சி. கார்த்திகேயன், சாத்தூர்
சுந்தர்.சி.யின் பார்ட் சினிமா, ராகவா லாரன்சின் பார்ட் சினிமா, என்ன வித்தியாசம்?
இரண்டுமே பேய்த்தனமானவை. பேய்க்கும் பேய்க்கும் பார்ட் பார்ட்டாக நடக்கும் சண்டை பற்றி மனிதர்களான நாம் என்ன சொல்வது?
வாசுதேவன், பெங்களூரு
திரை உலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களைப் போல, விளையாட்டுத் துறையிலிருந்து வந்தவர்கள் ஏன் ஜொலிக்கவில்லை?
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் பெரிய அளவில் வெற்றி பெற்றவர்கள் எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்தான். எம்.ஜி.ஆர் இறந்தவுடன் உடன்கட்டை ஏற நினைத்தேன் எனச் சொன்னதிலிருந்தே ஜெயலலிதாவின் வெற்றி ரகசியம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். விஜயகாந்த் வேகமாக மேலே ஏறி, கிடுகிடுவென சரிந்துவிட்டார். சிவாஜி, அமிதாப்பச்சன் போன்ற ஜாம்பவான்களால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. கமல் தடுமாறுகிறார். ரஜினி கும்பிடு போட்டுவிட்டார். பாக்யராஜ், டி.ராஜேந்தர் தொடங்கி மன்சூர்அலிகான் வரையிலானவர்களின் அரசியலை மக்கள் அறிவார்கள். ஹேமமாலினி, ஜெயப்ரதா, குத்து ரம்யா போன்றவர்கள் தேர்தல் வானத்து நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் பார்த்து மற்ற நட்சத்திரங்களும் ஜொலிக்க விரும்புகின்றன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இதுவரை அரசியலுக்கு வந்தவர்களிலேயே அதிக கவனத்தைப் பெற்றிருப்பவர் சித்துதான். அவருக்கு முன்பும் பின்புமாக கீர்த்திஆசாத், அசாருதீன், கவுதம் கம்பீர் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும், சினிமா பிரபலங்கள் அளவுக்கு பெயர் பெற முடியவில்லை. சினிமா ஸ்டார்களுக்கு ஆண்களைப்போல இந்தியப் பெண்களிடமும் செல்வாக்கு உண்டு. கிரிக்கெட் இன்னமும் அந்த இடத்தை அடையவில்லை. அத்துடன், கிரிக்கெட்டின் பின்னணியில் உள்ள அரசியலைவிட, சினிமாவின் பின்னணியில் உள்ள அரசியல் வலிமையானது.
பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்
ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் செயல்பட்ட விதம் குறித்து?
ஏலம், சூதாட்டம் என ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு நடுவே நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில், "சென்னை சூப்பர் கிங்ஸ்' சாம்பியன் பட்டம் வென்றது ஆச்சரிய மில்லை. ஆனால், சீனியர்களையும் ஜூனியர்களையும் கொண்ட அணியைக் கச்சிதமாக வழிநடத்தி, தன்னுடைய பங்களிப்பையும் சிறப்பாக செலுத்தி, வெற்றிக் கோப்பையை வென்று அதனை அணியில் உள்ள வீரர்களின் குடும்பத்தினரின் கையில் கொடுத்து மகிழ்ந்ததில் ஜொலித்தது தோனியின் கேப்டன்ஷிப்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"ஜெ. நினைவிடத்தில் சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் விருது தரலாம்' என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு பற்றி..!?
சசிகலாவுக்கு ஆஸ்கர் விருது என்றால், நடிகர்- நடிகையாகவே வாழ்ந்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் எப்படி எடை போடுகிறார் முன்னாள் அமைச்சர்?
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
விஜய், குரல் கொடுக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலில் இந்த வேகம் என்றால் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அவர் நடவடிக்கை எப்படி இருக்கும்?
குரல் கொடுக்காமலேயே வெற்றி பெற்றவர்களின் குரலையும், அவர்களைப் போன்றவர்களின் குரலையும் விஜய் எந்தளவு கவனத்தில் கொள்ளப்போகிறார், அரசியல் குறித்த அவரது பார்வை என்ன, நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்தே எல்லாமும் நடக்கும். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளரின் சொந்த செல்வாக்கு, சொந்த-பந்த ஆதரவு, சாதி பலம் இவைகூட போதுமானவை. மாவட்ட-ஒன்றிய சேர்மன் பதவிகளுக்கே அவை போதாது. நாடாளுமன்ற -சட்டமன்றத் தேர்தல் களம் என்பது எப்படிப்பட்டது என்பதைக் கமலைப் பார்த்து விஜய் புரிந்துகொண்டிருப்பார்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
வங்க தேசத்தில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது குறித்து?
ஒரே மதத்தினர் பெரும்பான்மையாக இருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிவதற்கு காரணமாக இருந்தது அதன் மொழியுணர்வு. உருது ஆதிக்கத்திற்கு எதிராக வங்க மொழிபேசும் கிழக்கு பாகிஸ்தானியர்களின் எழுச்சியே வங்கதேசம் என்ற புது நாட்டை உருவாக்கியது. இப்போதும் அங்கே அதிகமாக வாழ்பவர்கள் முஸ்லிம்கள். சிறுபான்மையினராக இருப்பவர்கள் இந்துக்கள். மேற்கு வங்கத்தைப் போலவே வங்கதேச இந்துக்களும் துர்கா பூஜை கொண்டாடுவது வழக்கம். பிள்ளையார் சிலைகள் போல பல்வேறு வடிவங்களில் துர்காதேவி சிலைகள் உருவாக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலையில் முஸ்லிம்களின் புனித நூலை வைத்திருந்ததாக சர்ச்சையாகி, வன்முறை வெடித்து, இந்துக் கோவில்கள் தாக்கப்பட்டதுடன், இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார் கள். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு வருகின்றன. பிரதமர் ஷேக்அசீனா தலைமையிலான அரசு, அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும் என ஐ.நா.சபை எச்சரித்திருக்கிறது. மதம் தலைக்கேறி னால் யானை மட்டுமல்ல, மனிதனும் மிருகம்தான்.