mavali

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

அ.தி.மு.க. ஆட்சியிலேயே தி.மு.க.வினர் அடுப்பு பற்றவைத்து சாராயம் காய்ச்சியதை நான் பார்த்துள்ளேன் என்கிறாரே முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?

Advertisment

பார்த்து என்ன பண்ணினார்?… நடவடிக்கை எடுத்தாரா… இல்லையா…? இல்லை தங்கள் ஆட்சி வரும்போது அ.தி.மு.க.வினரையும் காய்ச்ச அனுமதிக்கவேண்டுமென டீல் போட்டு வந்தாராமா? ஒன்று நிச்சயம், எந்த ஆட்சி நடந்தாலும் நிற்காமல் எரிந்திருக்கின்றன சாராயம் காய்ச்சும் அடுப்புகள்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை

Advertisment

மக்களவை சபாநாயகர் பதவி தனது கட்சிக்கு வேண்டாம், மாநில நலனே முக்கியமானது என்று கூறுகிறாரே சந்திரபாபு நாயுடு?

அப்படியென்றால் சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்து, வேறு எதையோ பெற்றிருக்கிறார் நாயுடு. அது சிறப்பு அந்தஸ்தா,…மாநிலத்துக்கு கூடுதல் நிதியா, அல்லது வேறெதாவதா என சீக்கிரம் வெளிச்சத்துக்கு வரும். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடத்தில் தமன்னா வாழ்க்கை பற்றி இடம் பெற்றிருப்பது குறித்து?

பாடத்திட்டம் வகுக்கும் குழுவில் ஏதோ ஒரு கலா ரசிகர்… இல்லையில்லை தமன்னா ரசிகர் இருந்திருக்கிறார். இல்லாவிட்டால், இப்படி சில கலர்புல்லான பாடங்கள் இருந்தால்தான் மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள் என ஏதோ ஒரு அறிவுஜீவி சிந்தித்திருக்கிறார்போல!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதால் யாருக்கு என்ன பயன்?

முதலில் மாநிலவாரியாக எந்தெந்த சமூகத்தினர் என்ன நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரியவரும். இட ஒதுக்கீட்டின் பலன்கள் பழங்குடிகள், பட்டியலினத்தினர், பிற்பட்ட வகுப்பினருக்கு பலனளித்ததா, அவர்கள் சமூக -பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கிறார்களா, இல்லை சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் அரசு வேலை உள்ளிட்ட பெரிய வேலைகளில் எல்லாம் முற்பட்ட வகுப்பினரேதான் கோலோச்சுகின்றனரா எனத் தெரியவரும். பிற்பட்ட சமூகங்களிலேயே சில சமூகங்கள் முன்னேறி, சில சமூகங்கள் பின்தங்கியிருந்தால் அவர்களை கைதூக்கிவிட அரசு திட்டமிடலாம். நோய் தெரிந்தால்தான் மருத்துவர் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும். சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மருத்துவர் நாடி பிடித்துப் பார்ப்பது, அல்லது ஸ்டெதஸ்கோப் வைத்து நோயாளியின் உடல்நிலையை அறிய முயற்சிப்பது. அதற்கே ஒன்றிய அரசு ஏன் தயங்கவேண்டும். கொரோனா வந்த 2021-லேயே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்திருக்கவேண்டும். பா.ஜ.க. அரசோ, அதைத் தள்ளிப்போடுவதிலே கவனம் செலுத்திவருகிறது.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும், ராகுல் 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர்' என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது குறித்து... ?

ஜெய்ராம் ரமேஷ், ஊடகங்களை விமர்சனம் செய்கிறேன் என பதிவு செய்யப்போக, சம்பந்தபட்ட அரசு ஊடகத்தில் அந்தச் செய்தியை ஒளிபரப்பியவரை அழைத்து, "ராகுலை ஒன்று இரண்டு முறை காட்டினால் போதாதா... எதற்கு 6 முறை காட்டினீர்கள்' என மெமோ கொடுத்துவிடப்போகிறது.

ஜெ. மணிகண்டன், பேர்ணாம்பட்டு

அக்பருக்கு -பீர்பால், கிருஷ்ணதேவராயருக்கு -தெனாலிராமன் என்றால் எனக்கு மனசாட்சி என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

அவர்களெல்லாம் அரசர்கள். கமல்ஹாசன் வெகுகாலம் காதல் இளவரசராக இருந்தார். காதல் மன்னன் பட்டத்தை ஜெமினி தள்ளிக்கொண்டு போய்விட்டார். காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அஜித் கைப்பற்றிவிட்டார். இரு அரசர்களுக்கும் பீர்பாலும், தெனாலிராமனும் அமைச்சராக இருந்ததோடு, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். கமல்ஹாசனின் மனசாட்சி, இப்போது சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறதா… இல்லை சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கிறதா என்பதுவும் தெளிவாக இல்லையே!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

மத்திய அரசு அலுவலகங்களில் 10 நிமிடம் லேட்டாக பணிக்கு வந்தால், அரைநாள் ஊதியம் கட்டாமே?

இருக்கட்டும். நாடாளுமன்றத்திலும் வருகைப் பதிவேடு வைத்து, தாமதமாக வருபவர்கள், கட் அடிப்பவர்களுக்கு அவர்கள் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யலாம் என்று சொன்னால் நமது எம்.பி.க்கள் ஒப்புக்கொள்வார்களா?