2
நான் யார்? என் கதை என்ன?
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் என்னுடைய ஊர். என்னுடைய இயற்பெயர் ராமசாமி.
எங்கள் குடும்பம் ஏழ்மையானதுதான். என் பெற்றோர் கருப்பணத் தேவரும், தெய்வானையம்மாளும்... சுற்றுப்பகுதி ஊர்களில் நடக்கும் சந்தைகளில் பொரி- கடலை வியாபரம் செய்து... அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் நடத்திவந்தார்கள்.
சூலூரில் பெரும்பாலும் தந்தை பெரியாரின் கொள்கை மீது பிடிப்புகொண்டு... கருப்புச் சட்டை அணிந்தவர்களாக இருந்தார்கள். 1948-ஆம் ஆண்டு வாக்கில்.... எனக்கு 13 வயதிருக்கும்போது... எனக்குள்ளும் தாக்கத்தை உண்டாக்கினார் தந்தை பெரியார். கருப்புச் சட்டை என்னை ஈர்த்தது.
என் அப்பாவிடம்... "எனக்கும் கருப்புச் சட்டை வேணும்' எனக் கேட்டேன். ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் கருப்புச் சட்டை வாங்கித்தந்தார். அதை அணிந்து கொண்டபோது... பெருமிதமாக இருந்தது.
நான் பின்னாளில் வெள்ளுடுப்புக்கு மாறினாலும்கூட... 13 வயதில் பெரியாரிஸ்ட்டாக மாறிய நான்... இதோ... இன்றளவும் அந்தக் கொள்கையில் மாறாத... பெரியாரிஸ்ட்டாகவே இருக்கிறேன்.
சூலூரில்தான் என் பள்ளிப்படிப்பு. பள்ளபாளையத்திலிருந்து சூலூருக்கு காட்டு வழியில் போனால் மூன்று கல் தொலைவு. தினமும் நடந்தே போய்வருவேன். 1952-ஆம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பான எஸ்.எஸ்.எல்.சி... அதாவது அப்போது "பெரிய பத்து' எனச் சொல்லப்படும் பத்தாம் வகுப்பு முடித்தேன்.
பள்ளியில் படிக்கிற போதே... எனக்கு தமிழில் நல்ல புலமை, இலக்கிய பரிச்சயம் உண்டானது. எங்கள் தமிழாசிரியர் கு.சு.அரங்க சாமியிடம் பள்ளியின் இந்தி பண்டிட் ஒருமுறை... "ராமசாமி பயலுக்கு பைத்தியம் பிடிச்சுப்போச்சு...'’எனச் சொல்ல... "ஆமாம்... அவன் புலமைப் பைத்தியம்' என பதில் சொன்னார்.
அந்தளவு தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட எனக்கு... தொடர்ந்து கல்லூரியில் படிக்க ஆர்வம் இருந்தது. ஆனால்... குடும்பச் சூழல் காரணமாக வேலை தேட துவங்கினேன். தினமும் வீட்டிலிருந்து கிளம்பி... வேலை தேடி சிங்காநல்லூர்வரை நடந்தே போய் வருவேன்.
என் தாய்மாமா சுதந்திரப் போராட்ட தியாகி... காங்கிரஸ்காரர்... ஊரின் முக்கியப் புள்ளி. அவர் நினைத்தால் எனக்கு வேலை வாங்கித்தந்திருக்க முடியும். ஆனால்... எனது கருப்புச் சட்டை... அந்த கதர் சட்டைக்குப் பிடிக்காததால்... எனக்கு வேலை வாங்கித்தர மறுத்து விட்டார்.
ஒருநாள்... வேலை தேடி அலைந்து... ஒண்டிப்புதூர் கம்போடியா பஞ்சாலை வழியாக வந்துகொண்டி ருந்தபோது... ஆலை வாசலில் கூட்டமாக இருந்தது. விசாரித்தேன். "பஞ்சாலை வேலைக்கு ஆள் எடுக்குறாங்க...'’என்றார்கள். நானும் வரிசையில் நின்றேன். வேலை கிடைத்தது.
நூற்பாலையில் சிதறி விழும் பஞ்சுகளை பொறுக்கி எடுக்கும் துப்புரவு பணியாளாக அந்த நிமிஷமே வேலையில் சேரச் சொன் னார்கள். நானும் ஆலைத் தொழிலாளியாக வேலையைத் தொடங்கினேன்.
வேலை முடிந்து... என் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு பெண்ணின் ஒப்பாரி போன்ற அழுகுரல் கேட்டது. நான் முன் னோக்கி நடக்க நடக்க.... அது என் தாயாரின் குரல் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
வீட்டு வாசலில் உட்கார்ந்து என் அம்மா அழுது கொண்டிருக்க... ""ஏம்மா அழுற?'' எனக் கேட்டேன்.
""நீ... இவ்வ ளவு படிச்சிட்டு.... பஞ்சு மில்லுல கூட்டிப் பெருக்குற வேலை பார்க்கி றியே...'' என வேதனைப் பட்டார் அம்மா.
""நேர்மையா செய்ற எந்த வேலையும்... நல்ல வேலைதான்'' என அம்மாவை சமாதானப் படுத்தினேன். அம்மா மனசு சமாதானமடைய வில்லை. ஆனால் எனக்காக... சமா தானமானதுபோல நடந்துகொண்டார்.
என்னுடன் பள்ளியில் படித்த முருகேசன் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து வந்தார். அவரைப் பார்க்கிற போதெல்லாம் எனக்கு... "நாமளும் கல்லூரியில சேர்ந்து படிக்கலாமே?' என்கிற நினைப்பு தோன்றும். அந்த விருப்பத்தை மேலும் மேலும் பெரிதாக்கியது... எனக்குள் இருந்த தமிழ் ஆர்வம்.
நான் படிப்பைத் தொடர வேண்டுமானால்... இரண்டு வழிதான். ஒன்று... வேலையை விடுவது. இன்னொன்று... ஆலை மேலாளரின் அனுமதி. என் குடும்பச் சூழ்நிலையில் வேலையை விடுவது இயலாது. ஆலை மேலாளரின் அனுமதியைப் பெறுவதில் ஒரு சிக்கல். இருந்தாலும் மேலாளரை பார்த்து விடவேண்டும்... என முடிவெடுத்து... ஆலைக்குள்... மேலாளரின் அறையை நோக்கிச் சென்றேன். என்னைப் பார்த்ததும்... நான் அவரை தாக்க வருவதாக நினைத்து.... என்னைத் தாக்குவதற்கு அவரும் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
அவர் அப்படி நினைத்ததற்கு காரணமில்லாமல் இல்லை.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு... ஒரு பிரச்சினையில்... ஆலையின் தொழிற்சங்க தலைவர் குமாரசாமியை "நான்சென்ஸ்' எனத் திட்டிவிட்டார் மேனேஜர். இதனால் ஆத்திரமான நான்... "நீதான் நான்சென்ஸ்...'’’எனச் சொல்லி... மேனே ஜரை அடிக்கப் பாய்ந்தேன். சக தொழிலாளர்கள் என்னைத் தடுத்துவிட்டனர்.
அந்த சம்பவத்தின் தொடர்ச்சி நிகழப்போவதாக நினைத்துத்தான்... அவர் என்னை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.
நான் கைகூப்பி வணக்கம் தெரிவித்ததும்... மேனேஜர் விழிகளில் வியப்பு. உள்ளே அழைத்தார்.
""சார்... நான் கல்லூரியில் சேர்ந்து படிக்கணும்னு விரும்புறேன். அதே சமயம்.... என்னால வேலையையும் விடமுடியாது.... அதனால...''
""அதனால...''
""நான் பகல்ல கல்லூரிக்கு போய்ட்டு... நைட் ஒரு மணி ஷிப்ட்டுக்கு வேலைக்கு வந்திடுறேன். அதனால்... தொடர்ந்து எனக்கு... நைட் ஒரு மணி ஷிப்ட்டாவே கொடுக்கணும்...'' என்றேன்.
""படிக்க விரும்புறதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். தினமும் உனக்கு நைட் ஷிட்ப் ஒதுக்கித் தர்றேன்'' என்றார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்.
நான் போன நேரம்... கல்லூரியில் சேர விண்ணப்பம்போட கடைசி நாள். விண்ணப்பம் வாங்கி நிரப்பினேன். பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்து விண்ணப்பத்தில் இருக்க வேண்டும். இனிமேல் ஊருக்குப் போய்... கையெழுத்து வாங்கிவந்து கல்லூரியில் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால்... என் அண்ணன் திருப்பதியின் கையெழுத்தை நானே போட்டு... விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.
கல்லூரியில் தமிழ்ப்புலவர் எனும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பில் நான் விரும்பியது போலவே இடம் கிடைத்தது.
சைக்கிள் ஒன்றை வாங்கினேன்.
பள்ளபாளையத்திலிருந்து பேரூர் கல்லூரிக்கு சைக்கிளில் ஓடிவிட்டு... மாலையில் வீடு திரும்பி... மீண்டும் சைக்கிளில் ஒண்டிப்புதூர் மில்லுக்கு வேலைக்குப் போவேன்.
1961-ஆம் ஆண்டு... தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றேன். புலவரானாலும் ஆலைத் தொழி லாளியாக வேலை தொடர்ந்தது.
என்னுடைய கல்லூரித் தோழரான பக்கிள் என்னைச் சந்தித்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தூரில் உள்ள காந்திமதி உயர் தொடக் கப்பள்ளியில் தமிழாசிரியர் பணி இருப்பதாகச் சொல்லி என்னை அழைத்துச் சென்றார்.
-அங்கு நான் சந்தித்த அரசியல் பிரச்சினைகள்...
-எம்.ஜி.ஆர்.- சிவாஜியை ஒரே நேரத்தில் இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் கே.சங்கரை சந்ததித்த அனுபவம்....
(சொல்கிறேன்)