இந்திய நாடு ஆங்கி லேய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் பெறு வதற்காக ஏராளமான தியாகிகள் தங்களது உயிரை தியாகம் செய் துள்ளனர்.
அப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இந்த நாட்டுக்காகத் தனது உயிரை தியாகம் செய்த வர் திருப்பூர் குமரன்.
அவரது பிறந்த நாளான அக்டோபர் 4-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யடுத்து இவ்வருடமும் அக்டோபர் 4-ந் தேதி திருப்பூர் குமரனின் பிறந்த ஊரான சென்னிமலையில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில், திருப்பூர் குமரனின் சுதந்திரப் போராட்டத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலையை தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் என பெயர் சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் முடிவு செய்தார்.
அக்டோபர் 4-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ-க் காட்சிமூலம் தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். ஈரோடு கலெக்டர் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறும்போது, "மூன்று மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஈரோடு மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்தார். அப்போதே, "கொடி காத்த திருப்பூர் குமரன் பெயரில் ஈரோட்டில் எதாவது பிரதான சாலைக்கு பெயர் வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு நான், "ஆமாம்' என்றேன். ஆனால் அப்போது முதலமைச்சர் பதில் எதுவும் சொல்லவில்லை. பிறகு எந்த சாலைக்கு பெயர் வைக்கலாம் என முதல்வரே தனியாக ஆய்வு செய்து, ஒரு மாதம் கழித்து, என்னிடம் போனில் பேசும்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்புறம் உள்ள சாலைக்கு "தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் என்று பெயர் வைக்க வேண்டும்' என்றார். அவர் திட்டமிட்டபடியே, தியாகி குமரன் பிறந்தநாளில் பெயர் சூட்டியிருக்கிறார்'' என்றார்.
மறைந்த தலைவர்களை அவர்களின் சமூகம் சார்ந்து கொண்டாடும் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் நடந்து வருகிறது. அந்த வரிசையில் ஆங்கி லேயர்களை எதிர்த்த தீரன் சின்னமலையை, கவுண்டர் சமூகத்தின் அடையாளமாகவும் கொடிகாத்த திருப்பூர் குமரனை முதலியார் சமூகத்தின் முகமாகவும் அச்சமூகங்களைச் சார்ந்த பல்வேறு அமைப்பினர் கொண்டாடுகின்றனர். இச்சமூகங்களைச் சார்ந்த தி.மு.க, அ.தி.மு.க.வினர் போல பா.ஜ.க.வும் இறந்த தியாகிகளுக்கு உரிமை கொண்டாட அரசியல் களத்தை பயன்படுத்துகிறது.
தீரன் சின்னமலையின் நினைவு நாளான ஆடி 18 அன்று ஈரோடு அரச்சலூர் அருகே அவர் பிறந்த ஓடாநிலை கிராமத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து, "தீரன் சின்னமலையின் அரசியல் வாரிசு நாங்கள்தான்'' என்றார் பா.ஜ.க. மாநில தலைவரான அண்ணாமலை. அதேபோல் அக்டோபர் 4-ந் தேதி சிவகிரியில் உள்ள குமரன் சிலைக்கு மாலை போட்ட அண்ணாமலை "திருப்பூர் குமரனின் தியாகத்திற்கு பா.ஜ.க.வினர்தான் உரிமை கோர முடியும்' என கூறியிருக்கிறார். மற்றொருபுறம் தீரன் சின்னமலையின் படைப்பிரிவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டவர் பொல்லான். இவர் அருந்ததியினர் சமூக அடையாளமாக முன்னிறுத்தப்பட்டு, மத்திய அமைச்சரான எல்.முருகன் மறைந்த பொல்லான் நினைவு நாளுக்கு நேரில் வந்து பொல்லான் படத்திற்கு மாலை போட்டு, "தியாகி பொல்லானின் உண்மையான அரசியல் வாரிசுகள் பா.ஜ.க.வினரான நாம்தான்' என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மறைந்த தலைவர்களை வைத்து பா.ஜ.க. நடத்தும் அரசியலும் அறிவிப்புக்களும் ஒருபுறம் இருந்தாலும்... நடைமுறையில் அரசு சார்பில் தியாகிகளை போற்றும் வகையில் தீரன் சின்னமலைக்கும், திருப்பூர் குமரனுக்கும், பொல்லானுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் அரசு சார்பில் சிலை, மணிமண்டம், பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது என எல்லா சிறப்பையும் தி.மு.க. அரசு செய்துகொண்டே இருக்கிறது.
---------------------------------------------
தனிப்பெருங்கருணை நாள்!
பக்தி நெறியை சாதி சமயங்களைக் கடந்த அன்புநெறியாகப் போற்றி, பசிப்பிணி தீர்க்கும் அணையா அடுப்பைப் பற்றவைத்த வடலூர் இராமலிங்க வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் நாளை தனிப்பெருங்கருணை நாள் என அரசு சார்பில் கடைப்பிடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். "சென்னையில் வள்ளலாரின் வீடு, அரசு சார்பில் பராமரிக்கப்படும் என்றும், வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் நடைபெறும்' என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.