டுக் குடுத்தீகன்னா உபகாரமா இருக்கும்யா. பஸ் வசதியில்ல. தலைமுறை, தலைமுறையா எங்க புள்ளைகளுக்கு சாதி சர்டிபிகேட்டு கெடைக்காம திண்டாடுனோம். எங்க புள்ளைக படிக்க முடியல. எங்க கஷ்டத்தப் பாத்துட்டு 10 வருஷத்துக்கு முன்னாலருந்த கலெக்டரய்யா பிரகாஷ்தாம்யா, எங்களுக்கு சாதி சர்டிபிகேட் குடுத்தாக. எங்க புள்ளைகளப் படிக்க வச்சிருக்கோம்யா. கல்வி, வேல வாய்ப்புல எங்க இனத்துக்கு இட ஒதுக்கீடு வழியில்லய்யா. வேல வாய்ப்புக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா, புண்ணியமாயிருக்கும்யா. மயிலாறு பாலம் சிதைஞ்சி போயி கெடக்கு. அதச் சீர்பண்ணிக் குடுத்தீகன்னா, நாங்க போய்வர வசதியாகயிருக் கும்யா'' என, தங்களின் நீண்டகாலக் கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்தனர்.
அனைத்தையும் நுணுக்கமாகக் கேட்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, குடி தண்ணீர் தேவையை சரிசெய்ய வி.கே.புரம் நகராட்சியில் அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். மற்ற கோரிக்கைகளை முதல்வரிடம் பேசி, விரைவில் நிறைவேற்ற வழிசெய்கிறேன் என்று தெரிவித்தது, காணியின மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அகஸ்தியர் காணிக் குடியிருப்புவாசிகள் தங்களின் பாரம்பரிய நடனத்தால் அமைச்சரை வவேற்றனர்.
இதன்பின் காணியின மக்களின் பிள்ளைகள் படிப்பதற்காக காரையாறில் அவர்களுக்காக அரசு ஏற்படுத்திக் கொடுத்த, அரசு உண்டு உறைவிடப் பள்ளிக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்த காணியின மாணவர்களிடம், அவர்களின் கல்வி முறை, உணவுத் தேவைகள் பற்றி விசாரித்தார். அங்கு மாணவர்களுக் குப் பாடம் நடத்திவரும் ஆசிரியர் கிரிஜாவிடம், கல்வி மற்றும் பணித்தன்மை பற்றி விளக்கமாகக் கேட்டறிந்தார். ஏறாத மலைதனில் ஏறியிருக்கிறார் அமைச்சர். தங்கள் பிரச்சனைகளுக்கான விடிவு காலம் குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார்கள் காணியின மக்கள்.