பி.மணி, குப்பம் -ஆந்திரா

ஒருவன் தெய்வத்தை கும்பிடுவதாலும் அல்லது அதே தெய்வத்தை கும்பிடாமல் மறுத்தாலும், தெய்வத்திடமிருந்து அவனுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள் என்னென்ன?

இதற்கான விடை தெய்வத்திற்காவது தெரியுமா என்பதை தெய்வத்திடம்தான் கேட்க வேண்டும்.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனை டாக்டரின் தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததற்கு இழப்பீட்டுத் தொகையும், வீடும் நிவாரணமாகிவிடுமா? அரசு மருத்துவமனையை நம்பி வரும் வசதிவாய்ப்பற்றவர்களின் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா?

mm

பிரியாவின் உயிரிழப்புக்கு இந்த நிவாரணம் எதுவும் ஈடாகாது என்பதை அவரது வீட்டிற்கே நேரில் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்து, வேலைவாய்ப்பு, வீடு ஆகியவற்றை வழங்கிய முதலமைச்சரே சொல்லியிருக்கிறார். இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளில் முன்னிலையில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முக்கியமான இடம் உண்டு. தனியார் மருத்துவமனைகள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே இருந்தாலும் அரசு மருத்துவமனைகளிலும் அதற்கு ஈடான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதியும் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. கால்பந்து வீராங்கனையின் மரணம், மருத்துவக் கட்டமைப்புக் குறைபாட்டினால் ஏற்பட்ட தல்ல. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் அலட்சியப் போக்கே காரணமாகும். உரிய நேரத்தில் கட்டுகளைப் பிரிக்காத தால், ஏற்பட்ட ரத்தக்கட்டே பிரியாவின் காலை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி, மரணத்தை நோக்கித் தள்ளியுள்ளது. தங்களை நாடி வருகிற ஒவ்வொரு நோயாளியின் உயிரையும் தன்னுயிர் போலக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவரின் இந்தத் தவறு, எந்த வகையிலும் ஏற்க முடியாதது. அதற்குரிய சட்டப்பூர்வமான -நிர்வாக ரீதியான நடவடிக்கை களை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதே நேரத்தில், அரசு மருத்துவ மனைகளில் முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடுகள், டாக்டர் -நர்ஸ் காலிப் பணியிடங்கள் போன்றவை இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சி யிலும் தொடர்கின்றன. மருத்துவத்துறைக்கு செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சையை முதலமைச் சரும், அமைச்சரும் தயவு தாட்சண்ய மின்றி மேற்கொண் டால் மட்டுமே, பிரியா போன்ற எளிய குடும் பத்தைச் சேர்ந்த இளந் திறமையாளர்களை இழக்காத நிலை ஏற்படும். அரசு மருத்துவமனை யால் கால் இழந்து, அதனால் கனவுகளை இழந்து, உயிரையும் பறிகொடுத்த பிரியாவின் முகம், அரசு மருத்துவமனைகளைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

மாநிலத்துக்கு. வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிடில் இனி ஜி.எஸ்.டி. கட்டமாட்டோம் என மம்தா கூறி இருக்கிறாரே?

மத்திய-மாநில அரசுகளுக்கிடையி லான உறவுகள் எந்தளவில் இருக்கின்றன என்பதற்கு மம்தாவின் கோபம் ஒரு சாம்பிள். குறிப்பாக, எதிர்க்கட்சி ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கான நிதி யினை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவது நெடுங்காலமாக இருந்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி வந்தபிறகு, ஏற்கனவே இருந்து வந்த மாநிலங்களின் சொற்ப அதிகாரங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.டி. கட்டமாட்டோம் என்பது எதிர்ப்பின் அடையாளம். ஆனால் சட்டமும் அது வழங்கியுள்ள அதிகாரமும், ஒன்றிய அரசுக்கே வலிமையாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு நிலைமைக்காக மட்டுமின்றி, நிதி நிலைமைக் காகக்கூட மாநில அரசைக் கலைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சியை ஒன்றிய அரசு கொண்டு வரும் வகையில் சட்டங்கள் அமைந் துள்ளன. அதை மீறித்தான் மாநில அரசுகளின் குரல்கள் கேட்கின்றன. நேரு ஸ்டேடி யத்தில் பிரதமர் முன்னி லையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார். நேரு பிறந்தநாளில் மம்தா குரல் எழுப்பியிருக்கிறார். நேரு பிரதமராக இருந்த காலத்திலிருந்தே இத்தகைய குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மாநில அரசுகளின் உரிமைகள் மதிக்கப்பட்டு, கூட்டாட்சி நடைமுறைக்கு வரும் வரையில் இத்தகைய பிரச்சினைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும்.

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல என்கிறாரே தமிழக ஆளுநர் ரவி?

7 பேர் விடுதலை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவைக் கிடப்பில் போட்ட ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டிவிட்டது. அதன்படி பார்த்தால், ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்புகூட அல்ல. அந்த ரப்பர் ஸ்டாம்புக்கான மை உள்ள ஸ்டாம்ப் பேடு. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் கவர்னர்களின் அதிகாரம் என்ற மை நன்றாக ஊறி ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி மட்டுமின்றி அண்டை மாநில ஆளுநர்களும் இரட்டை ஆட்சி மனநிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம்தான் ஜனநாயகத்தை நினைவூட்ட வேண்டியதாக இருக்கிறது.

mm

தே.மாதவராஜ் கோயமுத்தூர்

ஜி 20 மாநாடு பற்றி ஒரு வரியில்?

சுத்தியல் கை மாறியிருக்கிறது.