த.சிவாஜிமூக்கையா, சென்னை-44

அரசியல் துடுக்கும் அரசியல் மிடுக்கும் யார் மாதிரி இருக்க வேண்டும்?

சாக்லேட் பாய் என விமர்சித்த ஜெயக்குமாருக்கு ப்ளேபாய் என பதிலடி கொடுத்த உதயநிதியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது அரசியல் துடுக்கு. முதல்வரிடம் கொரோனா நிதி வழங்குவதற்கான இணையத்தைத் தொடங்கிவைத்து, இதில் எல்லாம் வெளிப்படையாக உள்ளது. பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை என பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சொன்னது அரசியல் மிடுக்கு.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடுவதா என்று தி.மு.க அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவிக்கிறாரே?

எந்த ஓ.பி.எஸ்.? அண்ணா பெயரால் கட்சி நடத்தி, ஆட்சியில் அமர்ந்து, பதவி சுகம் அனுபவித்தபடியே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திருமண விழாக்களுக்கு வாடகைக்கு விட்டு எச்சில் இலை குப்பை மேடாக ஆக்கிய ஜெயலலிதாவின் கார் டயரை கும்பிட்டாரே, அவர்தானே!

d

Advertisment

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரயிலில் பயணம் செய்தது எதைக் காட்டுகிறது?

அரசாங்கப் பதவி எதுவும் வேண்டாம் என்று இருந்த பதவிகளையும் தூக்கிப்போட்டுவிட்டு பொதுவாழ்வுக்கு வந்தவர் ஈரோட்டின் மிகப் பெரிய வணிகரின் மகனான பெரியார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காந்தியின் கொள்கைப்படி கதர்த் துணிமூட்டையை சுமந்து கிராமம் கிராமமாக விற்பதற்காக ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தவர். பயணச் செலவில் சிக்கனம் பிடித்து, பொதுத்தொண்டுக்கு செலவிடுவதை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் பெரியார். இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊருக்கு மேற்கொண்ட ரயில் பயணம் என்பது ஒரு விழிப்புணர்வுக்கான அடையாளம். கோவிட் நேரத்தில் மக்கள் தைரியமாக ரயிலில் பயணிப்பதற்காக முதல் குடிமகன் முன்னுதாரணமாகப் பயணித்தார். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ரயில்வேயில் குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக ‘சலூன்’ என்ற சிறப்பு பெட்டி உருவாக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்கள் அப்படிப்பட்ட வசதியான பயணத்தை மேற்கொள்ள முடியாது. அதற்கான கட்டணத்தில் அவர்களால் டிக்கெட் வாங்கவும் முடியாது. ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொண்டது சிறப்பு ரயிலில்தான். டெல்லியிலிருந்து கான்பூருக்கு இரண்டே நிறுத்தங்கள்தான். சொந்த ஊருக்குச் சென்ற பிறகு, ஜனாதிபதி தன் அலுவல்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் கருதி டெல்லிக்குத் திரும்பியது விமானப் பயணம் மூலமாகத்தான்.

எஸ்.மோகன், கோவில்பட்டி

தாய்மொழியில் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா?

படிப்புக்கேற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் ஆங்கிலமோ, தாய்மொழியோ எதில் படித்தாலும் இன்ஜினியராகலாம்; டாக்டராகலாம். ஜப்பானில், ஜெர்மனியில் இன்னும் சில நாடுகளில் அவரவர் தாய்மொழியில் தொழிற்படிப்பைப் பயிலும் வாய்ப்பு உள்ளது. எனினும், இத்தகைய படிப்புகளுக்கு ஆங்கிலம்தான் சரியான மொழி என்கிற எண்ணம் நீண்டகாலமாகப் பதிவாகி இருப்பதாலும், ஆங்கிலத்தில் இவற்றுக்கான புத்தகங்கள்- கட்டமைப்புகள் பலமாக இருப்பதாலும், தாய்மொழியில் இவற்றைப் படிப்பதற்கு மனத்தடை ஏற்படுகிறது. தாய்மொழியில் தொழிற்படிப்புகளைப் பயின்று, அதுபற்றி, தொடர்பு மொழியில் உரையாடும் பயிற்சி பெற்றிருந்தால், தாய்மொழியில் இன்ஜினியரிங் படித்து, உள்நாடாக இருந்தாலும், உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் வேலை பெறமுடியும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவகோட்டை

வரவேற்புக்கான பூங்கொத்துகள்- பொன்னாடைகள் எல்லாம் புத்தகங்களாக மாறிவிட்டனவே?

திருமண விழாக்களில் மொய்ப் பணத்துக்கு இணையாகப் புத்தகங்களை வழங்குவதை ஒரு பண்பாடாக மாற்றியது திராவிட இயக்கம். திருக்குறள்- சங்க இலக்கியங்கள் தொடங்கி பெரியார், அண்ணா, கலைஞர், மு.வ., உள்ளிட்டோர் எழுதிய புத்தகங்களும் உலகப் புரட்சி வரலாறுகளும் பரிசாக அளிக்கப்பட்ட காலம் உண்டு. அதன்பிறகு, கட்சி மேடைகளே கவர்ச்சிக்கு ஆட்பட்ட நிலையில், ஆளுயுர மாலைகள் தொடங்கி, எதற்கும் உதவாத பன்னாடை போன்ற பொன்னாடைகள் போர்த்தப்பட்டன. காலப்போக்கில் பூங்கொத்துகள் கொடுப்பது நாகரிகமாகப் பார்க்கப்பட்டது. இவை எல்லாவற்றையும்விட புத்தகங்களை வழங்குவதே சிறப்பு என்பதை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே கட்சியினரிடம் வலியுறுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், அது நடைமுறைக்கு வருவதற்கு தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டியதாக இருக்கிறது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் அரசியல்வாதி இருக்கிறான் என்று கவிஞர் பழநிபாரதி சொன்னது சரிதானா?

கவிஞர் வாக்கு பொய்க்காது என்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு வியாபாரி உண்டு; ஒரு நடிகர் உண்டு. ஒரு கதாசிரியன்- வசனகர்த்தா உண்டு. அந்தந்த நேரத்தில் அவர்கள் எட்டிப்பார்ப்பார்கள். அவ்வப்போது அவனுக்குள்ளிருந்து ஒரு மனிதனும் வெளிப்படுவது உண்டு.