நண்பர் ஒருவர் மூலம் நம்மைச் சந்தித்தார்கள் இரண்டு நபர்கள்.
""அழகான கேரள பெண்கள்ட்ட சல்லாபம் செய்ய ஆசைப்பட்டு... இப்ப இக்கட்டுல இருக்கிறோம் சார்'' என்றவர்கள் ""வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை நம்மிடம் காட்டினார்கள். கூடவே.. “""எங்களோட பெயரோ... போட்டோவோ வேண்டாம்'' என்றார்கள்.
சபலம்... அவர்களை எந்த அளவிற்கு பலவீனப் படுத்தியிருக்கிறது என்பதை அவர்களின் பதட்டமான மனநிலை மூலம் நம்மால் உணரமுடிந்தது. இவர்களின் அனுபவம்... மற்றவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்பதால்... ""நடந்ததைச் சொல்லுங்க'' என்றோம்.
""கொச்சியை சேர்ந்த ஓரு கப்பல் நிறுவனத்தோட கோட்டயம் ஆபீஸில் கைநிறைய சம்பளத்தோட வேலை பார்க்கிறோம். நாங்க குடும்பஸ்தர்கள். திருமணமாகி குழந்தைகளும் இருக்கு. எங்ககூட கோவை, சென்னை, நாகப்பட்டினம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவங்களும் வேலை பார்க்கிறாங்க. இதில் எத்தனை பேர் எங்களை போல் சிக்கியிருக்காங்கனு தெரியலை. ஆன்லைன் மூலம் ஆசை காட்டும் பெண்களால் பணத்தையும், நிம்மதியையும் இழந்து குடும்ப மானத்தை காப்பாற்ற ஓடிக்கொண்டேயிருக்கிறோம்'' என்றார்கள்.
""இப்படி கோரஸா சொன்னா எப்படி? ஒவ்வொருத்தரும் தனித்தனியா சொல்லுங்க'' என்றோம்.
""சொல்றதுக்கு வெட்கமாத்தான் சார் இருக்கு. ஆனாலும் சொல்றேன். என்னோட ஊர் கன்னியாகுமரி. ஆன்லைன் விபச்சாரம் பத்தி கேள்விப்பட்டிருந்த நான் ஒரு சபலத்துல... ‘"லொகான்டோ’ ஆன்லைன்' இணைய தளத்துக்குள்ள போனேன். அதுல எர்ணாகுளத்தைச் சேர்ந்த நீது என்கிற பெண் பெயரை செலக்ட் செஞ்சு... அதுல கேட்டிருந்தபடி என்னோட மொபைல் நம்பரை கொடுத்தேன். கொஞ்சநேரத்துல வீடியோகால் மூலமா ஒரு பெண் முகத்தை மட்டும் காட்டி பேசினாள். அவளோட முகஅழகு என்னை ஈர்த்திருச்சு. "நீது'’என மலையாள பாஷையில் அறிமுகப்படுத்திக்கிட்டாள். நான் தமிழன்னாலும்... எனக்கு மலையாளமும் தெரியும். அதனால் மலையாள மொழியிலேயே பேசினேன். சினிமா துறையைச் சேர்ந்தவன் என்றும் பொய் சொன்னேன்.
"நடிகர் திலீப்பை அறியுமோ?'னு கேட்டாள். "ரொம்ப நல்ல அறிமுகம் அவரோட உண்டு'னு சொன்னேன். என் மனைவி, குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தாள். ‘"நான் உங்களுக்கு எப்ப வேணும்?'’னு கேட்டாள். அவளோட சிணுங்கல் பேச்சுல கிறங்கிப் போய்ட்டேன். "சனிக்கிழமை நைட்'னு சொன்னேன். ரேட் 25 ஆயிரம் ரூபாய்னும், எர்ணாகுளத்தில் ஒரு ஸ்டார் ஹோட்டலைச் சொல்லி... அங்க ரூம் போடணும் என்றும் அவள் சொல்ல... நானும் சம்மதிச்சேன். அவளோட கவர்ச்சி என்னை சம்மதிக்க வச்சிருச்சு. உடனே தன்னோட மூணு போட்டோக்களை வாட்ஸ்-ஆப்பில் அனுப்பி வச்சா. ’"சனிக்கிழமை ராத்ரி நான் இந்த போட்டோல இருக்கிற மாதிரி இருக்கேனானு நீங்க பார்க்கணும்ல. அதுக்குத்தான் இந்த போட்டோஸ்'னு சொன்னா. அந்த போட்டோக்களைப் பார்த்தா உங்களுக்கும் சபலம் வரும்...''
""ஹலோ... என்னங்க இப்படிச் சொல்றீங்க?''
""தப்பா நினைக்காதீங்க... பொதுவா எல்லாருக்குமே சபலம் வரும்கிறதுக்கு உதாரணமா சொன்னேன்...''
""மேல சொல்லுங்க...''
""இந்த நிலையில் நான் அவளை புக் பண்ணுன அந்த சனிக்கிழமை திடீர்னு கம்பெனி விசயமாக பெங்களூருவுக்கு போக வேண்டியிருந்ததால் கிளம்பிட்டேன். பெங்களூரு செல்லும் நேரத்தில் நான் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துட்டு நைட் ஆன் செஞ்சபோது சனிக்கிழமை 22 முறை அவள் கால் செய்தது தெரிந்தது. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இன்னொரு நம்பரிலிருந்து என்னை தொடர்புகொண்ட அவள் "என்னை புக் செய்துட்டு எதுக்கு ஏமாத்தின? நீ புக் செய்திருந்த அதேநாள் வேற புக்கிங் வந்தது. நான் ஏற்கனவே உனக்கு புக்கிங் ஆனதுனால அதையெல்லாம் கேன்சல் செஞ்சேன். அதனால... புக்செய்த பின் கேன்சல் செய்தாலும் பணம் தந்துதான் ஆகணும். நீ பணம் தரலைன்னா நான் என்ன செய்வேனு சொல்லமாட்டேன். செய்த பிறகு அத நீ அனுபவிப்ப.
நீ சினிமா துறையின் பெயர சொல்லி என்னை புக் செய்ததோட ’திலீப் சேட்டனை தெரியும்னு பொய் சொன்ன. உன்னைவிட எனக்கு திலீப் சேட்டன நல்லா தெரியும். நீ குடும்பஸ்தன்னு சொன்னதால... ஒருநாள் வெயிட் பண்ணுறேன். நாளை சாயங்காலத்துக்கு முன் எனக்கு பணம் வந்திடணும். இல்லேன்னா பணத்தை வாங்க நேர்ல உன் கிட்ட வர வேண்டியிருக்கும். நீ பேசியது, புக் செய்தது எல்லாம் என்கிட்ட இருக்கு. தேவையில்லாமல் ஆபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே'னு’மிரட்டினாள். அடுத்தநாள் ஒரு செல்போன் நம்பரில் இருந்து "உனக்கு 25 ஆயிரம் முக்கியமா அல்லது கை, கால் முக்கியமா?'னு ஒரு ஆண் குரல் மிரட்டியது. நடிகர் திலீப்பின் பெயரை சொல்லியும் மிரட்றாங்க. இதனால் பயந்து போய்... போலீஸில் புகார் செஞ்சிருக்கேன்'' என்றார்.
அடுத்த நபர் சொல்ல ஆரம்பித்தார்...
""நான் திருச்சிக்காரன். இதே ஆன்லைனில் தான் நாலு மாசத்துக்கு முன்னாடி கொச்சியை சேர்ந்த பீனாவை புக் செய்தேன். ’"பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா... வீட்லயே வச்சுக்கலாம்'னு சொன்னேன். அதுக்கு அவள் ’"வீடு வசதியா இருக்காது'னு சொல்லி கொச்சியில் ஒரு ஸ்டார் ஹோட்டல்ல அவளே அறையை புக் செய்தாள். அங்கு அவளுடன் பகல் முழுவதும் இருந்திட்டு அவளுக்கு ரேட் 20 ஆயிரம், ரூமுக்கு 7ஆயிரம்... சாப்பாடு உட்பட இதர செலவுக்கும் சேர்த்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். நாலைஞ்சு நாள் கழிச்சு... அவள் எனக்கு போன் செய்து "25 ஆயிரம் ரூபாய் வேணும்'னு கேட்டாள். நான் "இல்லை'னு சொன்னேன். உடனே "ஒரு வீடியோ அனுப்புறேன்'னு சொல்லி அனுப்பினாள். அந்த வீடியோவில் நானும் அவளும் என்ஜாய் பண்ணியது படமா ஓடிச்சு. அன்னைக்கு ரூமில் கண்ணுக்கு தெரியாம காமிராவை மறைச்சி வச்சி புடிச்சிட்டா?
அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான நான் அவளிடம் கெஞ்சினேன். அதுக்கு அவள் ’"இதுதான் எனக்கு ஆயுதம். எனக்குப் பணம் தேவைப்படும்போது நீ தரணும் இல்லன்னா; இந்த வீடியோ எங்கெல்லாம் பரவும்னு உனக்கு நல்லா தெரியுமே'னு மிரட்டினா. இப்படி அடிக்கடி என்னை மிரட்டி மிரட்டி என்கிட்ட இருந்து 3 லட்ச ரூபாயை கறந்திட்டா. அவள் போன்செய்த அரைமணி நேரத்தில் ல்ஹஹ் ற்ம் மூலம் பணம் அனுப்பிடுவேன். ‘செல்போன் நம்பரை மாத்தி னாலும் அல்லது சுவிட்ச் ஆப் பண்ணி வச்சாலும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் ஓடும்னு மிரட்டி வச்சிருக்கா. இதனால் நிம்மதியையும் இழந்து, பணத்தையும் இழக்க வேண்டியதாச்சு. ’இனியும் விஷயத்தை மறைச்சா... இன்னும் இழக்க வேண்டியிருக்கும்னு என் மனைவியிடம் உண்மையை சொல்லி தலையில் அடிச்சிக்கிட்டு... ’"நான் செத்து போயிடுவேன்'னு கதறினேன். என் நிலைமையை புரிஞ்சுக்கிட்ட மனைவி ஆறுதல் தந்தாள். 17 வயசில் பெண் குழந்தை வேற எனக்கு இருக்கு. இதுனால குழந்தையின் எதிர்காலம் பாதிக்கக்கூடாதே. இதுக்கு முடிவு கட்டணும்னுதான் என் மனைவி சொன்னபடி போலீசில் புகார் கொடுக்க முடிவு செஞ்சேன். புகார் கொடுக்கிறதைப் பத்தி விவரம் கேட்கத்தான்... இவருகிட்ட... (பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக் காரர்) பேசும் போதுதான் இவரும் இதே சிக்கலில் இருப்பது தெரிய வந்தது. இதுனால இருவரும் கோட்டயம் எஸ்.பி.யை சந்தித்து புகார் கொடுத்தோம்'' என்றார் திருச்சிக்காரர்.
இது குறித்து கோட்டயம் எஸ்.பி. ஷாபு விடம் கேட்டபோது... ""இந்த மாதிரி ஆன்லைன் இணையதளங்களை ஏற்கனவே கேரளா முழுவதும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த லொகான்டோ சைட்டில் இடம் பிடித்திருப்பவர்கள் எல்லாமே கேரளப் பெண்கள்தான். இவர் களிடம் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இப்போது இரண்டு பேர் தந்த புகார், சைபர் க்ரைமிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் நீதுவின் செல்நம்பரை வைத்து பார்த்த போது எர்ணாகுளம் "வழித்தேறி விள' என்ற பகுதியை சேர்ந்தவராகத் தெரிகிறது. அவளுடைய மூன்று எண்களும் சுவிட்ச் ஆஃப்பில் இருக்கிறது. இந்த பெண்களுக்கு ஆண்களின் வயசு முக்கியமல்ல பணம்தான் குறிக்கோள். இதுசம்பந்தமாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளோம்''“என்றார் எஸ்.பி.
"சட்டத்திற்கு புறம்பான சல்லாபம்... அந்த நேரத்திற்கு வேண்டுமானால் அற்ப லாபமாக இருக்கலாம். ஆனால் அது எப்போதுமே நஷ்டம் மட்டுமே தரும்...' என்கிற மெஸேஜ் சொல்லி... இந்த கட்டுரையை எழுதிமுடித்த வேளையில்...
"நடிகை காஜலை சந்திக்கலாம் என்கிற சபல வலையில் வீழ்ந்து 60 லட்ச ரூபாயை இழந்தார் ராமநாதபுரம் தொழிலதிபர் மகன்'‘ என தகவல் வந்தது.
என்னத்த சொல்ல...?
-மணிகண்டன்