பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்-தேனி

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும்' என்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள், "ஸ்டாலின் பிரதமராக வேண்டும்' என்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

இரண்டு தரப்பினரும் மோடியே மீண்டும் பிரதமர் என்று சொல்லாதவரை முரண்பாடு ஏதுமில்லை.

Advertisment

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது' எனவும் தெரிவித்துள்ளாரே கவர்னர் ஆர்.என்.ரவி?

தத்துவ விளக்கம் என்ற பெயரில் தனது பதவியின் மாண்புக்கு மாறாகப் பல மேடைகளில் பேசி வந்த ஆளுநர் ரவி, சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார் என்று பாசிட்டிவாக நம்பலாம். வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் என பீகார் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வதந்தியைப் பதிவிட்டதன் விளைவுதான், தேவையற்ற பதற்றம் உருவானது. ஆனால், வந்தாரை வாழவைக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை கவர்னர் நிச்சயம் உணர்ந்திருப்பார். ஏனென்றால், அவரும் பீகார்காரர். எத்தனை வம்படியாகப் பேசினாலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளும்போது, வடிவேலு பட காமெடி போல, “தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப நல்லவர்கள்” என்ற ரீதியில் கவர்னர் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு அப்படிப்பட்டது.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக சிவராஜ்சிங் சவுகான் கூறியிருக்கிறாரே

மோடியைப் பேசினால் இந்தியாவைக் களங்கப் படுத்துவதாகக் கூறுவது, பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை விமர்சித்தால் இந்து மதத்தினரைப் புண்படுத்துவதாக வதந்தி பரப்புவது, இவைதான் பா.ஜ.க.வின் சாதாரண நிர்வாகி முதல் அமைச்சர்கள், முதலமைச்சர்களின் பணியாகவும் பாணியாகவும் இருக்கிறது. லண்டனில் ஊடகத்தினருடன் நடத்திய உரையாடலில் இந்தியாவின் நிலைமை பற்றி ராகுல் பேசியதுடன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நாடு வளர்ச்சியடையவில்லை என மோடியும் அவரது கட்சியினரும் தொடர்ந்து சொல்லி வருவதுதான் இந்தியாவை களங்கப்படுத்தும் பேச்சு என்று பதிலடியும் கொடுத்துள்ளார். ராகுலுக்குப் பதில் சொல்லும் வகையில் பிரதமர் மோடியும் ஊடகத்தினரை சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும். 8 ஆண்டுகளாக அது வெறும் கனவாகத்தானே இருக்கிறது!

தே.மாதவன், கோயமுத்தூர்-45

மோடி எங்கே, எதை பேசினாலும் தமிழகத்தின் கல்லணை வரை பேசுவது பற்றி?

mm

mm

குஜராத்தில் மிகப்பெரிய சிலை வைக்க வேண்டுமென்றால், பா.ஜ.க. தரப்பில் சிலை வைக்கத் தலைவர்கள் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பட்டேல் சிலையைத்தான் வைத்தாக வேண்டும். இந்தியாவின் தொன்மைமிகு பெருமையைப் பேசவேண்டுமென்றால் பிரதமர் மோடிக்கு வேறு மாநிலங்களைவிட தமிழ்நாடுதான் கைகொடுக்கும். என்னதான் சமஸ்கிருதப் பெருமை யையும், இந்தியைக் கட்டாயப் படுத்துவதையும் ஆட்சியின் நோக்க மாகக் கொண்டிருந்தாலும், மூத்த மொழி என்று வரும்போது, தமிழ் என்று உச்சரித்துத்தானே ஆக வேண்டியுள்ளது. அதுபோலத்தான் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணையைக் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது. பொங்கிப் பெருகும் காவிரியில் சோழ மன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை, தொழில்நுட்பத்தின் முன்னோடி. அதன் பெருமையையும் அருமையையும் உணர்ந்து ஆங்கிலே யப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அதனை நவீனப் படுத்தினார். முக்கொம்பு பகுதியில் மேலணையையும், அணைக்கரையில் கீழணையையும் கட்டினார். நீர் மேலாண்மையில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு மன்னர்கள். உள்ளங்கை ரேகை போல பல நூறாகப் பிரிந்து செல்லும் காவிரியின் கிளை ஆறுகளையும், வாய்க்கால்களையும் மிகச் சரியாகப் பராமரித்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சிய மாக்கினர். இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த வரலாற்றுப் பெருமைகளுக்கு மோடி பழந்தமிழ் நாட்டிடமும், நவீனத் தமிழ்நாட்டிடமும்தான் கடன் வாங்க வேண்டும்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் இ.பி.எஸ். தான் என்கிறாரே ஓ.பி.எஸ்.?

எம்.ஜி.ஆர். ஆட்சியில் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. கலைஞர் ஆட்சியில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ஜெயலலிதா ஆட்சி வந்தபிறகுதான், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்கிற ஃபார்முலா உருவாக்கப்பட்டது. அதற்கான கவனிப்பு களைத் திட்டமிட்டுச் செய்தது ஜெயலலிதா தலைமையி லான ஆளுங்கட்சி. அதேயே பின்னர் தி.மு.க.வும் ஆளுங் கட்சியாக வந்தபோது பின்பற்றியது. ஜெயலலிதாவின் பதவியை நீதிமன்றம் இருமுறை பறித்தபோதும் முதலமைச்சர் பொறுப்பேற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஆண்டிப்பட்டி, ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் ஜெயலலிதா நின்றபோது என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும். அதுவேதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்திருக்கும் என்பது அவர் அறியாதது அல்ல.

எஸ். இராமதாஸ், வாணரப்பேட்டை -புதுச்சேரி

"2026-ல் தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் வகுப்போம்' என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பற்றி...

தேர்தல் அறிவிக்கப்படும்வரை பா.ம.க மட்டுமல்ல, பல கட்சிகளும் தங்கள் தலைமையில்தான் கூட்டணி, ஆட்சி என்று சொல்வது அரசியலில் சகஜம்.