பெருகிவரும் போலி திருமணங்களால் வாழ்வை இழந்து பரிதவிக்கும் பெண்களின் கண்ணீர்க் கதைகள், மனதைப் பதறவைக்கின்றன. அது குறித்து விவரிக்கிறது இந்த பரிதாப ரிப்போர்ட்.
சம்பவம் 1: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. காலனி உதயம் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 28 வயது இளை ஞர் வின்சன்ட் ராஜ். இவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பெண்களை ஏமாற்றி, போலியாகத் திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து 150 பவுன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறித்துள்ளார். இவருக்கு பிளாரன்ஸ் என்பவர் தாயாகவும் தாமரைச்செல்வி என்பவர் சித்தியாகவும் நடித்து ஏமாற்றியுள்ளனர். தற்போது மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
சம்பவம் 2: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கீழையூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சந்தோஷ். இவர் திருப்பூர் பின்னலாடை கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் சத்யா என்ற பெண்ணைக் காதல் என்ற பெயரில் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார். அதோடு நிறுத்தாமல், அடுத்தடுத்து சசிகலா உள்ளிட்ட சில பெண்களையும் ஏமாற்றித் திருமணம் செய்ததோடு அவர்களிடமிருந்து பலவற்றை யும் பறித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், அவர் கைது செய்யப் பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
சம்பவம் 3: திருச்சியில் உள்ள ஜெயில் கார்னர் பகுதி யைச் சேர்ந்த கார்த்திக். இவர் உத்தமபாளையத்தைச் சேர்ந்த 21 வயது சுமதியை காதல் என்ற பெயரில் ஏமாற்றித் திருமணம் செய்ததோடு, திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா மற்றும் சென்னையைச் சேர்ந்த வாணி, நீலா ஆகிய 4 பெண்களையும் உபரியாகத் திருமணம் செய்து ஏமாற்ற, அவரும் கம்பி எண்ணுகிறார்.
சம்பவம் 4: மைசூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் இணையதளம் மூலம் தனக்குப் பெண் தேவை என்று திருமண விளம்பரம் செய்து, பலரையும் தொடர்புகொண்டார். முதலில் பெங்களூர் மடிகிரி பகுதியைச் சேர்ந்த சவீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பிறகு காயத்திரியை இரண்டாவதாகவும், மூன்றாவதாக பொறி யியல் படித்த லலிதாவையும், நாலாவதாக ஆஷாவையும் வளைக்க, கணேஷ் இப்போது கம்பி எண்ணுகிறார்.
சம்பவம் 5: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பூவழகி. இவர் கடந்த 24-ந் தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராவை சந்தித்து புகாருடன் கண்ணீர் வடித்தார். அந்த புகாரில் ....
"பென்னங்கோணத்தைச் சேர்ந்த பால்ராஜுக்கும் எனக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது. நகைகளு டன் சீர் வரிசைகளையும் எங்கள் வீட்டில் செய்தனர். நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக இரண்டு மாதம் மட்டுமே குடும்பம் நடத்தினோம். ஒருநாள் எனது கணவரின் செல்போனில், அவர் பல பெண்களுடன் இருந்த போட்டோக்களைப் பார்த்து அதிர்ந்தேன். இதுபற்றிக் கேட்ட போது, "நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டேன். இதை வெளியே சொல்லக்கூடாது' என்று மிரட்டியவர், "நீ என்னுடன் குடும்பம் நடத்த வேண்டுமானால் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் 10 பவுன் நகையும் உன் தாய் தந்தையிடம் சென்று வாங்கி வா' என்று வற்புறுத்தி, என்னை என் பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார். இந்த நிலையில் காரைக்குடி மகளிர் போலீசார், என் கணவரைத் தேடி எங்கள் வீட்டுக்கு வந்தனர். என் கணவர் பால்ராஜ், ஏற்கனவே காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பதினெட்டு வயதுகூட நிரம்பாத பிரியதர்ஷினியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தனியாக குடும்பம் நடத்திய தாகக் கூறி அதிரவைத்தனர். இந்நிலையில் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதிபா என்ற பெண் எனக்கு போன் செய்து, பால்ராஜ் தன்னை யும் திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு 8 மாத குழந்தை உள்ளது என்றும் கூறினார். அதனால் இனியும் மோசடிக்கார பால்ராஜை விட்டுவைக்கக்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். -இப்படி பல்வேறு திருமண மோசடித் தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன.
இப்படிப்பட்ட மோசடி ஆசாமிகளிடம் பெண்கள் எளிதாக ஏமாறுவது எப்படி என்று, நெய்வேலி சமூக செயற்பாட்டாளர் செல்வத்திடம் நாம் கேட்டோம். "வயதுக் கோளாறு காரணமாக பல இளம்பெண்கள் ஆண்களிடம் காதல் என்ற பெயரில் ஏமாந்து வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். இதற்கு முக்கியக் கார ணங்களில் ஒன்று நவீன தொழில்நுட் பம் அடங்கிய செல்போன். சொகு சான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கி ஏமாந்து போகிறார்கள். அதிலும் பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை எப்படியாவது திருமணம் செய்து கொடுத்து அனுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, ஆழ்ந்து ஆராய்வதில்லை. ஒரு காலத் தில் மாப்பிள்ளையைப் பற்றி சொந் தக்காரர்கள் வரை ஆராய்வார்கள். இப்போது போனிலேயே விசாரணை யை முடித்துவிடுகிறார்கள். அதனால் வருகிற விளைவுதான் எல்லாமும்'' என்கிறார் ஆதங்கத்தோடு.
தஞ்சையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரகாஷோ, "மனைவி உயிருடன் இருக்கும்போது அவருக் குத் தெரியாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்வது இந்து திருமண சட்டப்படி தவறு. இதற்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக் கும். அடுத்து, பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள் பவர்கள் சீட்டிங் மோசடி வழக்கில் வருகிறார்கள். இரண்டையும் சேர்த்து சுமார் பத்தாண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 494, 495, ஆகிய சட்டப் பிரிவுகள் தண்டனை பெற்றுக்கொடுக்கப் பெரிதும் உதவுகின்றன. திருமண மோசடி வழக்குகளை விரைந்து விசாரித்து, தண்டனையும் விரைவில் வழங்கப்பட வேண்டும். அதோடு, குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் சேர்ந்து விதிக்கப்படவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்''’என்கிறார் அழுத்தமாக.
காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது ’"இதுபோன்ற குற்றவாளி களுக்கு விரைவில் ஜாமீனில் வரக்கூடிய செக்சன்களும் உள்ளன. ஜாமீனில் வரமுடியாத செக்சன்களும் உள்ளன. அதனால் காவல் துறையினர், ஏமாற்றுவோருக்குத் துணைபுரியாமல், கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும். உயர்அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் தலையீடுகளை எல்லாம் கடந்துதான் எங்களைப் போன்றவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை இருக்கிறது. பெண்களுக்கு எதிராகக் குற்றம் இழைக்கும் மனிதர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே''’என்கிறார் உறுதியான குரலில்.
புள்ளி விபரங்களின்படி பார்த்தால், பெண்களைச் சீரழிக்கும் மோசடி மன்னர்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது தெரிகிறது. அவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் செய்வது அவசியம். அதேபோல் பெண்களும், காதல் என்ற பெயரில் மோசடி ஆண்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, விழிப்புணர்வையும் போதிக்க வேண்டும். பாலியல் சுகத்துக்காகவும் பணத்துக்காகவும் திருமணம் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை விரைவாக கிடைத்தால் மட்டுமே அப்படிப்பட்டவர்கள் பயந்து திருந்துவார்கள்''’என்கிறார் மகளிர் சமூக சீர்திருத்த அமைப்பைச் சேர்ந்த மகேஸ்வரி.
பொய்யான காதலை வலையாக்கி, பெண்களை வீழ்த்தும் போலியான கல்யாண ராமன்களை கடுமையாகத் தண்டிக்காதவரை, இதுபோன்ற பெண்களின் கண்ணீர்க் கதைகள், தொடர்கதைகளாகத்தான் இருக்கும்.