உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரை தர்ம ஷன்சாத் என்ற பெயரில் நடந்த இந்து மத மாநாட்டில், சாமியார்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் வன்முறைப் பேச்சுக்கள் பேசிய விவகாரம் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.
இந்துத்துவ தீவிரப் போக்காளராக அறியப்படும் யதி நரசிங்கானந்த் கிரி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். ஆத்திரமூட்டும் வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதற்காக இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த மாநாட்டில் பேசிய நரசிங்கானந்த், "இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு கோடி இந்து இளைஞர்கள் பிரபாகரனைப் போலவோ, பிந்த்ரன்வாலேயைப் போலவோ மாறவேண்டும். அப்படி யாராவது மாறி இந்துக்களுக்காகப் போராட ஆயத்தமானால் அவர் களுக்கு நான் 1 கோடி தரத் தயாராக இருக்கிறேன்' என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்த வாஸிம் ரிஸ்வி சமீபத்தில் இந்து மதத்துக்கு மாறி ஜிதேந்திர நாராயண் தியாகி என பெயர் மாற்றிக்கொண்டார். மாநாட்டில் தனது இந்துமதப் பிடிப்பைக் காட்டிக்கொள்ள, இவர் மிகவும் தீவிரமான வெறுப்புப் பேச்சைப் பேசினார். அன்னபூர்ணா என்னும் பெண் சாமியாரோ “"முஸ்லிம்களது மக்கள் தொகை அதிகரிப்பதைத் தடுக்க விரும்பினால் நாம் அவர்களைக் கொல்லத் தயாராகவேண்டும். நம்மில் 100 பேர் அவர்கள் 20 லட்சம் பேரைக் கொல்லத் தயாரானால்கூட, நாம் வெற்றிபெற்றவர்களாவோம்' என்றார். விஷயம் சர்ச்சையானபின்பும், போலீஸ் நடவடிக்கை குறித்து கவலையில்லை என்றிருக்கிறார் அவர்.
தரம்தாஸ் மகாராஜ் என்னும் சாமியார், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2006-ல் பாராளுமன்றத்தில், நாட்டின் வள ஆதாரத்தில் சிறுபான்மையினருக்கு முதல் உரிமையளிக்க வேண்டும் என பேசியதற்காகவும், அவரது சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டுக்காகவும், “நாதுராம் கோட்சே வழியைப் பின்பற்றி” மன்மோகன்சிங்கை கொலை செய்வதற்கு அழைப்புவிடுத்தார்.
உத்தரப்பிரேதச முதல்வர் யோகியுடன் நெருக்கமானவரான பிரபோதானந்த கிரி, "இந்திய ராணுவமும், அரசியல்வாதிகளும், இந்துக்களும் மியான்மரில் ரோஹிங்கியாக்களிடம் அந்நாட்டு அரசியல்வாதிகளும் ராணுவமும் நடந்து கொண்டதைப்போல், இந்திய முஸ்லிம்களிடம் நடந்துகொள்ளவேண்டும். அவர்களைக் கொன்று குவிக்கவேண்டும்' எனப் பேசியிருக்கிறார்.
இவர்களது வன்முறைப் பேச்சுகள் அடங்கிய வீடியோ நறுக்குகள் சமூக ஊடகங் களில் வேகமாகப் பரவவே நாடெங்கும் கொந் தளிப்பு உருவாகியது. இதேபோல் டெல்லியில் இந்து யுவவாகினியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு வதற்காக, உயிர் கொடுக்கவும் உயிர் எடுக்கவும் தயாராக வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது.
அப்பட்டமான சிறுபான்மைவிரோத, இனஅழிப்புப் பேச்சால் இந்தியாவே அதிர்ந்து போன நிலையில் இந்தப் பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பும் கண்டனங்களும் வலுக்கத் தொடங்கின. சர்வதேச டென்னிஸ் வீராங் கனையான மார்ட்டினா நவரத்திலோவா இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து புகார் எதுவும் வரவில்லையெனச் சொல்லி ஹரித்துவார் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்க, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் தகவலறியும் உரிமைச் சட்டப் போராளியுமான சாகேத் கோகலே புகார் கொடுத்த நிலையில் முதலில் ஜிதேந்திர நாராயண் தியாகி மீது மட்டும், அதுவும் இஸ்லாம் மதத்துக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுகளைப் பேசினார் எனப் பெயரளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின் பல்வேறு தரப்பிலிருந்து நெருக்குதலும் அழுத்தமும் அதிகரித்த நிலையில் டிசம்பர் 23-ஆம் தேதி, ஜிதேந்திர நாராயண் தியாகி, பூஜா ஷகுண் பாண்டே எனும் அன்னபூரணா, தரம்தாஸ் மகாராஜ் பெயர்களும் முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்டன. எனினும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரும் சர்ச்சை பேச்சுகளைப் பேசியவருமான நரசிங்கானந்தின் பெயரை போலீஸ் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை.
இந்நிலையில், டிசம்பர் 26-ஆம் தேதி உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 76 பேர், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஹரித்துவார் விவகாரத்தை தானாகவே முன்வந்து எடுத்து விசாரணை நடத்தவேண்டுமென கடிதம் எழுதியுள்ளனர்.
ஹரித்துவாரைச் சேர்ந்த பல்வேறு மடங்களைச் சேர்ந்த தலைவர்கள், அந்த மாநாட்டில் பேசப்பட்டது பொறுப்பற்ற பேச்சு என்றும், இந்தியாவின் மத, சமூக நல்லிணக் கத்தை சேதாரம் அடையச்செய்வது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தின் கொதிப்பு அடங்குவதற்கு முன் டிசம்பர் 28-ஆம் தேதி, காவல் அதிகாரி ராகேஷ் கத்தாய்த்தை, தர்ம ஷன்சாத் மாநாட்டை நடத்திய சாமியார்கள் சந்தித்துப் பேசும் வீடியோ காணொலி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், பிரபோதானாந்த கிரி, யதி நரசிம்மானந்த், பூஜா ஷகுண் பாண்டே, ஆனந்த் ஸ்வரூப், ஜிதேந்திர நாராயண் ஆகியோர் காணப்படுகின்றனர். அவர்கள் ஹரித்துவார் காவல் நிலையம் சென்று இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய மௌலானாக்கள் செயல்படுவதாக புகார் அளிக்கின்றனர். தனது கையிலிருக்கும் புகார் மனுவை நீட்டி அன்னபூர்ணா, "நீங்கள் பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை என்னும் செய்தியை வெளிப்படுத்துங்கள்'’என்கிறார். மேலும் அவர், "நீங்கள் ஒரு பொதுவான அதிகாரி. நீங்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். அதைத்தான் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்' என்கிறார்.
அதிகாரியின் அருகேயிருக்கும் யதி நரசிம்மானந்தோ, "ஏன் சார்பில்லாமல் இருக்க வேண்டும்? அவர் நமக்கு ஆதரவாக இருப்பார்' என்றுகூற, அங்கிருப்பவர்கள் வெடித்துச் சிரிக்கின்றனர்.
அதிகாரிகளிடமே வந்து எங்களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்று கோரிக்கை வைத்து சிரிக்கும் சாமியார்களது காணொலிக் காட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கடைசி நம்பிக்கையாக உள்ளது நீதிமன்றம் மட்டும்தான். அது இந்த விவகாரத்தில் எப்படி நடந்துகொள்ளப் போகிறது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்திய அரசு அன்னை தெரசாவால் உருவாக்கப்பட்ட மிஷனரிஸ் ஆப் சாரிட்டி தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டி லிருந்து நிதிபெறுவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மறுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இந்தியாவில் வீடற்ற பெண்கள், அநாதைக் குழந்தைகளுக்குப் புகலிடம், பள்ளிகள், மருத்துவமனைகள் எனப் பல்வேறுவிதமான சேவைப் பணிகளை இந்த நிறுவனங்களைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் நிர்வகித்துவருகின்றனர்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்திய உள்துறை அமைச்சகம், இந்த ட்ரஸ்டின் மீது எதிர்மறைக் கருத்துகள் வந்துள்ளதாகக் கூறி அதன் உரிமத்தைப் புதுப்பிக்க மறுப்புத் தெரிவித்தது.
அன்னை தெரசா தொண்டு நிறுவனம் தம் அமைப்பின் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள தோடு, அரசு உரிமத்தை புதுப்பிக்காததை உறுதிசெய்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா, அன்னை தெரசா தொண்டு நிறுவனங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாகவும், அதனால் அதன் உணவு விநியோக, மருந்துப் பொருள் வாங்கும் பணிகள் தடைப்பட்டுள்ள தாகவும் ட்வீட் செய்து மத்திய அரசை விமர்சித்திருந்தார். ஆனால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித் துள்ளது.
காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான ப.சிதம்பரம், "முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக இந்துத்துவா படை கிறித்துவர்களைக் குறி வைத்துள்ளது. மிஷனரிஸ் ஆப் சாரிட்டி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகளை பிரதான ஊடகங்கள் மறைத்துவிட்டது, வேதனைக்குரியது. வெட்கப்பட வேண்டியது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதிகளே மதமாற்றத்துக்கு துணைசெய்வதாக இந்துத்துவ அமைப்புகள் கருதுகின்றன. எனவே மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்துத்துவ அமைப்புகளின் செல்வாக்கால், அந்நிய நாட்டு நிதிகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் மோடி அரசுமீது கடும் விமர்சனங்களை முன்வைத்த கிரீன்பீஸ், அம்னெஸ்டி இன்டர்நேஷ னல் போன்ற சுற்றுச்சூழல், தன்னார்வ அமைப்பு களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்துத்துவ அரசியலின் மீது சர்வதேச அமைப்புகள் வைக்கும் விமர்சனங்களை முடக்கவும், இங்கு நடக்கும் அத்துமீறல்களுக்கு அவர்கள் சாட்சியாய் அமைந்துவிடாமல் அப்புறப்படுத்தவுமே இத்தகைய அந்நிய நாட்டு நிதிகளைப் பெறுவதில் கெடுபிடி கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
சமீபகாலமாக இந்தியாவில் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துவருகின்றன. கர்நாடகாவில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தபிறகு இத்தகைய 40 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக எவான்சலிக்கல் பெல்லோஷிப் ஆப் இந்தியா அமைப்பு புகார் செய்துள்ளது. இவ்வாண்டு இந்தியா முழுவதும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இடையூறு செய்யப் பட்டுள்ளன. ஹரியானாவிலும், கர்நாடகா விலும் கிறிஸ்துமஸின்போது கிறித்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இகுறித்து பா.ஜ.க. அரசு மௌனமாக இருப்பது சர்வதேச அளவில் விமர் சனத்தைக் கிளப்பியுள்ளது.
சிறுபான்மையினர் சமீபகாலமாக தொடர்ந்து குறிவைக்கப்படுவது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் வெற்றிக்காகவா அல்லது இந்துவத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்காகவா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.