பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளரான முனிய முத்துவின் மகள் புவனேஸ்வரி, 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேரளி, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு விடுதியின் வாசல்பகுதியில் சக மாணவிகளுடன் அமர்ந்து புவனேஸ்வரி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாய் அருகில்வந்து நின்றுள்ளது. அந்த நாயை 'ச்சூ.. ச்சூ...' எனக் கையை நீட்டி விரட்ட, அந்த நாயோ வெறியோடு புவனேஸ்வரி மீது பாய்ந்து, அவரது முகத்தில் பல இடங்களில் கடித்துக் குதறியது. புவனேஸ்வரி அலறித்துடிக்க, சக மாணவிகள் அந்த வெறிநாயை துரத்திவிட்டு, மாணவியை உடனடி யாக பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டுசென்று சேர்த்துள்ளனர். அம்மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த செய்தி சில லோக்கல் ஊடகங்களில் வெளி வந்தது.

mm

அந்த செய்தியைப் பார்த்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் போக்குவரத்துத் துறை அமைச்சரு மான எஸ்.எஸ்.சிவசங்கர், உடனே குன்னம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரனை அழைத்து, மாணவியின் நிலை குறித்து அறிந்துவருமாறு மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர், அமைச்சரே நேரில் மருத்துவமனைக்கு சென்று, மாணவியிடம் ஆறுதல் தெரிவித்ததோடு, மருத்துவர்களிடம் அம்மாணவிக்கான சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

அவரிடம் மருத்துவர்கள், "மாணவியின் முகத்தில் பல இடங்களில் நாய் கடித்துக் குதறி யுள்ளதால் அந்த காயங்களைக் குணப்படுத்திய போதும் காயத்தின் தழும்புகள் மாறாது. அதை முழுமையாகச் சரிசெய்ய வேண்டுமானால் மாணவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். அதன்மூலம் பழைய முகமாகக் கொண்டுவரலாம். அதற்கு நிறைய செலவாகுமென்று மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தோம். ஏழைகளாக இருப்பதால் தங்களால் அவ்வளவு செலவழிக்க வழியில்லையென்று தெரிவித்தார்கள்'' என்ற தகவலை அமைச்சரிடம் கூறினார்கள்.

Advertisment

அமைச்சரோ, மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, முகத்தை சீரமைக்கத் தேவையான செலவுத்தொகை (சுமார் ஒரு லட்சம்) குறித்து விசாரித்து, அதனை நிர்வாகத்திடம் செலுத்தியாயிற்று. மாணவிக்கு தேவையான சிகிச்சையை தொடருங்கள். வேறெந்த உதவி தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புகொள் ளுங்கள்'' எனக் கூறிவிட்டு விடைபெற்றார். அவர் சொல்வதைக் கேட்டு மாணவியின் பெற்றோர் மிகுந்த நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னேற்றத் தில் மிகுந்த அக்கறையுள்ள அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தனது தொகுதியில் மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ -மாணவி களுக்காக, அனுபவமிக்க கல்வியாளர்களைக் கொண்டு, "தேர்வை வெல்வோம்' என்ற பெயரில், வினா, விடைகளுடன் கூடிய புத்தகங்களை தனது செலவிலேயே தயாரிக்கச் சொல்லி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சக்கரை