ந்தியாவின் பட்டாசு மையமாகத் திகழும் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளும், தொழிலாளர் உயிரிழப்புகளும் தொடர்ந்தபடியே உள்ளன.

கடந்த 9ஆம் தேதி சிவகாசி உட்கோட்டத்தி லுள்ள செங்கமலப்பட்டியில் உரிமையாளர் சரவணனின் குத்தகைதாரரான முத்துக்கிருஷ்ணன் நடத்திவந்த ஸ்ரீசுதர்சன் பட்டாசு ஆலையில் திடீ ரென்று வெடி விபத்து ஏற்பட்டு, தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்ததும், 14 பேர் காயமடைந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

fireworks

உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் பட் டாசு வேலைக்கு தொழி லாளர்களுக்குக் கிடைப்பது வெறும் கூலி மட்டுமே. பலமடங்கு லாபம் பார்க்கும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலரது பேராசைக்கு காலமெல்லாம் அப்பாவித் தொழிலாளர்கள் பலியாகின்றனர். வெடி விபத்துகளின் போதெல்லாம், பட்டாசு ஆலைகளின் அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாவதும், சதைகள் பிய்த்தெறியப்பட்டு தொழிலாளர்கள் தூக்கி வீசப்படுவதும், கரிக்கட்டைகளாகி உயிர் பறிபோகும் கோரச் சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன.

Advertisment

எத்தனை விபத்துகள்?

எத்தனை உயிர்கள்?

1991 ஜூலை 12ஆம் தேதி, சிவகாசி அருகே மீனம்பட்டியில் நியூ டான் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 38 பேர் உயிரிழந்தனர். அதுதான் சிவகாசியில் பல உயிர்களைப் பலிகொண்டு உலுக்கிய முதல் வெடி விபத்து. அதன்பிறகு நடந்த பெரிய வெடி விபத் தென்றால், 2012, செப்டம்பர் 5ஆம் தேதி, சிவகாசி யை அடுத்துள்ள முதலிப்பட்டியில் 40 பேர் உயிரைப் பறித்த ஓம்சக்தி பட்டாசு ஆலை வெடி விபத்துதான். 2011-ருந்து 2024 மே 9ஆம் தேதி வரையிலும், 201 வெடி விபத்துகளில் 365 பேர் உயிரிழந்து, 329 பேர் படுகாய முற்றதாகப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

Advertisment

ff

விதிமீறல் விபரீதங்கள்!

2012ல் 40 தொழிலாளர் களின் மரணத்திற்கு வழிவகுத்த ஓம் சக்தி பட்டாசு ஆலை வெடி விபத்தைத் தொடர்ந்து, சட்ட ரீதியான மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை ஆய்வு செய்த சைதன்ய பிரசாத் கமிட்டி ‘"பல்வேறு அரசுத் துறைகளிலும் ஆய்வு வழிமுறைகள் தெளி வானதாக இல்லை. பட்டாசு ஆலைகளை ஒழுங்கு படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அதிகாரி களிடையே ஒருங்கிணைப்பு இல்லை. உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், உற்பத்தி வேலைகளை துணை குத்தகைக்கு விடுவதை தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்'’என பரிந்துரைத்தது.

இதில் கொடுமை என்னவென்றால், கடந்த 12 வருடங்களாக விதிமீறலான குத்தகைக்கு விடுவதைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள், பல பட்டாசு ஆலை உரிமையாளர்கள். இதைக் கண்டுகொள்ளாமலே இருக்கிறார்கள், அரசுத்துறை அதிகாரிகள். கடந்த 9ஆம் தேதி ஸ்ரீசுதர்சன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந் ததன் பின்னணியில், பட்டாசு ஆலைகளைக் குத்தகைக்கு விடக்கூடாது என்ற விதி இருந்தும், உரிமையாளர் சரவணன் குத்தகைக்கு விட்டதும், குத்தகை எடுப்பதற்கு பெரும் தொகை கொடுத்த குத்தகைதாரர் முத்துக்கிருஷ்ணன் பெருமளவில் பணம் சம்பாதிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தி, பேன்சி ரகப் பட்டாசுகளை அதிக அளவில் தயாரித்துள் ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததால், உரிமையாளர் சரவணன் தலை மறைவாகிவிட, குத்தகைதாரர் முத்துக்கிருஷ்ணனும், போர்மேன் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ff

‘வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை ஆகிய அரசுத்துறையினர் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட நிலையிலும், குத்தகைக்கு விடுதல் போன்ற விதிமீறல்களும், வெடி விபத்துகளும் தொடர்ந்து நடப்பது ஏன்?’ என்ற கேள்விக்கு பல தரப்பிலிருந்தும் தகவல்களைக் கொட்டினார்கள்.

பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்புகளை, பணவெறிகொண்டவர்கள் நடத்தும் கொலை என்று சொன்னாலும் மிகையில்லை. விதிகளை மீறும் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், கை கோர்த்துச் செயல்படும் அதிகாரிகளால்தான் அடிக்கடி வெடி விபத்துகள் நடக்கின்றன. பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தும்போது எவ்வளவு குற்றம் குறைகள் காணப்படுகின்றனவோ, அதற்கேற்றாற்போல் அதிகாரிகள் தரப்பில் வசூல் வேட்டை நடத்திவிடுகிறார்கள். அதேநேரத்தில், கண்துடைப்பாக நடவடிக்கையும் எடுப்பார்கள். சரவெடிகள் பின்னுவதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், பெரும்பாலான பட்டாசு ஆலைகள் விதிமீறலாக சரவெடிகளை உற்பத்தி செய்கின்றன. லேபிள் ஒட்டாமல் சரவெடிகள் விற்பனைக்கு வருகின்றன. சுப நிகழ்ச்சியோ, துக்க நிகழ்ச்சியோ, அரசியல் தலைவர்களை வரவேற்கும் நிகழ்வுகளோ, அந்தப் பகுதியை புகை மண்டலம் ஆக்கிவிடும் சரவெடிச் சத்தத்தை இன்றுவரையி லும் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். உச்ச நீதிமன்றத் தடையையே மதிக்காத பட்டாசு ஆலை உரிமையாளர்கள், குத்தகைக்கு விடுவது போன்ற விதிமீறலில் ஈடுபடுவதை எல்லாம் சம்பந்தப்பட்ட துறையினரே கண்டுகொள்வதில்லை.

குத்தகை பட்டாசு ஆலைகள் கண்ணுக்குத் தெரியாதா?

உரிமம் இல்லாமல் கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பது, போதிய பயிற்சியில்லாத திறமையற்ற பணியாளர்கள் ரசாயனங்களைத் தவறாகக் கையாள் வது, ரசாயனங்களை நிரப்பும்போது கசிவு அல்லது அதிக அழுத்தத்தைத் தருவது, அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே வேலை செய்வது, அனுமதியில்லாமல் பேன்சி ரகப் பட்டாசுகளைத் தயாரிப்பது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.

பட்டாசு ஆலைகள் அனைத்தும் கிராமப் புறங்களில் உள்ளன. எந்த பட்டாசு ஆலைக்கு யார் உரிமையாளர்? எந்தெந்த பட்டாசு ஆலைகளை யார் யார் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்கள்? என்பதை அந்த கிராமத்தில் எவரைக் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும், தனது லிமிட்டில் உள்ள பட்டாசு ஆலைகள் இயங்கும் விதத்தை அறிந்தே இருப்பார். பேராசை குத்தகைதாரர்கள் பெரும் விபத்தை ஏற்படுத்துவார்கள் என்பது தெரிந்தாலும், கவனிப்புக்கு மயங்கிவிடுவார். வெடி விபத்துக்கான ஆரம்பப் புள்ளியே இதுதான்.

தற்போது விழித்துக்கொண்ட தொழிலாளர் நலத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் உரிய உரிமம் பெற்றுள்ளனவா? தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை மாவட்ட நிர்வாகம் மூலம் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையின் அலட்சியம்!

விதிகளை மீறி ஸ்ரீசுதர்சன் பட்டாசு ஆலையைக் குத்தகைக்கு எடுத்து, வெடி விபத்து மூலம் 10 உயிர்களைப் பறித்து கைதாகியிருக்கும் குத்தகைதாரர் முத்துக்கிருஷ்ணன், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, சிவகாசி நேசனல் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள தனது லேமினேசன் கம்பெனியில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வெடித்த தால், அந்தக் கட்டிடம் வெடித்துச் சிதறியது. அப்போது பக்கத்து வீட்டுச் சுவர் சேத மடைந்து, ஜென்னட் ராணி என்பவர் தலையில் கல் விழுந்து, அவருடைய இடது புஜத்தின் மீது கட்டிடக் கதவும் விழுந்ததால் காயமடைந்தார். மேலும், ஜென்னட் ராணி வீட்டில் பெட்ரூம் ஜன்னல் கதவுகள், பாத்ரூம் கிச்சன் கதவுகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை, ஏசி அவுட்டோர் யூனிட் பேன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி, பம்பர் லைட் ஆகியவையும் சேதமடைந்தன. முத்துக்கிருஷ் ணன் பட்டாசு மூலப்பொருட்களை அங்கு பதுக்கி வைத்திருந்ததை மறைத்துவிட்டு, இயந்திரத்தா லும் அஜாக்கிரதையாலும் ஏற்பட்ட விபத்து என்று வழக்கு பதிவுசெய்து அவரைக் காப்பாற்றி யது சிவகாசி கிழக்கு காவல்நிலையம். இத்தனைக் கும், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் வீட்டுக்கு கூப்பிடும் தூரத்தில்தான் அந்த லேமினேசன் அலுவலகம் வெடித்துள்ளது. அப்போதே உரிய சட்டப் பிரிவுகளில் முத்துக்கிருஷ்ணனை கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தப் பட்டாசு ஆலை வெடிவிபத்தைத் தவிர்த்திருக்க லாம் என்கிறார்கள், நேசனல் காலனி பகுதியினர்.

வெடி விபத்துகளுக்கு முடிவு கட்டுவோம்!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், வெடி விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. "பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முழுமுதல் காரணம் பேராசைதான். இதற்கொரு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது''’என்று உறுதிபடச் சொன்னார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "பட்டாசு ஆலைகள் இனி விதிகளை மீறினால் குண்டர் சட்டம் பாயும்''’என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1991-ருந்தே பட்டாசு ஆலை விபத்து களையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பதற்கு எவையெவை தடைகளாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்துவருகிறது நக்கீரன்.