எச். மோகன், மன்னார்குடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிப்பாரா கமலா ஹாரிஸ்?
நம்ம ஊர் தேர்தல் முடிவுகளை கணிப்பதே கஷ்டம். நீங்கள் அமெரிக்க தேர்தல் பற்றிக் கேட்கிறீர்கள். கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக, பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் ட்வீட் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் விழுந்திருக்கின்றன. ஸ்விப்ட்டுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உண்டு. கமலா ஹாரிஸும் பிரச்சாரத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தவிரவும், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் இதுவரை பெண் அதிபர்கள் அமர்ந்த வரலாறே கிடையாது. எல்லாம் சேர்ந்து ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை அமெரிக்க அதிபர் நாற் காலியில் அமர்த்தும் என எதிர்பார்ப்போம்!
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
இதுவரை நமக் காக உழைத்தோம்... இனி நாட்டுக்காக உழைப்போம் என் கிறாரே த.வெ.க. தலைவர் விஜய்?
படத்தில் பஞ்ச் டயலாக்குகள் பேசுவ தில்லையா, அதுபோல் கட்சிக்காக பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். படத்தில் கைதட்டல், விசில் வந்தால் போதும். இங்கே இது ஓட்டாக மாறவேண்டும். நடக்குமா?
வண்ணை கணேசன், கொளத்தூர்
புல்டோசரைக் கையாள அனைவருக்கும் துணிவிருக்காது என்று அகிலேஷுக்கு யோகி பதிலடி தந்திருக்கிறாரே?
"அரிவாளைக் கையாள எல்லோருக்கும் துணிவிருக்காது' என ஒரு ரவுடி பேசினால் ரசிப்போமா... இதுவரை உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் சரியான காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பேதைப் படுக்கும் இழவூழ்- என்பது வள்ளுவர் வாக்கு. இழக்கும் காலம் வரும்போது, அது ஒருவனை பேதையாக மாற்றும் என்பது பொருள். அழிவுச் செயல்பாடுகளுக்கு துணிவில்லாமலிருப்பதே சிறப்பு!
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
நகைக்கடை விளம்பரங்கள் குழப்போ குழப்பு என்று குழப்புகின்றனவே?
நகை விற்கும் விலையில், அதை வாங்கும் எண்ணமே பலருக்கும் தோன்றுவதில்லை. அதையும் மீறி நகைக் கடை விளம்பரங்கள் குழப்புகிறதென்றால் கையில் தங்கம் வாங்கு மளவுக்கு கொஞ்சம் பணமிருக்கிறதென்று பொருள்! விளம்பரங் களைப் புறந்தள்ளி விட்டு, தரத்துக்கு ஹால்மார்க் முத்திரை யையும், ஆதாயத்துக்கு சேதாரச் செலவு குறைவா என்பதையும் மட்டும் பாருங்கள்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
திரை அரங் கங்கள் கல்விக் கூடமாக மாற வேண்டுமே, தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மக்களும், அரசும் கவனமாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாரே அமீர்...?
அரசு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மூன்று தரப்புமே உஷாராயிருந்தால் கல்விக்கூடங்கள் திரையரங்குகளாக மாறாது. அதற்கு, மகாவிஷ்ணு போன்ற நபர்கள் கல்விக்கூடங்கள் பக்கம் தலைவைக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என பா.ஜ.க கூறியிருப்பது குறித்து?
நீதிபதிகள் வெளியில் வந்து உச்சநீதிமன்ற நடைமுறையில் சில விவகாரங்கள் சரியில்லையென பத்திரிகையாளர்களை சந்தித்தது எந்த ஆட்சியில் நடந்தது?, உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு இந்தியப் பிரதமர் வருகைதந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வேடிக்கை யார் ஆட்சியில் நடக்கிறது? ஆண்டுக்கணக்கில் மணிப்பூர் பற்றியெரிவது யார் ஆட்சியில் நடக்கிறது? ஆனால் ராகுல் ஜனநாயகத்துக்கு ஒரு கரும்புள்ளி! நன்றாக இருக்கிறது பா.ஜ.க.வின் தர்க்கம்!
தே, மாதவராஜ், கோயமுத்தூர்
இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியில் ஆன்லைன் திருட்டுக்களை கட்டுப்படுத்த முடியவில்லையே?
விஞ்ஞானம் பொதுவானது. அது திருட்டுக் கும் பயன்படும்! திருட்டைக் கண்டுபிடிக்கவும் பயன்படும்! சமீபத்தில் ஆன்லைன் மோசடி யாளர்கள் புதிதாக ஒரு யுக்தியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு நம்பருக்குப் வாட்ஸ் அப் காலில் வந்து, அவர்கள் வீட்டிலுள்ள கல்லூரி அல்லது மேல்வகுப்பு படிக்கும் மாணவன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்டிருப்பதாகவும், தாங்கள் சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் எனவும் சொல்கிறார்கள். "என் பையன் அப்படியில்லையே'… என்றால், "உங்கள் பையன் என் பக்கத்தில்தான் அழுதுகொண்டுதான் அமர்ந்திருக்கிறான். சீக்கிரம் சொல்லுங்கள் பணம் தருகிறீர்களா… இல்லை வழக்குப் பதியட்டுமா' என சம்பந்தப்பட்டவரை பேசவேவிடாமல் தொடர்ந்து மிரட்டல்! சில லட்சங்கள் கொடுத்தால் பையனை விட்டுவிடு வோம் என்று நெருக்கடி தருகிறார்கள். இதில் சிலர் பணம் கொடுத்து ஏமாறவும் செய்திருக்கிறார்கள்!. இத்தகைய அழைப்புகள் 92 எனத் தொடங்கும் எண்ணிலிருந்து வருவதை காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, இந்த ஆன்லைன் மோசடி பாகிஸ்தானிலிருந்து நடக்கிறது. ஆன்லைன் மோசடியோ, ஆப்லைன் மோசடியோ உஷாராக இருப்பவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்!