மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதுதான் ஒன்றிய அரசின் கொள்கை என்கிறாரே மோடி?
தேவையற்றது என்பது எது? மோடி அரசில் விமானப் போக்குவரத்துக்கு என தனியாக ஓர் அமைச்சர் இருக்கிறார். ஆனால், இந்திய அரசுக்கு சொந்தமாக விமான நிறுவனம் தற்போது இல்லை. டாடாவிடமிருந்த ஏர் இந்தியா, நேரு காலத்தில் அரசு வசமானது. அரசிடம் இருந்த ஏர் இந்தியா மோடி ஆட்சியில் டாடா வசமாகிவிட்டது. இன்று விமான சர்வீஸ். நாளை, ரயில்வே. மோடி சொல்லும் தேவையற்ற பொதுத்துறை என்பது இதுதானோ!
சு.வெங்கடேஷ், கோட்டயம்
பிரிட்டிஷ் அரசிடம் இந்து மகா சபை தலைவர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் தந்ததாக இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் தவறாக சித்தரிக்கிறார்கள் என்றும், மகாத்மா காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் அந்தக் கடிதத்தை எழுதினார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சொல்கிறாரே?
பிரிட்டிஷ் அரசால் அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டது 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி. 6 மாதங்களில் மன்னிப்பு கேட்டு கருணை மனு சமர்ப்பித்தார். நவம்பரில் இரண்டாவது முறையாக கருணை மனு சமர்ப்பித்தார். அப்போது மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தார். 1915 ஜனவரி 9-ந் தேதிதான் அவர் இந்தியாவுக்கு வந்தார் என்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். காவிச் சித்தாந்தத்தால் கொல்லப்பட்ட காந்தி, இறந்தும் படாதபாடு படுகிறார்.
ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்
உள்ளாட்சியில் தி.மு.கவிற்கு கிடைத்த வெற்றி, அக்கட்சியின் நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றா?
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் 9 மாவட்டங்களுக்கு மட்டும்தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதுவும், ஏற்கனவே அ.தி.முக. ஆட்சியில் மற்ற மாவட்டங்களில் நடந்தது போல ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும்தான். அதில் மாவட்ட கவுன்சிலர் களுக்கான 140 இடங்களில் 138 இடங்களையும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடங்களில் 1000 இடங்களுக்கு அதிகமாகவும் தி.மு.க பெற்றிருப்பது அதற்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவின் வெளிப்பாடு தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 1996 முதல் உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சி -நகராட்சி -பேரூ ராட்சி -ஊராட்சி ஆகியவற்றுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது 2011-வரை வழக்கமாக இருந்தது. அதனால், ஆளுங்கட்சியே உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற்று வந்தது. 2016-லிருந்து தேர்தல் நடத்தப்படாத நிலையில், அ.தி.மு.க அரசின் கடைசி ஆண்டுகளில் கிராமப்புற ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது, அதிலும் தி.மு.க.வே அதிக இடங்களை வென்றது. மிச்சமிருந்த இடங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடந்து, ஆளுங்கட்சியே அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் வெற்றியை விடவும் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவதே உண்மையான வெற்றியாகும்.
டி. ஜெய்சிங், கோயம்புத்தூர்
அ.தி.மு.க.வில் எடப்பாடியார் இலக்கு என்ன? ஓ.பி.எஸ்.சின் இலக்கு என்ன?
இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையிலிருந்து பொதுச்செயலாளராகி ஜெயலலிதா போல கட்சியைக் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எடப்பாடியார் இலக்கு. அந்த இலக்கு நிறைவேறாதபடி, சசிகலாவையாவது உள்ளே கொண்டு வந்துவிட வேண்டும் என்பது ஓ.பி.எஸ்.ஸின் இலக்கு. பொன்விழா ஆண்டில் உள்ளடியால் திணறுகிறது அ.தி.மு.க.
வாசுதேவன், பெங்களூரு
"வெண்ணிற ஆடை' ஹீரோ ஸ்ரீகாந்தின் மரணம்?
எம்.ஜி.ஆர். -சிவாஜி இருவரும் கொடிகட்டிப் பறந்த திரையுலகில் இளம் ஹீரோக்களாக பலர் வந்தனர் ஒரு சிலரே தாக்குப் பிடித்தனர். எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு ஹீரோவாக நடித்த பெருமை ஸ்ரீகாந்த்துக்கு உண்டு. பின்னர் வில்லனாக, குணச் சித்திர நடிகராக, காமெடியனாக பல ரோல்களில் நடித்தார். சினிமா சான்ஸ் தேடிய காலத்தில் திருவல்லிக்கேணியில் புகழ்பெற்ற சைடோஜி மெஸ்ஸில்தான் அவருக்கு உணவு. சினிமாவின் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கத் தொடங்கியதும் நண்பர்கள் பலருக்கும் உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந் தவர் ஸ்ரீகாந்த். சினிமா என்பது பரமபத விளையாட்டு. ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு. ஸ்ரீகாந்த் உருட்டிய தாயக்கட்டை அவரை ஏணியில் ஏற்றி, பாம்பிடம் சிக்க வைத்தது.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
மது அருந்துவது தவறு என்று நண்பனுக்கு கொஞ்சம் அறிவுரை கூறுவது தவறா?
அறிவுரைதானே... கொஞ்சம் என்ன, ஃபுல்லாகவே தரலாம்.