சிரியர் வேலையும் அரசியல் மேடையும்!

என் கல்லூரித்தோழர் பக்கிள் மூலம்... நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தூரில், காந்திமதி உயர் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக வேலையில் சேர்ந்தேன்.

நான் பெரியாரிஸ்ட்டாக இருப்பினும், அறிஞர் அண்ணாமீது மிகுந்த அபிமானம் கொண்டவன். தந்தை பெரியாருடன் கருத்துவேறுபாடு உண்டாகி, திராவிடர் கழகத்திலிருந்து, பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கியபோது... நானும் தீவிர தி.மு.க.காரனாக ஆனேன். சூலூரில் மாணவர் தி.மு.க.’ அமைப்பை நடத்தினேன்.

நான் ஆசிரியராக ஆகி... ஆத்தூரில் பணியில் சேர்ந்தாலும்... அரசியல்பணியை விடவில்லை.

Advertisment

uu

நெல்லை மாவட்ட இலக்கிய கூட்டங்களில்... "ஆத்தூர் தமிழய்யா' என்ற பெயரில் கலந்துகொண்டு பேசுவதை வழக்கமாகக் கொண்டேன். என் பேச்சுக்கு கிடைத்த வரவேற்பாலும், நான் தி.மு.க.காரன் என்பதாலும்... மாவட்ட தி.மு.க.வினர் என்னை அரசியல் கூட்டங்களுக்கு பேச அழைத்தனர்.

இலக்கிய கூட்டங்களுக்கு "ஆத்தூர் தமிழய்யா'’என பெயர் வைத்துக்கொண்டதுபோல... அரசியல் கூட்டங்களுக்கு "கோவை குமணன்' என்கிற பெயரை வைத்துக்கொண்டேன்.

Advertisment

அப்போதைய திருச்செந்தூர் தி.மு.க. வட்ட செயலாளர் கண்ணபிரான் என்னை முதன்முதலாக அரசியல் மேடையில் பேச அழைத்தார்.

“அரசியல் கூட்டங்களுக்கு பேசப்போனால்... வாத்தியார் வேலை போய்விடும்’என என்மேல் அக்கறையுடன் சிலர் சொன்னார்கள். ஆனாலும்... "வேலை போனாலும் கவலை இல்லை' என்கிற மனோபாவத்தில் பொதுக்கூட்டத்திற்கு பேசக் கிளம்பினேன்.

gg

குலசேகரன்பட்டணத்தில் அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் பேசியதுதான் எனது முதல் அரசியல் மேடைப்பேச்சு.

எனது பேச்சு பொதுமக்களுக்கும்... கட்சியினர் எல்லோருக்கும் பிடித்துப்போனதால் தொடர்ந்து மேடையில் பேச என்னை அழைத்தனர். திசையன்விளை, அழகியமணவாளபுரம், தட்டார்மடம் என பல ஊர்களிலும் அரசியல் மற்றும் இலக்கியக் கூட்டங்களில் பேசினேன்.

மணப்பாடு கடலோர கிராமம்... அருமையான ஊர். அந்த ஊரின் மீன் வருவலும், ரொட்டியும் மிக விரும்பிச் சாப்பிடுவேன். ஊர் மக்கள் என்மீது பிரியமாக இருந்தார்கள். அவர்களுக்கு... தி.க. மற்றும் தி.மு.க. வரலாறை எளிமையாக புரியும்படி சொல்லித்தந்தேன்.

தட்டார்மடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றேன். அந்த ஊரில் காமராஜரை விமர்சித்துப் பேசினால்... கலவரம் வரும்... பேச்சாளரின் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். இருந்தாலும்... மாற்றுக் கட்சி தலைவரை விமர்சித்து பேசித்தானே ஆகவேண்டும். இந்த கூட்டத்துக்கு அந்தப்பகுதி பிரபலம், அரவான் தலைமை தாங்கினார். அரவான் எப்போதும் வேஷ்டியும், மேல் துண்டும் மட்டுமே அணிந்திருப்பார். "காமராஜரை விமர்சிக்காமல் இருக்கமுடியாது. காமராஜரை விமர்சித்தால் பேச்சாளரை ஒருவழி பண்ணிவிடுவார்கள் காமராஜரின் அபிமானிகள்...'’என கணக்குப்போட்டு... "என்னை யாராவது தாக்க வந்தால்... அவர்களை தற்காப்புக்காக சுட்டுவிடும் நோக்கத்தோடு...' துப்பாக்கியை கொண்டுவந்திருந்தார்.

நான் காமராஜரை விமர்சனம் செய்து பேசினேன். அரவான் மேடையில் இருந்ததால்..... பிரச்சினை நடக்கவில்லை.

நெல்லை-தூத்துக்குடியை உள்ளடக்கிய அன்றைய நெல்லை மாவட்டத்தின் பரபரப்பான தி.மு.க. பேச்சாளராக பிரபலமாகியிருந்தேன்.

ருநாள்... என் பெயருக்கு... பள்ளிக்கூட முகவரியில் ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது.

"டேய்... வாத்திப்பயலே... கே.வி.கே.சாமி கதை என்ன?னு தெரியும்ல... ஜாக்கிரதை' என என்னை மிரட்டியிருந்தார்கள்.

தூத்துக்குடி சாமி எனப்பட்ட கே.வி.கே.சாமி தீவிரமான தி.மு.க. செயல்வீரர்... பிரமுகர். மிகவும் பிரபலமாக இருந்த சாமி... அரசியல் மனமாச்சரி யங்களால் 1956-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தமிழகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்தச் சாமி கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தித்தான் எனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

ஆனால் நான் அசரவில்லை.

ஆறுமுகநேரியில் ஒரு திருமண விழா அழைப்பிதழில் வாழ்த்துரையில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான சி.பி.சிற்றரசு... "கோவை குமணன்னா..... நம்ம பேராண்டி தானே...' என என்னைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும்போதே.... நான் விழா இடத்திற்குள் நுழைந்தேன்.

""வாய்யா... டி.கே.சீனிவாசன் மாதிரி ஊருக்கு ஒரு பேரா உனக்கு? உன் மேல நடவடிக்கை எடுக்கப்போறாங்க பாரு...''’’ என சிற்றரசு சொன்னார்.

அவர் சொன்னமாதிரியே அடுத்த ஓரிரு நாட்களில் உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் நான் தங்கியிருந்த அறைக்கு வந்தார். “"ஆசிரியர் வேலை பார்த்துக்கிட்டு... அரசியல்கூட்டங்கள்ல பேசுறீங்களே...?'’என விசாரித்தார். "ஏன்.... காங்கிரஸ்ல வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டு அரசியல் பேசுறவங்க இல்லையா?' என நான் கேட்டதும்... விருட்டென எழுந்து போய் விட்டார்.

அடுத்தநாள்.... பள்ளி நிர்வாகம் என்னை அழைத்து விசாரித்தது.

""உங்களுக்கு தர்மசங்கடம்னா... நான் விலகிக்கிறேன்... வேலைலருந்து''’ எனச் சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு அறைக்குத் திரும்பினேன். வேலை இல்லாததால் எனது சொந்த ஊரான கோவை மாவட்டம் திரும்ப முடிவுசெய்தேன்.

நான் தங்கியிருந்தது ஆத்தூர் ஒன்பதாம் சந்தி திடலின் அருகே ஒரு மாடி அறையில். நெல்லை மாவட்டம் முழுக்க இலக்கிய வாதியாகவும், அரசியல் பேச்சாளராகவும் பிரபலமான எனது நெல்லை மாவட்ட கடைசி அரசியல்கூட்டம் ஒன்பதாம் சந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மிரட்டல் கடிதம் போட்டவர்களால் என் உயிருக்கு ஆபத்து நேரவிருந்தால்.... அதை தடுக்கும்பொருட்டு.... ஒரு பெரிய அரிவாளுடன் சட்டிபானை கடை ஒன்றில் அமர்ந்துகொண்டார் உள்ளூர் பிரபலமான அருணாசலக்கோன். அந்தக் கடையில் இருந்து பார்த்தால் என் அறைக்கு யார் வருகிறார்கள்... போகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரியும் என்பதால் அங்கிருந்து காவல் காத்தார்.

மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில்... அந்த மிரட்டல் கடிதத்தை எடுத்து படித்தேன்.

"மொட்டை கடிதம் போட்டு மிரட்டு பவர்களே... எந்த உடங்காட்டுலயும் உங்களை நான் சந்திக்கத் தயார். நீ முந்திக்கிட்டா... நான் போய்ச் சேர்றேன். நான் முந்திக்கிட்டா நீ போய்ச் சேரு' என எச்சரிக்கைவிட்டு... ஆவேசமாகப் பேசினேன்.

கடைசி மீட்டிங் முடிந்து கோவை கிளம்பிய என்னை... பிரிவுத் துயரால் அழுதபடி வழியனுப்பி வைத்தார்கள்.

கோவை வந்தபின்.... வெரைட்டிஹால் சாலையில்... சிட்டி முசினிபல் ஹை ஸ்கூலில் வேலை கிடைத்தது.

ஒருநாள் வேலை முடிந்து... வீட்டுக்குத் திரும்புவதற்கு பஸ் ஏறுவதற்காக யூ.எம்.எஸ். பஸ்நிலையத்திற்குள் போக ரோட்டைக் கடந்த போது... ஒரு கார் புழுதிபறக்க... குறுக்கே வந்து நின்றது.

காருக்குள்ளிருந்து இறங்கிய என் நண்பர் பழனிச்சாமி... ""வாங்க புலவரே... ஒரு முக்கிய வேலையா ஊட்டிவரைக்கும் போய்ட்டு வருவோம்'' என கைப்பிடித்து வற்புறுத்த... நானும் காரில் ஏறிக்கொண்டேன்.

சோகன் ஹீரோவாக நடித்த "இது சத்தியம்'’படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துகொண்டிருந்தது. பிரபலமான டைரக்டரான கே.சங்கர் இயக்கிக்கொண்டிருந்தார்.

என்னை சங்கரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் பழனிச்சாமி.

கோவையில் பிரபலமான தொழிற்சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த என்.ஜி.ஆர். அவர்களுக்கு நிதி திரட்ட ஒண்டிப்புதூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த... அதில் அசோகன், சங்கர் உள்ளிட்டவர்களை கலந்துகொள்ளச் செய்வதற்காகவும் அழைக்கத்தான் இந்த சந்திப்பு.

ஆனால்... சங்கருடனான இந்தச் சந்திப்பு என் வாழ்க்கையை இரு வேறுவிதமாக புரட்டிப் போட்டதை...

(சொல்கிறேன்)