நெல்லை!
"மேயராக இருந்த சரவணன் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-பிரிவு 34ன்படி பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது'' என கடந்த எட்டாம் தேதி நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அந்த நாளிலிருந்தே 'நான் தான் அடுத்த மேயராக்கும்' என 11 கவுன்சிலர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல் லாபிகளை நாடி வருவதுதான் நெல்லையின் புதிய கோலம்.
மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.விற்கென 44 கவுன்சிலர்கள், தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் 7 மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 என அங்கம் வகிக்கின்றனர். சரவணன் மேயரான நாள் முதல் ராஜினாமா நாள்வரை தொடர்ந்து கவுன்சிலர்களுக் கும், மேயர் சரவணனுக்குமிடையே ஒத்துழை யாமையால் கடந்த 5ம் தேதி மேயர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
"முன்னாள் மா.செ.வும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வும் ஆன அப்துல்வகாப்பின் ஆதர வினால் மேயராக சரவணனும், துணை மேயராக கே.ஆர்.ராஜூவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேயர் இருக்கையின் அதிகாரத்தால், ' இதிலெல்லாம் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?'' என்ற ஆச்சர்ய கேள்வியுடன் கிடைத்ததை யெல்லாம் சுருட்டத் தொடங்கினார். பணம் இருந்தால்தான் வேலை. பினாயிலுக்குக் கூட கமிஷன் கேட்டார். கட்டிடம் கட்ட கமிஷன் கேட்டார். இதையெல்லாம் நக்கீரன்தானே அம்பலப்படுத்தியது. எங்கள் வார்டில் வேலை பார்க்க வேண்டுமென கவுன்சிலர்கள் கூறினாலும், "பணத்தைக் கொடுப்பா... வேலை நடக்கும்' என கவுன்சிலர்களிடமே கமிஷன் கேட்டது இவராகத்தான் இருக்க முடியும்.
மா.செ. அப்துல்வகாப் கண்டிக்க, "மேயரின் அதிகாரத்தில் தலையிடுகின்றார் மா.செ.'' என மேயர் பிட்டைப் போட... மா.செ. பதவி பறிக்கப் பட்டது. முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் மா.பொறுப்பாளர் ஆனார். மேயரின் ஆட்டம் அதிகமானது. அதன்பின் கவுன்சிலர் களிடம் மோதல் அதிகரிக்கவே, கவுன்சிலர்கள் படையெடுத்து தலைமைக்கு சென்று புகார் மனு அளித்தனர். அமைச்சர் நேருவும் கண்டித்துப் பார்த்தார், அடங்கவில்லை. வேறு வழியில் லாமல் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்'' என்கிறார் பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சோனைமுத்து.
துணைமேயர் ராஜு, கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், வில்சன் மணித்துரை, சுப்பிரமணியன், கந்தன், பொன்.மாணிக்கம், கோகுலவாணி மற்றும் மண்டல தலைவர் பிரான்சிஸ் உள்ளிட்ட 11 நபர்கள் மேயர் கனவில் இருக்க, "என்னை மேயராக தேர்ந்தெடுத்தால் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் நான் தருகின்றேன்'' என துணைமேயர் தரப்பிலிருந்து தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளது. நெல்லை மேயர் பதவி 1996ம் ஆண்டிலிருந்து பட்டியலின பெண் களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலையில் 1996 முதல் 2001 வரை தி.மு.க.வின் உமா மகேஸ்வரியும், 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.வின் ஜெயராணியும் மேயராக பதவி வகித்தனர். பின்னாளில் பொதுப்பிரிவுக்கென பதவி மாற்றப்பட்டது. இதனால் மாநகராட்சியில் பெரும்பான்மை சமூகத்தில் ஒன்றான பிள்ளைமார் சமூகத்திற்கென மேயர் பதவி தி.மு.க.வில் ஒதுக்கப்பட்டது.
ஆகையால் 2006ம் ஆண்டில் தி.மு.க.வின் ஏ.எல். சுப்பிரமணியன் மேயரானார். அதன்பின் வந்த அ.தி.மு.க. மேயர்கள் விஜிலா சத்யானந்த் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் பிள்ளைமார் சமூகத் தினை சார்ந்தவர்களே! 2016ம் ஆண்டிலிருந்து மாநகராட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில் 2022ம் ஆண்டு தேர்தல் நடந்த நிலையில் தி.மு.க.வின் சரவணன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் பிள்ளைமார் சமூகத்தினை சார்ந் தவர் என்கின்றது சாதிய அடிப் படையிலான புள்ளிவிபரம். இதனைக் கொண்டு பிள்ளைமார் சமூகத்தினை சார்ந்தவர்தான் புதிய மேயராக வருவார் என ஒரு தரப்பும், இல்லையில்லை, இந்தமுறை தி.மு.க. இளைஞரணிக்கே மேயர் வாய்ப்பு என மற்றொரு தரப்பும் மேயருக்கான போட்டியில் இருக்க, பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் தி.மு.க.வின் நிரந்தர வாக்கு வங்கியாக கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படும் என அவர்களும் போட்டியிலிருப்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் கூற விரும்பாத தி.மு.க.வின் மூத்த நிர்வாகியோ, "நெல்லையைப் பொறுத்தவரை மா.செ. மாற்றப்பட்டு, மாவட்ட பொறுப்பாளர் வந்ததிலிருந்தே எம்.எல்.ஏ. அப்துல்வகாப் ஒரு டீம், மா.பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா ஒரு கோஷ்டி. இதில் மேயராக இருந்த சரவணன் மா.பொறுப் பாளர் பக்கம். கவுன்சிலர்கள் அனைவரும் அப்துல்வகாப் பக்கம். இங்குதான் பிரச்சினை ஆரம்பமானது. நாம் மேயர், அவர்கள் கவுன்சிலர் கள் என்ற ஈகோ ஆரம்பிக்க மேயர் பதவி காலி யானது. பிள்ளைமார் சமூகத்திற்கென மேயர் பதவி என்றால் கிட்டு என்கின்ற ராமகிருஷ்ணன், உலகநாதன் ஆகியோர் வரலாம். தி.மு.க. இளைஞரணி என்றால் கருப்பசாமி கோட்டையப்பன், வில்சன் மணித்துரை ஆகிய கவுன்சிலர்கள் உள்ளனர்.
ஆனால் இது சாத்திய மில்லை. அப்துல்வகாப்பின் சாய்ஸ் கிட்டு என்கின்ற ராமகிருஷ்ணன். டி.பி.எம்.மைதீன்கானின் சாய்ஸ் உலகநாதன். எங்களைப் பொறுத்த வரை கோஷ்டி அரசியலை துறந்து ஒருங்கிணைந்து இருவரும் செயல் பட்டால் மட்டுமே மேயர் பதவியில் கூச்சல், குழப்பம் இருக்காது. இல்லையெனில் மீண்டும் இங்கு ஒரு ராஜினாமாவை எதிர்பார்க்க லாம்'' என்கிறார் அவர்.
டி.பி.எம்.மைதீன்கானின் ஆதரவாளர் ஒருவரோ, "ஐம்பது கவுன்சிலரும் அப்துல்வகாப் பேச்சைக் கேட்பாங்க என்பது எங்களுக்கு மட்டுமல்ல... பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி, தலைமை வரை தெரியும். இருப்பினும் எங்களது கடமையை நாங்கள் செய்கின்றோம்'' என்கின்றனர்.
இது இப்படியிருக்க, "பொறுப்பு மேயராக இருக்கும் கே.ஆர்.ராஜூவை மேயராக்கி யும், பிள்ளைமார் சமூகத்தினை சார்ந்த கிட்டு என்கின்ற ராமகிருஷ்ணனை துணைமேயராக்கியும் அழகு பார்க்க நினைக் கின்றது எம்.எல்.ஏ. அப்துல்வகாப்பின் தரப்பு. எனினும், வரும் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டுதான் மேயர் தேர்வு இருக்கும். இதில் தலைமையின் முடிவு அழுத்தமாக இருக்கும்' என்கின்றது உளவுத்துறை குறிப்பு.
கோவை!
கோவை மாநக ராட்சி மேயர் தேர்தல் வரும் ஆறாம் தேதி என்று அறிவித்துள்ள நிலையில் பெண் கவுன்சிலர்கள் மத்தியில் மாபெரும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகர மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், தனது மனைவி இலக்குமி இளஞ்செல்வியை எப்படியாவது மேயராக்கி விட வேண்டும் என்ற கனவில் இருந்தார். ஆனால், செந்தில் பாலாஜியின் ஆதரவில் கல்பனா ஆனந்தகுமார் அவரது கனவில் மண்ணைப் போட்டுவிட்டு மேயர் ஆனார். இருப்பினும் கல்பனாவின் ராஜினாமாவிற்கு பிறகு கார்த்திக்கிற்கு மீண்டும் அந்த ஆசை துளிர் விட ஆரம்பித்தது. இதற்காக காய்களை நகர்த்த, "அது எப்படி மேயரும், துணைமேயரும் ஒரே சமூகமாக இருக்க முடியும்?' என்ற கேள்வி எழுந்த நிலையில்... "எனக்கு மா.செ. பதவி கூட வேண்டாம்... மனைவியை மேயராக்குங்கள்' என மன்றாடினார். "அது நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி?' என்கிறார் உக்கடம் பகுதியை சேர்ந்த அன்பழகன்.
வழக்கம்போல் கவுண்டர் சமுதாயத்திற் குத்தான் மேயர் பதவி என்றால், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, இளைஞரணி மாவட்ட செயலாளர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இதில் மீனா லோகு 30 வருட சீனியர்.
இது இப்படியிருக்க, கல்விக்குழு தலைவர் மாலதியோ, "கனிமொழி எம்.பி. எனக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே எனக்குத்தான் மேயர் வாய்ப்பு' என மேயர் ரேசில் கலந்துகொண்ட நிலையில்... அவருடன் "சாய்பாபா காலனி தி.மு.க. பகுதி கழக செயலாளராக இருந்து வரும் ரவியின் மனைவி பேபிசுதா ரேஸில் இருக்கிறார்' என்கின்றது மாநகர தி.மு.க. இதேவேளையில், மேற்கு மண்டல தலைவராக இருந்து வரும் தெய்வானைக்கு தான் அடுத்த மேயர் பதவி என மேற்கு மண்டல உடன்பிறப்புகள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்நிலையில் கோவை மேயர் பதவியை சமூகநீதி அடிப்படையில் கவுண்டர், நாயுடு தவிர்த்து இதர சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கினால் எளிமையாக அணுக முடியும் என நம்புகின்றனர். அப்படி மேயர் பதவி வழங்கும் பட்சத்தில் தி.மு.க.வின் செல்வாக்கு கோவை மாவட்டத்தில் கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர் கள் கூறி வருவதும் தவிர்க்க முடியாத ஒன்று.
கோவையைப் பொறுத்தவரை மேயர் மட்டும் மாற்றம் இல்லை. கோவை மாநகராட்சி மேயர் மட்டும் ராஜினாமா செய்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளி யான அரசாணையில், வரு கின்ற 6-ஆம் தேதி மேயர், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தல் நடைபெறும் என்ற அறி விப்பு வெளியாகி அனை வரையும் பீதியடைய வைத்தது.
அதுபோல், கோவை மாநகராட்சியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை தி.மு.க. இழந்துள்ளதால், ஒருவேளை மாநகராட்சி மன்ற அனைத்து பொறுப் பாளர்களும் கூண்டோடு களையப்பட வாய்ப்புள்ள தாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.
நெல்லை, கோவை மாநகராட்சிகளின் அடுத்த மேயராக யார் வெல்லப் போகிறார் என்கிற பரபரப்பு நிலவிவருகிறது.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்
_________
சிறுபான்மை நல ஆணையத்தில் அ.தி.மு.க. விசுவாசி...
கோவை மாவட்டம் என்றாலே தி.மு.க. பூஜ்ஜியம் என எதிர்க்கட்சிகள் கிண்டலாக பேசிவரும் நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரிந்துரையில் மாநில சிறுபான்மை நல ஆணைய உறுப்பினராக முகமது ரபிக் நியமனம் செய்யப்பட்டுள்ளது, கோவை மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"1996 குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை மாவட்டத்தில் தி.மு.க. சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் வாக்குகளை நம்பியே இருந்துவருகிறது. இதற்கு உதாரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட தி.மு.க. வெற்றி பெறவில்லை அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் கோவை பாராளுமன்ற தொகுதியில் பெற்றுள்ளதைப் பார்த்தால், சிறுபான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெறச் செய்தது.
இந்நிலையில் கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட முகமது ரபிக்கை, சிறுபான்மை நல பிரிவு அமைச்சர் மஸ்தான் பரிந்துரையின் பெயரில் மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது, கழகத்திற்காவே தனது வாழ்வை அர்ப்பணித்து வந்த இஸ்லாமிய சிறுபான்மை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்கிறார் உக்கடம் பகுதியை சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர்.
ஒரு மாவட்டத்திலிருந்து ஒரு நிர்வாகியை அரசுப்பதவியாகவோ அல்லது தேர்தல் வேட்பாளராகவோ அறிவிக்கும்போது தலைவர் கலைஞர் இருந்த காலத்தில், அந்தந்த மாவட்ட செயலாளரிடம் கருத்து கேட்டு அதன்பின்தான் நியமனம் செய்வார் அல்லது வேட்பாளராக அறிவிப்பார். தற்போது தி.மு.க. தலைமை அ.தி.மு.க. விசுவாசியான முகமது ரபிக்கை மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆணையத்தின் உறுப்பினராக அறிவித்துள்ளதில் எந்த மாவட்டச் செயலாளர்களிடமும் கருத்து கேட்கவில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் நியமனம் குறித்து விரிவான விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பாரா?! என்று எதிர்பார்க்கின்றனர் கோவை மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு பொறுப்பாளர்கள்.
-ஆதித்யா