மீபகாலமாக தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு சர்ச்சை அடிக்கடி எழுந்து மெகா ஸ்டார்களை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களை பாடாய்படுத்துகிறது. ஆரூர் தமிழ்நாடனின் "ஜூகிபா' கதையை அப்படியே திருடி ரஜினியை வைத்து "எந்திரன்' படம் எடுத்தார் டைரக்டர் ஷங்கர். அந்தக் கதை திருட்டு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

master

ஷங்கரைப் போல பிரம்மாண்ட டைரக்டரான ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யை வைத்து எடுத்த "கத்தி' படத்தின் கதை, கோபிநைனாரிடமிருந்து திருடிய கதை என ஆதாரப்பூர்வமாக நிரூபணமானதால், நஷ்டஈடாக 40 லட்ச ரூபாய் வழங்கினார் "கத்தி'யின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் அல்லிராஜா. கோபிநைனாரிடம் உண்மை இருந்ததால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே கூப்பிட்டு, "அறம்' படம் மூலம் அவரை டைரக்டராக்கினார்.

அதே முருகதாஸ், அதே விஜய்யை வைத்து எடுத்த "சர்கார்' படத்தின் கதை தன்னுடைய கதைதான் என வருண் ராஜேந்திரன் என்பவர், படத்தின் ஒன் லைன் மூலமே நிரூபித்ததை ஏற்றுக்கொண்டார், அப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ். "சர்கார்' கதைத் திருட்டு சம்பந்தமாக விசாரணை ஆரம்பமானதுமே பாக்யராஜுக்கு நெருக்கடியும் ஆரம்பமானதால், தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது. "வருண் ராஜேந்திரனை சமாளிப்பது ஒங்க பாடு' எனச் சொல்லிவிட்டது சர்காரின் தயாரிப்பு நிறுவனமான "சன் பிக்சர்ஸ்'.

Advertisment

இப்போது பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் ""விஜய்யின் "மாஸ்டர்' படத்தின் கதை என்னுடையதுதான், நான் எழுதிய "நினைக்கும் இடத்தில் நான்' என்ற கதையைத்தான் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் "மாஸ்டர்' படமாக எடுத்துள்ளார்'' என்ற குற்றச்சாட்டை கிளப்புகிறார் கே.ரங்கதாஸ் என்பவர்.

"" "மாஸ்டர்' படத்தின் கதை உங்க கதைன்னு எப்படி உறுதியா சொல்றீங்க?'' என ரங்கதாஸிடம் கேட்டோம்.

""2017-ல் இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். என்னுடைய கதைப்படி ஹீரோவும் வில்லனும் கல்லூரி நண்பர்கள். இருவருமே பேராசிரியர் தகுதித் தேர்வு எழுதி, அதில் வில்லன் பெயிலாகிவிடுகிறார். ஆனால் ஹீரோவோ வில்லனின் கல்லூரியிலேயே பேராசிரியராக வேலைக்குச் சேர்கிறார். ஒருகட்டத்தில் வில்லனுடன் மோதலாகி கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஹீரோ. நீட் தேர்வையும் +1 பொதுத் தேர்வையும் எதிர்ப்பதுதான் என்னுடைய கதையின் மையக்கரு.''

Advertisment

""இந்தக் கதை எப்படிங்க திருடு போச்சு?'' என்றதும், ""எனக்கு மோகன், ஆல்டாப் குமார், வெங்கிபோஜன் என மூணு ஃப்ரண்ட்ஸ் இருக்கிறார்கள். இதில் வெங்கிபோஜன் கோவையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் விஸ்காம் டிபார்ட்மெண்டில் பேராசிரியராக இருக்கார். அவரிடம் என்னுடைய முழுக்கதையையும் பென்டிரைவில் காப்பி பண்ணிக் கொடுத்து பத்திரமாக வைக்கும்படி சொல்லியிருந்தேன்.

da

அதே கோவையில் பி.எஸ்.ஜி. காலேஜில் ஃபேஷன் டிசைனிங் முடிச்சிட்டு சில குறும்படங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது வெங்கிபோஜனுடன் லோகேஷ் கனகராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கிபோஜனின் ஆபீஸ்ஒர்க்கராக இருந்த சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டர் ரவிக்குமார் மூலம் கதை திருடப்பட்டிருக்கலாம்''’என சொல்லிக்கொண்டே வந்தவரிடம், ‘""சரிங்க... உங்க கதைதான்னு எப்படி சொல்றீங்க?'' என்றோம்.

"" "வாத்தி கம்மிங்',’"கண்ண பார்த்தாக்கா'’ என ரெண்டு பாடல் காட்சிகளின் சிச்சுவேஷனை வச்சுத்தான் கண்டுபிடிச்சேன். இதன் பிறகுதான் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப் போனபோது என்னுடைய புகாரை ஏற்க மறுத்துவிட்டார்கள்''’என்றார்.

நாம் வெங்கிபோஜனை தொடர்புகொண்டபோது, “""ரங்கதாஸ் என்னிடம் கதையைக் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஆறுமாதத்திலேயே சிஸ்டத்திலிருந்து டெலிட் ஆகிவிட்டது. அப்புறம்... லோகேஷ் கனகராஜை நான் பார்த்ததேயில்லை''’’ என்பதுடன் முடித்துக்கொண்டார்.

""இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது''’என்கிறார் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனோஜ்குமார். ‘மாஸ்டரின் லோகேஷ் கனகராஜும் நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

முதல்வரை விஜய் சந்தித்ததையடுத்து, "திரையரங்குகளில் 100% அனுமதி' என அறிவிக்கப்பட்டு, அதற்காக விஜய் மன்றத்தின் சார்பில் நன்றி போஸ்டர்களும் பளபளவென ஒட்டப் பட்ட நிலையில்... மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்பான கடிதத்தாலும், நீதிமன்ற கண்டிப்பினாலும் "50% இருக்கைகளுக்கே அனுமதி' என டைவ் அடித்துவிட்டது எடப்பாடி அரசு. இந்த புதிய நெருக்கடியை "மாஸ்டர்' டீம்-விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் நிலையில், கதை பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ரங்கதாஸ் நேரடியாக டைரக்டரிடம் கதை சொல்லாத நிலையில், அவர் கதை யார் மூலமாக போயிருக்கும் என்பது அனுமானங்களின் அடிப்படையில் உள்ளது.

"மாஸ்டர்'’ ரிலீசானா உண்மை யும் நியாயமும் யார் பக்கம் என்பது தெரிந்துவிடப் போகிறது.

-அருண்பாண்டியன்