வாசுதேவன், பெங்களூரு

ஆஸ்கர் விருதுகள்...?

ஆட்சிக்கு வர நினைக் கும் நடிகர்களையும், நடிப்பில் மிளிரும் ஆட்சியாளர்களையும் பார்க்கும் நமக்கு, ஆஸ்கர் விருது வாங்கிய திரைக் கலைஞர்களெல்லாம் ரொம்ப சாதாரணம்.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

டெல்லி ஆட்சியில் மலர முடியாத தாமரை, தமிழ் நாட்டில் எப்போது மலரும்?

தமிழ்நாட்டில் கட்சி அரசியலைக் கடந்த சமூக அரசியல் என்பது நிலைபெற்றிருக்கிறது. தருமபுரம் பட்டணப்பிரவேசம் செய்வதற்காக, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் திருப்பனந்தாள் மடத்துக்கு செல்வதை அறிந்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவியல் வளர்ச்சியால் பல வாகன வசதிகள் உள்ள காலத்தில், மனிதரை மனிதர்கள் சுமந்து செல்வது மனித உரிமைக்கு எதிரானது. சுயமரியாதைக்கு இழிவானது என்று போராடினர். ஆதீனத்தை நேரில் சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர். சமூக நீதி இயக்கங்கள் பலவும் தி.க.வுடன் இணைந்தன. கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த தருமபுரம் ஆதீனம், பல்லக்கைத் தவிர்த்துவிட்டு, மடத்துக்கு நடந்து சென்றார். தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதால், தி.க. உள்ளிட்ட சமூகநீதி அமைப்பினர், ஆதீனத்துக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து முழக்கம் எழுப்பினர். ஆன்மிகமும் பகுத்தறிவும் ஒன்றையொன்று மதித்து நடக்கும் நல்லிணக்க மாநிலம், தமிழ்நாடு. இந்த சமூக அரசியலைப் புரிந்துகொள்ளாமல், உத்தரபிரதேச பாணியில் தனது அரசியலை செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

"தமிழ்நாட்டுக்கு வாழவந்தவர்தான் ரஜினி, அவர் ஆள நினைப்பதை ஏற்க முடியாது' என்கிறாரே ரஜினியை வைத்து படம் இயக்கிய பாரதிராஜா?

"அதை உங்க ஓனரை சொல்லச் சொல்லுங்க' என்கிற சினிமா டயலாக் போல, ரஜினி ஆள்வதா வேண்டாமா என்பதை ஜனநாயகத்தின் ஓனர்களான மக்கள்தான் சொல்லவேண்டும். அதற்கு, ரஜினி முதலில் அரசியலுக்கு வரவேண்டும். ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார் பாரதி ராஜா.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம் என்றெல்லாம் காங்கிரஸ் அறிவித்திருந்ததே?

ஒரு காலத்தில் டெல்லியை கட்டி ஆண்டது காங்கிரஸ். இப்போதோ மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62-ல் டெபா சிட்டைப் பறிகொடுத்து, ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாத அளவுக்குப் பரிதாபகரமான தோல்வியைத் தழுவியுள்ளது. 4% வாக்குகளை மட்டுமே பெற் றுள்ளது. காங்கிரசிடம் எதிர்பார்ப்பது வாக்குறுதிகளை அல்ல, ஆளுமைமிக்க செயல்பாட்டினை. டெல்லி காங்கிரசிலேயே அது இல்லை.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

என்கவுன்ட்டர் சரியா? தவறா?

சட்டத்தின் பிடி தளர்வதா லும், நீதியின் தீர்ப்பு தாமதமாவ தாலும், அந்தத் தவறை செய்வதே சரி என நினைக்கிறார்கள் பொது மக்கள்.

___________

தமிழி

d

சாரங்கன், கும்பகோணம்

கீழடி ஆய்வுகள் மீது கவனம் இருந்த நிலையில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாரே?

கீழடி ஆய்வு முடிவுகள் வெளிவராதபடி இந்திய தொல்லியல் துறைக்குள் மத்திய பா.ஜ.க. அரசு நடத்திய அரசியலை பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். அதனால், வைகைக் கரை கீழடியைவிட, பொருநை (தாமிரபரணி) கரை ஆதிச்சநல்லூருக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழகத்தை ஆண்ட தி.மு.க., ஆளுகிற அ.தி.மு.கவின் அமைச்சர்கள் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர். திட்டம் நிறைவேறவில்லை. இப்போது மத்திய நிதியமைச்சர் அறிவித்திருப்பது எந்த வகையில் நிறைவேறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தாமிரபரணி என இப்போது மருவிவிட்ட பொருநை ஆற்றங்கரையில் செழித்த ஆதிச்சநல்லூரில் 19-ஆம் நூற்றாண்டிலேயே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த பேராயர் ராபர்ட் கால்டு வெல் 1850-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சில தொல்லியல் பொருட்களை சேகரித்தார். நெல்லை திருச்செந்தூர் ரயில்பாதை அமைத்தபோது புதை பொருட்கள் சில கிடைத்துள்ளன என்கிறார் தமிழார்வலர் கப்பிக்குளம் பிரபாகர். 1876-ல் ஜெர்மனியைச் சேர்ந்த பிரடரிக் ஜாகர் ஆய்வு செய்தார். அலெக்சாண்டர் ரே என்ற இங்கிலாந்து ஆய்வாளர் 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் ஆய்வினை மேற்கொண்டார். இதனையடுத்து, 114 ஏக்கர் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இரும்பு, வெண்கலம், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை அந்த ஆய்வில் கிடைத்தன. பின்னர் பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் லாபிக் என்பவர் நடத்திய ஆய்வில், மண்டை ஓடுகள் ஆராயப்பட்டு, அவை முற்கால திராவிடர்களின் (தொல் தமிழர்கள்) இனத்தைச் சார்ந்தவை என்றார். ஜி.எலியட் சுமித் என்ற ஆங்கிலேயரும் மண்டை ஓடுகளை ஆராய்ந்து இதேபோன்ற கருத்தினைத் தெரிவித்தார். 2004-ஆம் ஆண்டுவரை ஆதிச்சநல்லூரில் பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அண்மைக்கால ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. கீழடிக்கும் முன்பாக கி.மு.900 என்ற காலகட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் எழுத்துகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. முழுமையான ஆய்வுகளும் அறிக்கைகளும் அவசியப்படும் நிலையில், அரசாங்கம் வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக்கூடாது.