கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
மாநில அரசுகள் 20 லட்சம் கோடி ரூபாயும், பொதுமக்கள் 10 லட்சம் கோடி ரூபாயும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்தால் பொருளாதாரம் உயரும் என்கிறாரே மத்திய அமைச்சர் நிதின்கட்கரி?
மக்கள் வருமானம் இழந்த பட்டினியால் சாகிறார்கள். மாநில அரசுகள் வருவாய் இழந்து திண்டாடுகின்றன. இரண்டையும் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, "நீங்கள் அரிசி கொண்டு வாங்க.. நாங்க உமி கொண்டு வருகிறாம். இரண்டையும் கலந்த ஊதி ஊதி தின்னலாம்' என்கிறது. மற்றவர்கள் தயவில் தங்களை சாதனையாளர்களாக விளம்பரப்படுத்திக்கொள்வதே மோடி அரசின் நடைமுறையாக இருக்கிறது.
சாரங்கன், கும்பகோணம்
கலைஞர் இல்லாத தமிழ்நாடு?
கிராமப்புற சமத்துவபுரங்கள்-உழவர்சந்தை, நகர்ப்புற டைடல்பார்க்-குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் வரை அனைத்திலும் கலைஞர் இருக்கிறார். இந்திய அரசியலில் தேர்தல் களத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு மதம், சாதி, கட்சி, பணபலம், குடும்பப் பாரம்பரியம் எனப் பல அம்சங்கள் தேவைப்படும். கலைஞரோ, தான் பிறந்த மதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் மூடநம்பிக்கைகளை யும் கடைசிவரை எதிர்த்து மதவிரோதியாக சித்தரிக்கப்பட்டவர். அவர் பிறந்த சாதியோ சமூக அளவிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டது- எண்ணிக்கை அடிப்படையிலும் மிகக்குறைவானது. தேசியக் கட்சிகள் கோலோச்சிய காலத்தில், தான் சார்ந்திருந்த கட்சியின் கிளைகளை அவரே தொடங்கி அவரே கொடியேற்றி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத் தில் பிறந்த அவருக்கு பெரிய பணபலமோ குடும்பப் பின்னணியோ கிடையாது. இந்திய அரசியலின் எழுதப்படாத விதிகளில் எதுவுமில்லாத கலைஞர்தான் 13 தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்திலும் வென்ற ஒரே அரசியல் தலைவர். உழைப்பு-திறமை-விடாமுயற்சி இவற்றின் அடையாளமாக தமிழ்நாட்டின் இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருப்பார் கலைஞர்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்கிறபோது, ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அட்மிஷன் வைத்துக் கொள்ளலாமே?
குழந்தைகள் தாங்களே சாப்பிடப் பழகும் வரையிலும், தங்கள் உடலுக்கு எது எது தேவை என அறிகிற வரையிலும் தாய் ஊட்டிவிடுவதில்லையா? அதுபோலத்தான் 8ஆம் வகுப்பு வரை கல்வியைப் பக்குவமாக ஊட்டிவிடவேண்டும். 9ம் வகுப்பிலிருந்து அவர்களே சாப்பிடு வதைக் கட்டாயமாக்க வேண்டும்.
கே. இந்து குமரப்பன், விழுப்புரம்
ஜெ. வாழ்ந்த வீட்டை கோவில் ஆக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறாரே?
கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களும் நுழைய முடியாது. ஜெ வாழ்ந்த வீட்டுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நுழைய முடிந்ததில்லை. அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கக் கூடும்.
_____________
தமிழி
கவின்நிலா, கோவில்வெண்ணி
கீழடியைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகளை, மணலூர் எனத் தொடரும் அகழாய்வுகளில் அற்புதங்களை எதிர்பார்க்கலாமா?
எந்தவொரு அகழாய்விலும் எதிர்பார்ப்பது அற்புதங்களையல்ல, உண்மையான வரலாற்றுச் சான்றுகளைத்தான். பொய்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இத்தனைகால வரலாறு பொலபொலவென தகர்ந்து உண்மைகள் வெளிப்படும்போது அது நமக்கு அதிசயமாகவும் அற்புதமாகவும் தெரிகிறது. கீழடியில் சங்ககாலத் தமிழர் வரலாற்றுத் தொன்மை குறித்த உண்மை வரலாறு வெளிப்பட்டபோது நமக்கு அப்படித்தான் தெரிந்தது. தொடரும் கீழடி ஆய்வுகளில் சங்ககாலத் தமிழர்களின் குடியிருப்புகள், இடுகாடுகள், முதுமக்கள் தாழிகள் குறித்த சான்றுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே, இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவ்வப்போது கைவிடப்பட்டு, பின்னர் தொடர்ந்து மேற்கொண்டு இன்னமும் அறிக்கை வெளியிடப்படாமல் இருக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் தொடர்வதால் கூடுதல் உண்மைகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு. கீழடி என்பது வைகை ஆற்று நாகரிகம் பற்றிய வரலாற்று உண்மைகளைத் தெரிவித்தது. ஆதிச்சநல்லூர், சிவகளை, மணலூர் ஆகியவை தாமிரபரணி ஆற்றங்கரையில் செழித்திருந்த நாகரிகத்தை எடுத்துக்காட்டக்கூடியவையாக இருக்கும். வரலாற்று ஆய்வாளரும் வழக்கறிஞருமான தி.மு.க.வின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ""ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது தாமிரபரணி நாகரீகம். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜகோர் 1876-ல் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு காட்சிப்படுத்தினார். 1902-ல் அலெக்ஸாண்டனர் ரியா என்பவர் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டு வைத்தார். 2004ல் கிடைத்த முதுமக்கள் தாழியை அமெரிக்கா புளோரிடா ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பியது. அந்த முதுமக்கள் தாழி 2900 வருடங்களுக்கு முந்தையது என உறுதியானது. இதேபோல் சிவகளையில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் பூமிக்குள் உள்ள முதுமக்கள் தாழிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்தது. தமிழக அரசின் தொல்லியல் துறையின்கீழ் இந்த ஆய்வுப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்ததை நிறைவேற்றும்போது, உண்மை வரலாற்று வெளிச்சம் உலகளவில் பரவும்.